வெளியிடப்பட்ட நேரம்: 14:43 (14/06/2018)

கடைசி தொடர்பு:21:48 (14/06/2018)

ஊட்டியில் 300 அடி பள்ளத்தில் பாய்ந்த அரசுப் பேருந்து! - பலி எண்ணிக்கை 8-ஆக அதிகரிப்பு

ஊட்டி- குன்னூர் இடையேயான சாலையில் வேகமாகச் சென்ற அரசு பேருந்து நிலை தடுமாறி கவிழ்ந்ததில் உயிரிழப்பு 8-ஆக அதிகரித்துள்ளது.

பேருந்து

ஊட்டியிலிருந்து, குன்னூர்  நோக்கி 34 பயணிகளுடன் அரசு பேருந்து சென்றுகொண்டிருக்கும் போது, மந்தாடா என்ற இடத்தில் உள்ள வளைவில் வேகமாகச் சென்று திரும்பியதால் நிலை தடுமாறி 300 அடி பள்ளத்தில் பேருந்து கவிந்தது. இந்த விபத்தில் 2 பெண்கள் உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயங்களுடன் ஊட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலத்த காயமடைந்த 19 பேர் கோயமுத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

நீலகிரி மாவட்ட கலெக்டர், போலீஸ் எஸ்.பி ஆகியோர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். விபத்தில் காயமடைந்த அனைவரும் மீட்கப் பட்டுவிட்டனர். பேருந்தை இயக்கிய ஓட்டுநர் ராஜ்குமார் மற்றும் நடத்துநர் பிரகாஷ் ஆகியோர் பலத்த காயங்களுடன் கோயமுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த மூர்த்தி (47) என்பவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அதனையடுத்து பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்தது. 

விபத்து பகுதியில் இருந்த பொதுமக்களில் பலர் ஊட்டி அரசு மருத்துவமனை முன்பு திரண்டதால் சிறிது நேர அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. மேலும் இது ஊட்டியில் நடைபெறும் 6-வது விபத்து எனவும் எந்த அரசு பேருந்துகளும் சரியான தரத்தில் இலை எனவும் குற்றம் சாட்டினர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க