`பாசமாய் வளர்த்தேனே; என்னை விட்டுப் போயிட்டாளே'‍ - மகளை இழந்த தாய் கண்ணீர்

நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருகே பழைய கூடலூரில் தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் அதே ஊரைச் சேர்ந்த கலியபெருமாள் - கவிதா தம்பதியின் மகள் வள்ளி என்பவர் ப்ளஸ் டூ படித்து வந்தார். இந்நிலையில, நேற்று காலை வள்ளி தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலைச் செய்துகொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  

தற்கொலை செய்த மாணவி

வள்ளி மரணம் குறித்து அவரின் தாய் கவிதாவிடம் பேசியபோது, ``ப்ளஸ் டூ படிக்கும் என் மகளை வகுப்பு ஆசிரியை விஜயலெட்சுமி என்பவர் இரண்டு தினங்களுக்கு முன் சரியாகப் படிக்கவில்லை என்று சக மாணவ, மாணவிகள் மத்தியில் கடுமையாகத் திட்டியுள்ளார். மதிய உணவைக்கூட சாப்பிட விடாமல் டார்ச்சர் செய்துள்ளார். இந்த விஷயம் குறித்து என் மகள் என்னிடம் சொல்லியபோது, நானே அப்பள்ளிக்குச் சென்று ஆசிரியை விஜயலெட்சுமியைச் சந்தித்தேன், ''என் மகள் முதல் வகுப்பிலிருந்தே இங்குதான் படித்து வருகிறாள். இதுவரை நன்றாகத்தான் படித்து வந்திருக்கிறாள். என் மகள் படிக்கவில்லை என்றாலும்கூட நீங்கள் மற்றவர்கள் மத்தியில் அவமானப்படுத்தாதீர்கள். இதனால் என் மகள் சாப்பிடாமல், தூங்காமல் சங்கடப்படுகிறாள்” என்று கூறி வந்தேன். ஆனால், மறுநாளும் அதே டீச்சர் என் மகளை சாப்பிட விடாமல் மற்றவர்கள் முன் அவமானப்படுத்தியிருக்கிறார்.

அப்போது அனைவரும் கேலியாகச் சிரித்துள்ளனர். அந்த அவமானம் தாங்காமல் என் மகன் அய்யப்பனிடம் என்னால் இந்த அவமானத்தை தாங்க முடியவில்லை, நான் இறந்துவிடுவேன் என்று அழுது புலம்பியிருக்கிறாள். இதை என் மகனும் சொல்லவில்லை. இப்போது, ஆசையாய், பாசமாய் வளர்த்த என் மகள் எங்களைவிட்டுப் போய்விட்டாள். இதற்குக் காரணமான பள்ளி நிர்வாகம் பிரச்னை வெளியே தெரிந்துவிடாமல் மறைக்க சகல வழிகளிலும் முயற்சி செய்கிறது. பாலையூர் போலீஸார் உண்மையை மறைத்து வயிற்று வலியால்தான் என் மகள் தற்கொலை செய்துகொண்டாள் என்று எழுதி வாங்குகின்றனர். இதெல்லாம் நியாயமா, இனி என் மகள் திரும்பக் கிடைப்பாளா” என்று கதறினார்.  

Student Suicide

இறந்த மாணவி வள்ளிக்காக மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் ஒன்று சேர்ந்து, பள்ளி நிர்வாகி, தலைமையாசிரியர், பிரச்னைக்குரிய வகுப்பாசிரியர் ஆகியோரை கைது செய்யும் வரை மாணவியின் உடலை வாங்க மாட்டோம் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே பள்ளி நிர்வாகத்தின் சார்பில் பெருந்தொகை ஒன்றை மாணவியின் குடும்பத்துக்குக் கொடுக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. மாணவியின் உடல் மயிலாடுதுறை அரசு பொது மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.  

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!