வெளியிடப்பட்ட நேரம்: 16:10 (14/06/2018)

கடைசி தொடர்பு:16:10 (14/06/2018)

`எங்களுக்கு துப்பாக்கி லைசென்ஸ் வேண்டும்’ - விண்ணப்பிக்கும் கேரளப் பெண்கள்

கேரளாவில் துப்பாக்கி வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை 8,191 ஆக இருக்கும் நிலையில், சமீப காலமாக லைசென்ஸ் கேட்டு விண்ணப்பிக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகக் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

கேரளாவில் துப்பாக்கி வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை 8,191 ஆக இருக்கும் நிலையில், சமீப காலமாக லைசென்ஸ் கேட்டு விண்ணப்பிக்கும் கேரளப் பெண்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

துப்பாக்கி

இந்திய ஆயுதச் சட்டம் 1959-ன் படி, காவல்துறை, வருவாய்த்துறை, வனத்துறை ஆகிய துறையினரிடம் தடையில்லா சான்று பெற்ற பின்னரே துப்பாக்கி வைத்துக்கொள்ள லைசென்ஸ் பெற முடியும். இந்த நிலையில், கேரளாவில் ஆண்டுதோறும் துப்பாக்கி கேட்டு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கேரள காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். எதிரிகளால் ஆபத்து அல்லது வன விலங்குகளிடமிருந்து பாதுகாப்பு பெறுவதற்காக கேரளாவில் துப்பாக்கி வைத்துக்கொள்வதற்கான அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. 

கடந்த 2015-ம் ஆண்டு நிலவரப்படி, கேரளா முழுவதும் 8,191 பேர் துப்பாக்கி வைத்திருப்பதாக தகவல் அறியும் சட்டத்தின் மூலம் கிடைத்த தகவலில் தெரிய வந்திருக்கிறது. முதல்வர் பினராயி விஜயன், முன்னாள் அமைச்சரான ஷிபு பாபிஜான் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களிடம் துப்பாக்கி வைத்துக்கொள்ளும் அனுமதி இருக்கிறது. அதனால் பெரும்பாலான அரசியல்வாதிகளும் கைத்துப்பாக்கி வைத்திருக்கிறார்கள். 

அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை அனைவருமே சாதாரண ரக துப்பாக்கிகளை மட்டுமே வைத்துள்ள நிலையில், அவ்வப்போது துப்பாக்கியைக் காட்டி பொதுமக்களை மிரட்டியதாக சர்ச்சையில் சிக்கிக்கொள்பவரான பூஞ்சார் தொகுதி எம்.எல்.ஏ-வான பி.சி.ஜார்ஜ் மட்டும் அதிநவீன கைத்துப்பாக்கியை வைத்திருக்கிறார். முதல்வர் பினராயி விஜயன் சுய பாதுகாப்புக்காக கைத்துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி கொடுக்கப்பட்டதாக கண்ணூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தெரிவித்திருக்கிறது.     

கேரளா முழுவதும் 8000-க்கும் அதிகமான துப்பாக்கி லைசென்ஸ் வழங்கப்பட்டுள்ள நிலையில், அதிகபட்சமாக எர்ணாகுளம் மாவட்டத்தில் 1,633 லைசென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. கொல்லம் மாவட்டத்தில் 1,603 லைசென்ஸ் வழங்கப்பட்டிருக்கிறது. தற்போது துப்பாக்கி லைசென்ஸ் கேட்டு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது தெரிய வந்திருக்கிறது. கடந்த ஆண்டு நிலவரப்படி, 6,357 பேர் துப்பாக்கிக்கான அனுமதி கோரி விண்ணப்பித்து அவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனையில் இருக்கின்றன. 

கேரளாவில் துப்பாக்கி வைத்திருப்பவர்களில் பெண்களும் இருக்கிறார்கள். தற்போது பாலக்காடு மாவட்டத்தில் 15 பெண்களும் கொல்லம், கண்ணூர், திருவனந்தபுரம் மாவட்டங்களில் தலா 3 பெண்களும் பத்தனம்திட்டா மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களில் தலா 4 பெண்களும் சுய பாதுகப்புக்காக கைத்துப்பாக்கி வைத்துள்ளனர்.  

இது தவிர, கேரளாவில் ஆண்டுதோறும் துப்பாக்கி லைசென்ஸ் கேட்டு விண்ணப்பிக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக வருவாய்த்துறையினர் தெரிவிக்கின்றனர். அந்த விண்ணப்பங்கள் பரிசீலனையில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பெண்களிடம் இருந்து துப்பாக்கிக்கான லைசென்ஸ் கேட்டு விண்ணப்பங்கள் அதிகரித்து வருவது சமூக ஆர்வலர்களை கவலை அடைய வைத்திருக்கிறது.