வெளியிடப்பட்ட நேரம்: 14:59 (14/06/2018)

கடைசி தொடர்பு:15:26 (14/06/2018)

`இந்தத் தீர்ப்பை எதிர்பார்க்கவில்லை’ - தங்க தமிழ்ச்செல்வன் பேட்டி

தங்க தமிழச்செல்வன்

18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் குறித்து வெளியான தீர்ப்பு தொடர்பாகத் தங்கதமிழ்ச்செல்வனிடம் போனில் பேசியபோது, ``இந்தத் தீர்ப்பை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. எனக்கு விருப்பமில்லை" என ஒற்றை வரியில் முடித்துக்கொண்டார்.

``தகுதி நீக்கம் வழக்கின் தீர்ப்பு எங்களுக்குப் பாதகமாக வந்தால் மேல்முறையீடு செல்லும் எண்ணம் எனக்கு இல்லை. எனது தொகுதியில் இடைத்தேர்தல் வைக்கட்டும். நான் போட்டியிட்டு வெற்றிபெற்று சட்டசபைக்கு வருவேன்'' எனச் சொல்லிவந்தார் தங்கதமிழ்ச்செல்வன். அதே நேரம் தீர்ப்பு வெளியாவதற்கு முன்னர், நீதிமன்றத்தின் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது என நம்பிக்கை உதிர்த்துவிட்டுச் சென்றவர், தீர்ப்புக்குப் பிறகு ``தீர்ப்பை நான் எதிர்பார்க்கவில்லை" எனக் கூறியிருக்கிறார்.

இந்நிலையில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ-க்களில் ஒருவரான கதிர்காமுவிடம் போனில் தீர்ப்பு குறித்து கருத்துக் கேட்டபோது, ``கருத்து சொல்ல விருப்பமில்லை" எனக் கோபமாகக் கூறிவிட்டு போனை வைத்துவிட்டார். இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பு வழங்கி தற்போது மூன்றாவது நீதிபதியின் தீர்ப்புக்கு வழக்கு சென்றிருக்கும் சூழலில், இருவரது கருத்து சற்று காட்டமாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது.