வெளியிடப்பட்ட நேரம்: 16:40 (14/06/2018)

கடைசி தொடர்பு:16:40 (14/06/2018)

`படைப்புகளை அரசியல் தடுக்கக் கூடாது!’ - சீறிய வைரமுத்து

`இந்தியாவில் சகிப்புத்தன்மை குறைந்து வருகிறது; எழுத்தாளர்களுக்கு கருத்து சுதந்திரம் மறுக்கப்படுகிறது' எனக் குற்றம் சாட்டியிருக்கிறார் கவிஞர் வைரமுத்து. 

வைரமுத்து

சென்னை ஆழ்வார்பேட்டையில் தமிழாற்றுப்படை நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், எழுத்தாளர் ஜெயகாந்தன் பற்றிய கட்டுரையைக் கவிஞர் வைரமுத்து வெளியிட்டார். இதன் பிறகு பேசியவர், `இன்று நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்திருப்பதை நினைத்தால், நெஞ்சில் ரத்தம் கட்டுகிறது. பெரியார் இருந்திருந்தால் எத்தனை முறை சுடப்பட்டிருப்பார். ராஜாராம் மோகன்ராய் இருந்திருந்தால் எத்தனை முறை அவர் கழுத்தில் தூக்குக் கயிறு இறுக்கியிருக்கும்.

ராமானுஜர் இருந்திருந்தால் எத்தனை அமைப்புகள் அவரை ஏற்றுக்கொண்டிருக்கும்? ஜெயகாந்தன் இருந்திருந்தால், எத்தனை முறை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருப்பார்? பன்முகத்தன்மைதான் இந்தியாவின் வலிமை; கருத்து சுதந்திரம் இந்தியாவின் பெருமை; அரசியலைப் படைப்புகள் தடுக்கலாம். ஆனால், படைப்புகளை அரசியல் தடுக்கக் கூடாது' என்றார். இந்த நிகழ்ச்சியில் எழுத்தாளர்கள் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.