வெளியிடப்பட்ட நேரம்: 14:52 (14/06/2018)

கடைசி தொடர்பு:16:33 (14/06/2018)

`ஜெயா டிவி அதிகாரத்தை இவரிடம் கொடுங்கள்!’ - விவேக்கை ஓரம்கட்டும் தினகரனின் அரசியல்

`ஜெயா டிவி-யின் பவரை விவேக் ஜெயராமன் பெயருக்கு சசிகலா மாற்றிவிடக் கூடாது’ என்பதில் உறுதியாக இருக்கிறார் தினகரன்.

விவேக் ஜெயராமன்

ஜெயா டிவி-யின் ஒளிபரப்பை நிறுத்துவது தொடர்பான மத்திய அரசின் அறிவிப்பு, சசிகலாவை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. `சசிகலாவைப் பழிவாங்க வேண்டும் என நினைத்திருந்தால், முன்னரே இப்படியொரு நோட்டீஸை அனுப்பியிருக்கலாம். இப்போது அனுப்புவதன் பின்னணியில் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளனர்' என்கின்றனர் ஜெயா டிவி வட்டாரத்தில். 

மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகத்திலிருந்து கடந்த மாதம் வந்த கடிதம் ஒன்று, ஜெயா டிவி நிர்வாகத்தைப் பதற வைத்தது. அந்தக் கடிதத்தில், `உங்கள் சேனல்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் பாதுகாப்பு அனுமதி தருவதற்கு மறுத்துவிட்டது. எனவே, தகவல் ஒளிபரப்புத்துறையிடம் இருக்கும் சேனல்கள் பட்டியலிலிருந்து உங்கள் சேனல்களை நீக்கிவிட்டோம். ஒளிபரப்பை உடனே நிறுத்துங்கள்' எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதுகுறித்து விசாரித்தபோது, `ஜெயா டிவி, ஜெயா ப்ளஸ், ஜெயா மேக்ஸ் உட்பட நான்கு சேனல்களின் 80 சதவிகித பங்குகளை சசிகலா வைத்திருக்கிறார். இந்தச் சேனல்களின் உரிமத்தைப் புதுப்பிப்பது தொடர்பாக, கடந்த ஆண்டு விண்ணப்பித்தும் மத்திய அரசிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை. இந்நிலையில், ‘ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் தண்டனை பெற்றவர்கள், ஒளிபரப்பு நிறுவனங்களின் பங்குதாரர்களாக இருந்தால், நாட்டின் பொருளாதாரப் பாதுகாப்புக்கு ஆபத்து' என்ற கொள்கை முடிவைக் காரணம் காட்டிக் கடிதத்தை அனுப்பியுள்ளனர் தொலைத்தொடர்பு அதிகாரிகள். மத்திய உளவுத்துறை அதிகாரிகளின் குறிப்பை அடுத்தே, இப்படியொரு உத்தரவு ஜெயா டிவி நிர்வாகத்துக்கு வந்திருக்கிறது' என அறிந்துள்ளனர் ஜெயா டிவி நிர்வாகத்தில் உள்ளவர்கள். 

தினகரன்இந்த உத்தரவு குறித்து நம்மிடம் பேசிய சசிகலா குடும்ப உறவினர் ஒருவர், ``ஜெயா டிவி பங்குதாரர்கள் யாராவது குற்ற வழக்கில் தண்டனை பெற்றிருந்தால், நடவடிக்கை எடுப்பது தொடர்பான விதிமுறைகளை, தொலைத்தொடர்பு ஆணையம் வகுத்திருக்கிறது. அப்படிப் பார்த்தால் ரிலையன்ஸ் கம்பெனியின் பங்குதாரர்களில், தண்டனை பெற்றவர்கள் எவ்வவோ பேர் இருக்கிறார்கள். அதற்காக ரிலையன்ஸ் நிறுவனத்தை மூடிவிட முடியுமா என்ன. இப்படியொரு சட்டவிதிகள் இருப்பதை மத்திய உளவுத்துறை கவனத்துக்குக் கொண்டு சென்றவர்கள் யார் என்பதுதான் குடும்ப ஆள்கள் முன்வைக்கும் ஒரே கேள்வி. இந்த விவகாரத்தின் மூலம் சசிகலாவை கூடுதல் மன உளைச்சலுக்கு ஆளாக்கிவிட்டார்கள்" என்றவர்,

``அடுத்து என்ன செய்வது என்ற விவாதம் வந்தபோது, `நான் பார்த்துக்கொள்கிறேன்' எனக் கூறிவிட்டு, கோபால் சுப்ரமணியத்தை இந்த வழக்கில் ஆஜராக வைத்தார் விவேக். இதன் பலனாக, இந்த உத்தரவுக்கு ஸ்டே கிடைத்திருக்கிறது. இப்போது சசிகலாவுக்கு எதிராக இந்த விவகாரம் திரும்புகிறது என்றால், குடும்பத்தில் இருக்கும் ஆள்கள்தான் மத்திய தொலைத்தொடர்பு ஆணையத்துக்குத் தகவல் சொல்லியிருப்பார்கள் என உறுதியாக நம்புகிறார் விவேக். 'ஒன்றரை ஆண்டுக்காலமாகச் சிறையில் இருக்கிறார் சசிகலா. இவ்வளவு நாள்களாக வராத நோட்டீஸ் இப்போது ஏன் வருகிறது' எனக் குடும்ப உறவுகளிடம் அவர் கொந்தளித்தார். 

சசிகலாஇந்த விவகாரத்தையடுத்து, ஜெயா டிவி-யின் பவரை யாருக்கு மாற்றுவது என்ற விவாதம் சிறையில் நடந்துள்ளது. அப்போது சசிகலாவிடம் பேசிய தினகரன் தரப்பினர், `ஜெயா டிவி பவரை நினைப்பவர்கள் பெயருக்கெல்லாம் மாற்ற முடியாது. கணவர் வழி உறவில் யாருக்காவதுதான் மாற்ற முடியும். பழனிவேலுவும் (நடராசனின் சகோதரர்) வெங்கடேஷும் ஏற்கெனவே இரண்டாண்டுகள் ஜெயா டிவி நிர்வாகத்தில் இருந்தவர்கள். அவர்களில் யாருக்காவது பவர் கொடுத்துவிடுங்கள். விவகாரம் முடிவுக்கு வந்துவிடும்' எனக் கூறியுள்ளனர். இதற்குச் சசிகலா எந்தப் பதிலையும் சொல்லவில்லை. இப்படிச் சொல்வதற்குக் காரணம், 'ஜெயா டிவி-யின் பவரை விவேக் பெயருக்கு சசிகலா மாற்றிவிடக் கூடாது' என்பதுதான். எப்படியாவது ஜெயா டிவி-யை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட வேண்டும் என நினைக்கிறார் தினகரன். 

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்கு சசிகலா போகும்போது, `ஜெயா டிவி...' எனத் தினகரன் இழுத்தபோது, `அதை விவேக் பார்த்துக்கொள்ளட்டும்' என உறுதியாகக் கூறிவிட்டுச் சென்றார். இந்த உத்தரவை தினகரன் ரசிக்கவில்லை. குடும்ப ஆள்களில் திவாகரனையும் கிருஷ்ணபிரியாவையும் கட்டம் கட்டிவிட்டார் தினகரன். நடராசன் மரணத்துக்காக மன்னார்குடி வந்த சசிகலாவை, கிருஷ்ணபிரியா சந்தித்துப் பேசவே இல்லை. அதற்கான அனுமதியும் அவருக்கு வழங்கப்படவில்லை. அடுத்ததாக, அவரைப் பெரிதும் உறுத்தியது திவாகரன்தான். அவரையும் சசிகலா அனுமதியோடு ஒதுக்கிவைத்துவிட்டார். இப்போது கடைசியாக அவர் கண்களை உறுத்துவது விவேக். அவரை ஒதுக்குவதற்கான வேலைகளைச் செய்யத் தொடங்கிவிட்டார். `சசிகலாவை பா.ஜ.க வீழ்த்துகிறது' என்ற விவாதம் உண்மையாக இருந்திருந்தால், முன்னரே இந்த நோட்டீஸ் வந்திருக்க வேண்டும். இந்த விவகாரம் இப்போது கிளப்பப்படுவதுதான் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது" என்றார் விரிவாக.