வெளியிடப்பட்ட நேரம்: 15:16 (14/06/2018)

கடைசி தொடர்பு:16:15 (14/06/2018)

`அதுதான் கொஞ்சம் வருத்தம்’ - தீர்ப்பு குறித்து டி.டி.வி.தினகரன் பேட்டி

தீர்ப்பு குறித்து பேசிய தினகரன், ``இன்று 50% வெற்றி கிடைத்துள்ளது. ஆனால், மக்கள் தோல்வி அடைந்துள்ளனர். மக்கள் இந்த அரசு போக வேண்டும் என நினைக்கிறார்கள். ஆனால், அது நடக்கவில்லை” என்றார். 

தினகரன்

18 எம்.எல்.ஏ-க்களின் தகுதி நீக்க வழக்கில், `சபாநாயகரின் அதிகாரத்தில் தலையிட முடியாது’ எனத் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தீர்ப்பு அளித்தார்.  அதே அமர்வில் இருந்த நீதிபதி சுந்தர் , `இல்லை தகுதி நீக்கம் செய்ததில் உரிய நடைமுறைகள் பின்பற்றப்படாததால் சபாநாயகரின் உத்தரவு செல்லாது என்று நான் தீர்ப்பளிக்கிறேன். இந்த விவகாரத்தில் நான் தலைமை நீதிபதி கருத்தில் மாறுபடுகிறேன்’ என்றார். இந்த வழக்கில் எந்த முடிவும் எட்டப்படாததால் மூன்றாவது நீதிபதிக்கு அனுப்பப்படுகிறது எனத் தீர்ப்பு வெளியானது. 

இந்த தீர்ப்புக்குப்பின் செய்தியாளர்களைச் சந்தித்த எம்.எல்.ஏ தினகரன், ``18 எம்.எல்.ஏ-க்களும் எங்களுடன்தான் இருக்கிறார்கள். தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. அவர்கள் அனைவரும் கட்சியைக் காப்பாற்ற தங்களது பதவியைத் தியாகம் செய்தவர்கள். தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் வெற்றிவேல் ஆகிய இருவரும் என் கண்கள் மாதிரி. நானே போகச்சொன்னாலும், இவர்கள் என்னை விட்டுப் போகமாட்டார்கள். சபாநாயகர் உத்தரவு செல்லும் எனத் தீர்ப்பு வந்தாலும் இவர்கள் எங்களுடன்தான் இருப்பார்கள். இன்று வெளியான இந்தத் தீர்ப்பில், ஒரு நீதிபதி சபாநாயகரின் இந்தத் தீர்ப்பு செல்லாது என்றார். ஆனால், தலைமை நீதிபதி, சபாநாயகர் முடிவில் தலையிட முடியாது எனச் சொல்லிவிட்டார். ஆனால், இதே நீதிபதி கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் புதுச்சேரி விவகாரத்தில் சபாநாயகரின் முடிவுக்கு எதிராகத் தீர்ப்பு வெளியிட்டார். இதுதான் எங்களுக்குப் புரியவில்லை. நான் சாதாரணமான ஒருவன். சட்டம் படித்தவர்களிடம்தான் இது குறித்து கேட்க வேண்டும். சட்டம் எல்லோருக்கும் பொதுவாகத்தானே இருக்க வேண்டும். எப்படி புதுச்சேரிக்கு ஒரு சட்டமும் தமிழகத்துக்கு வேறு சட்டமும் இருக்க முடியும். எல்லாம் கடவுளுக்குதான் வெளிச்சம். 

இந்தத் தீர்ப்பின் மூலம் நீதிமன்றத்தின் புண்ணியத்தில் இந்த மக்கள் விரோத அரசின் ஆயுள் 2, 3 மாதம் நீளுகிறது. அதுதான் கொஞ்சம் வருத்தம். நீதிமன்றம் மீதான நம்பிக்கை மீது மக்களுக்கு ஒரு கேள்விக்குறி எழுகிறது. இரண்டு நீதிபதிகளும் சபாநாயகர் உத்தரவு செல்லும் என்ற ஒரே தீர்ப்பு வழங்கியிருந்தால் உச்ச நீதிமன்றம் சென்று நாங்கள் வெற்றி பெற்று வந்திருப்போம். எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. இன்று 50% வெற்றி கிடைத்துள்ளது. ஆனால், மக்கள் தோல்வி அடைந்துள்ளனர். மக்கள் இந்த அரசு போக வேண்டும் என நினைக்கிறார்கள். ஆனால், அது நடக்கவில்லை. தீர்ப்பு எங்களுக்குச் சாதகமாக வந்திருந்தால் நம்பிக்கையில்லா தீர்மானம் கோரியிருப்பேன். தங்கதமிழ்ச்செல்வன் மேல்முறையீடு செய்வது தொடர்பாகக் கூறியது அவரது தனிப்பட்டக் கருத்து. எனக்கு எந்த தனிப்பட்ட கருத்தும் கிடையாது. இந்த 18 எம்.எல்.ஏ-க்களின் முடிவுதான் எனது முடிவும். அவர்கள் இன்னும் அ.தி.மு.க-வில்தான் உள்ளனர். நான்தான் சுயேச்சை எம்.எல்.ஏ. அவர்கள் முடிவுதான் என் முடிவு. முதல்வரை மாற்ற வேண்டும் என்றுதான் அவர்கள் கூறுகிறார்கள். நம்பிக்கை வாக்கெடுப்பு அன்று ஸ்லீப்பர் செல் வெளிவருவார்கள்” என்றார்.