புத்துணர்வுக்காக மூலிகைக் குளியல், ஆயில் மசாஜ்! - கேரளாவில் வைகோ ஆயுர்வேத சிகிச்சை | vaiko visits kerala for vaidya sala

வெளியிடப்பட்ட நேரம்: 16:26 (14/06/2018)

கடைசி தொடர்பு:16:26 (14/06/2018)

புத்துணர்வுக்காக மூலிகைக் குளியல், ஆயில் மசாஜ்! - கேரளாவில் வைகோ ஆயுர்வேத சிகிச்சை

ம.தி.மு.க பொதுச் செயலாளரான வைகோ, கேரளாவில் ஆயுர்வேதச் சிகிச்சைக்காக கேரளாவுக்குச் சென்றுள்ளார். புத்துணர்வு சிகிச்சைக்காகச் சென்றுள்ள அவருக்கு மூலிகை குளியல், ஆயில் மசாஜ், மூலிகை ஒத்தடம் என பல்வேறு வகையான சிகிச்சைகள் அளிக்கப்பட உள்ளன.

ம.தி.மு.க பொதுச் செயலாளரான வைகோ, ஆயுர்வேதச் சிகிச்சைக்காகக் கேரளாவுக்குச் சென்றுள்ளார். புத்துணர்வு சிகிச்சைக்காகச் சென்றுள்ள அவருக்கு மூலிகை குளியல், ஆயில் மசாஜ், மூலிகை ஒத்தடம் எனப் பல்வேறு வகையான சிகிச்சைகள் அளிக்கப்பட உள்ளன.

கோட்டக்கல் ஆரிய வைத்தியசாலை

கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக்கொள்வதற்காக வெளி மாநிலங்களிலிருந்து மட்டும் அல்லாமல், வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமானோர் வருகை தருகிறார்கள். ம.தி.மு.க பொதுச் செயலாளரான வைகோ ஒவ்வொரு வருடமும் கேரளாவுக்குச் சென்று மூலிகைச் சிகிச்சை எடுத்துக் கொள்வது வழக்கம். ஆனால், கடந்த 3 வருடங்களுக்கு முன்பு முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாகக் கடுமையான போராட்டங்களை வைகோ முன்னெடுத்ததால் கேரளாவில் அவருக்கு எதிர்ப்பு இருந்தது.

அதனால் கடந்த 3 வருடங்களாக அவர் கேரளாவுக்குச் சென்று மூலிகை சிகிச்சை எடுத்துக்கொள்ளாமல், வழக்கமாகச் செல்லக்கூடிய நிறுவனத்தின் நெல்லையில் உள்ள ஆயுர்வேத சிகிச்சை மையக் கிளையில் மூலிகை சிகிச்சை எடுத்தார். இந்த வருடம் அவர் கோட்டக்கல் ஆரிய வைத்திய சாலையில் மூலிகை சிகிச்சைக்காகச் சென்றுள்ளார். அவர், அங்கு 17 நாள்கள் தங்கியிருந்து சிகிச்சை எடுக்க உள்ளார்.

கோட்டக்கல் ஆரிய வைத்திய சாலையானது கடந்த 116 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. ஒவ்வொருவரின் உடல் நிலை மற்றும் அவர்களுடைய ரத்த அழுத்தம் உள்ளிட்டவற்றைப் பரிசோதித்து அதன் அடிப்படையிலேயே உரிய சிகிச்சை அளிக்கப்படும். மூலிகை குளியல், மூலிகை எண்ணெய் குளியல், மூலிகை சேர்க்கப்பட்ட பால் குளியல் உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகளை வைகோ எடுத்துக் கொள்ள இருக்கிறார். 

வைகோ - மூலிகை குளியல்

நவரக்கிழி என்கிற சிகிச்சையில், மருத்துவ குணம் கொண்ட நவர அரிசியை சமைத்து அதை ஒரு துணியில் கட்டி இதமான சூட்டில் உடல் முழுவதும் ஒத்தடம் கொடுக்கப்படும். 3 பேர் சேர்ந்து  இந்த ஒத்தடம் கொடுப்பார்கள். அதன் பின்னர் சிறிது நேரம் ஓய்வு எடுத்ததும் வெந்நீர் குளியல் எடுத்தால் உடல் புத்துணர்வு பெறும். அத்துடன் ரத்த அழுத்தம் சீராகும். இந்தச் சிகிச்சையை வைகோ எடுத்துக்கொள்ள இருக்கிறார். அத்துடன், சிரோவஸ்தி என்ற சிகிச்சையில் தலையில் ஒரு கூம்பு கட்டப்பட்டு அதில் மிதமான சூட்டுடன் இருக்கும் எண்ணெய் ஊற்றப்படும். சுமார் ஒரு மணி நேரம் முதல் ஒன்றரை மணி நேரத்துக்கு அந்த எண்ணெய் தலைக்குள் இறங்குவதற்காக வைக்கப்படும். இதன் மூலம் தலை குளிர்ச்சி அடையும். கண் பார்வை பலப்படும். சிந்தனைத் திறன் மெருகேறும். இதையும் வைகோ எடுக்க இருப்பதாகத் தெரிய வந்துள்ளது.

மேலும், பிழிச்சல் என்ற சிகிச்சையானது மரப்பலகையில் படுக்க வைத்து செய்யப்படும். மருத்துவ மூலிகைகளைக் கொண்ட எண்ணெய்யைக் கழுத்துக்குக் கீழ் உடல் முழுவதும் பரவவிட்டு அதன் பின்னர், 4 பேர் சேர்ந்து உடல் முழுவதும் மசாஜ் செய்வார்கள். சுமார் ஒன்றரை மணி நேரம் நடக்கும் இந்த சிகிச்சையால் முதுகுவலி, மூட்டுவலி, இடுப்பு வலி உள்ளிட்ட வலிகள் காணாமல் போய்விடும். இந்த சிகிச்சையையும் வைகோ எடுத்துக்கொள்ள இருக்கிறார். சிகிச்சையை முடித்துக்கொண்டு ஜூலை 1-ம் தேதி வைகோ தமிழகம் திரும்ப உள்ளார்.