``சிங்கம் சிங்கம்... காவல் சிங்கம்!” - புதுச்சேரியில் இந்த ரோபோ போலீஸை மிஸ் பண்ணாதிங்க

புதுச்சேரி வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு உதவிடும் வகையில் `காவல் சிங்கம்’ என்ற தகவல் அளிக்கும் `ரோபோ’ கணினியைப் புதுச்சேரி போலீஸ் அறிமுகப்படுத்தி அசத்தியுள்ளது.

காவல் சிங்கம்

புதுச்சேரி மாநிலத்தின் வருவாயில் முக்கியப் பங்கு வகிப்பது சுற்றுலாதான். அதனால் அயல்நாடு மற்றும் அயல் மாநிலங்களிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளைக் கவர்வதற்காகவும், அவர்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதற்காகவும் புதுச்சேரி அரசும், சுற்றுலாத்துறையும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாகக் கடந்த ஜனவரி மாதம் `சுற்றுலாக் காவலர்கள்’ என்ற தனி காவல் பிரிவை புதுச்சேரி போலீஸ் தொடங்கியது. புதுச்சேரியைப் பொறுத்தவரை சட்டம் ஒழுங்குப் பிரிவில் பணியாற்றும் போலீஸார் சிவப்பு நிறத் தொப்பியை அணிந்திருப்பார்கள். ஆனால், இந்தச் சுற்றுலா போலீஸார் நீல நிறத் தொப்பியை அணிந்திருப்பார்கள். ``புதுச்சேரி கடற்கரைப் பகுதி, காலாப்பேட், பாரடைஸ் பீச் உள்ளிட்ட பகுதிகளில் பணிகளில் ஈடுபட்டிருக்கும் இவர்கள் சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துவார்கள்” என்று அப்போது தெரிவித்திருந்தார் டிஜிபி சுனில்குமார் கவுதம். புதுச்சேரி காவல்துறையின் இந்த முயற்சிக்குச் சுற்றுலாப் பயணிகளிடம் மிகுந்த வரவேற்பு கிடைத்தது. தற்போது அவர்களை மேலும் கவரும் விதமாக தனது அடுத்த முயற்சியை முன்னெடுத்திருக்கிறது புதுச்சேரி போலீஸ்.

போலீஸ்

பொதுவாகப் புதுச்சேரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் எப்படியாவது வழியை விசாரித்துக்கொண்டு கடற்கரைக்கு வந்து சேர்ந்து விடுவார்கள். ஆனால், அங்கிருந்து ஆரோவில், பாரடைஸ் பீச் உள்ளிட்ட மற்ற சுற்றுலாத்தலங்களுக்குச் செல்வதற்கு வழி தெரியாமல் தவிப்பார்கள். அவர்களுக்கு உதவும் வகையில் தற்போது `காவல் சிங்கம்’ என்ற பெயருடன், போலீஸ் சிலையுடன் கூடிய கணினியை அமைத்திருக்கிறது புதுச்சேரி போலீஸ். கடற்கரைச் சாலையில் காந்தி சிலைக்குச் சற்று தொலைவில் சுற்றுலாக் காவல் பிரிவு செயல்பட்டு வருகிறது. அந்த அலுவலகத்தில்தான் இந்தக் `காவல் சிங்கம்’ கையில் தகவல் கணினியுடன் கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறார். இந்தத் தொடுதிரைக் கணினியில் புதுச்சேரியின் வரலாறு, 17-ம் நூற்றாண்டில் எடுக்கப்பட்ட புதுச்சேரியின் புகைப்படங்கள், சுற்றுலாத்தலங்கள், காவல்துறை அதிகாரிகளின் விவரங்கள், அருகிலிருக்கும் அரசு மருத்துவமனைகள் மற்றும் காவல் நிலையங்களின் விவரங்கள் மற்றும் அதன் தொலைபேசி எண்கள் போன்றவை அடங்கியிருக்கிறது. யார் வேண்டுமானாலும் இந்தக் கணினியை இயக்கி தங்களுக்குத்  தேவையான விவரங்களைப் பெற்றுக்கொள்ளலாம். `காவல் சிங்கம்' கணினியை இயக்கத் தெரியாதவர்கள் வாய்மொழியாகக் கேட்கும் கேள்விகளுக்கும் பதிலளிப்பார் இந்தச் சிங்கம்.

போலீஸ்

`காவல் சிங்கம்’ சுற்றுலாப் பயணிகளை எப்படி அணுகுகிறார் என்பதை அறிய நேரில் சென்றோம். அப்போது இரண்டு பெரியவர்கள் `காவல் சிங்கம்’ அருகே சென்று அவரை மேலும் கீழும் பார்த்தனர். அப்போது ``வணக்கம் புதுச்சேரி... நான் காவல் சிங்கம் பேசுகிறேன். உங்களுக்குத் தேவையான தகவல்கள் இந்தக் கணினியில் இருக்கின்றன. உங்களுக்கு வேறு ஏதேனும் உதவிகள் வேண்டுமா ?” என்று காவல் சிங்கத்திடமிருந்து குரல் வருகிறது. உடனே அவர்கள், ``மணக்குள விநாயகர் கோயிலுக்கு எப்படிப் போகணும்?” என்று கேட்கின்றனர். உடனே, ``நீங்கள் நிற்கும் திசையிலிருந்து வலதுபுறம் நோக்கிச் செல்லுங்கள். இடதுபுறம் இருக்கும் மூன்றாவது திருப்பத்தில் திரும்பி 100 மீட்டர் தூரம் நடந்து சென்றால் ஆளுநர் மாளிகை தெரியும். அதன் பின்னே மணக்குள விநாயகர் ஆலயம் உள்ளது. நீங்கள் தரிசிக்கலாம். நன்றி...” என்று காவலர் சிங்கம் கூற பெரியவர்கள் முகங்களில் மகிழ்ச்சி பரவ ``நன்றி” என்று கூறி விநாயகர் கோயிலை நோக்கி நடக்க ஆரம்பித்தனர்.

புதுச்சேரி

அவர்களைத் தொடர்ந்து அங்கு வந்த சில இளைஞர்கள், ``சுண்ணாம்பாறு போட் ஹவுசுக்கு எப்படிப் போகணும், எவ்வளவு நேரம் ஆகும் ?” என்று கேட்க, உடனே, ``நீங்கள் எப்படி வந்திருக்கிறீர்கள்? பேருந்திலா, காரிலா அல்லது இருசக்கர வாகனத்திலா?" என்று கேட்கிறார் காவல் சிங்கம். அதற்கு, ``டூ வீலர்” என்று பதில் அளித்தனர் அந்த இளைஞர்கள். உடனே ``நீங்கள் நிற்கும் திசையிலிருந்து இடதுபுறம் நோக்கிச் செல்லுங்கள். கடற்கரை சாலை முடிந்ததும் அதிலிருந்து சுமார் 200 மீட்டர் தூரம் சென்றால் தாவரவியல் பூங்கா வரும். அதிலிருந்து 100 மீட்டர் தொலைவில் இருக்கும் அண்ணா சிலை சந்திப்பில் இடதுபுறம் திரும்பி சுமார் 200 மீட்டர் தூரம் சென்றால் அங்கு ஒரு ரவுண்டானா வரும். அதில் இடதுபுறம் திரும்ப வேண்டும். அந்தக் கடலூர் சாலையில் 6 கிலோமீட்டர் தூரம் சென்றால் இடதுபுறம் சுண்ணாம்பாறு படகு இல்லத்தை நீங்கள் அடையலாம். மறக்காமல் தலைக்கவசத்தை அணிந்து செல்லுங்கள். வணக்கம் புதுச்சேரி” என்று சொன்ன காவல் சிங்கத்துக்கு நன்றி சொல்லிவிட்டு பறந்தனர் அந்த இளைஞர்கள்.

சுற்றுலா போலீஸ்

அவர்களையடுத்து தனது மகனுடன் காவல் சிங்கத்தைச் சந்தித்த இளம்பெண் க்ளோரி என்பவரிடம் பேசினோம். ``புதுச்சேரியோட முழு வரலாறும் இங்க தெரிஞ்சுக்க முடியுது. அதேபோல வேறு எங்கும் பார்க்க முடியாத பழைய போட்டோக்கள் நிறைய இருக்கு. சுற்றுலாத் தலங்கள் குறித்த எந்தத் தகவல் கேட்டாலும் தெளிவாகக் கூறுகிறார் காவல் சிங்கம்” என்றார்.

``காவல் சிங்கம் `ரோபோ’ சிலையில் தொடுதிரை கணினி, மைக், ஸ்பீக்கர், கேமரா பொருத்தப்பட்டுள்ளது. பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் தங்களுக்குத் தேவையான தகவல்களை தொடுதிரைக் கணினியை இயக்கித் தெரிந்து கொள்ளலாம். கணினியை இயக்கத் தெரியாதவர்கள் தங்களுக்குத் தேவைப்படும் தகவல்கள் மற்றும் கொடுக்க விரும்பும் புகார்களை வாய்மொழியாகக் காவல் சிங்கத்திடம் தெரிவிக்கலாம். அப்போது சிசிடிவி கேமரா மூலம் கண்காணிப்பு அறையிலிருந்து அவர்களை பார்த்துக்கொண்டிருக்கும் எங்கள் சுற்றுலா போலீஸார் அவர்களுக்குத் தேவைப்படும் தகவல்களை வாய் மொழியாகக் கொடுத்து உதவுவார்கள். அன்றாடம் காலை முதல் இரவு வரை இந்தக் காவல் சிங்கம் சுற்றுலாப் பயணிகளுக்கு உதவிக்கொண்டிருப்பார். புதுச்சேரி வரும் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாகவும், மன நிறைவுடனும் திரும்பிச் செல்ல வேண்டும் என்பதே புதுச்சேரி காவல்துறையின் நோக்கம்” என்கிறார் காவல்துறை டிஐஜி சந்திரன்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!