வெளியிடப்பட்ட நேரம்: 17:30 (14/06/2018)

கடைசி தொடர்பு:17:30 (14/06/2018)

சத்தீஸ்கர் விவசாயிகளுக்கு இயற்கை விவசாயப் பயிற்சி அளிக்கும் தமிழக விவசாய வல்லுநர்கள்!

இயற்கை விவசாயத்தை அகிலம் எங்கும் பரப்பும் அரும்பணியைத் தனது வாழ்நாள் லட்சியமாக கைக்கொண்டு அதில் வெற்றியும் பெற்றவர் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார். பசுமை விகடன் மூலமாக நம்மாழ்வார் எழுதிய கட்டுரைகளும், பசுமை விகடனுடன் இணைந்து தமிழகம் முழுவதும் நடத்திய `இனியெல்லாம் இயற்கையே' பயிற்சி வகுப்புகளும் இயற்கை விவசாயத்தில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தின. இன்றைக்கு தமிழகத்தில் உள்ள பல முன்னோடி இயற்கை விவசாயிகள் அந்தப் பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்டவர்கள்தான்.

சட்டீஸ்கர் விவசாய பயிற்சி

பசுமை விகடன் தொடங்கியது முதல் இன்று வரை பயிற்சி வகுப்புகளைத் தொடர்ந்து நடத்திக்கொண்டுள்ளது. தமிழகம் மட்டும் இன்றி வெளிநாடு, வெளிமாநிலங்களில் வாழும் தமிழர்களிடமும் இயற்கை விவசாயம் தொடர்பான விழிப்பு உணர்வை ஏற்படுத்தி வருகிறது பசுமை விகடன். அந்த வகையில் சத்தீஸ்கர் மாநில விவசாயிகளுக்காக இயற்கை விவசாயக் கருத்தரங்கு மற்றும் பயிற்சி முகாம் ஒன்று சத்தீஸ்கர் மாநிலம் தம்தரி மாவட்டத்தில் இன்று தொடங்கியது. தம்தரி மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிரசன்னா முயற்சியால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தப் பயிற்சி முகாமில் கலந்துகொள்ளுமாறு தமிழகத்திலிருந்து சில இயற்கை விவசாய வல்லுநர்களை அழைத்திருந்தார். நமக்கும் சிறப்பு அழைப்பு விடுத்திருந்த ஆட்சியர், வல்லுநர்களை ஒருங்கிணைக்கும் பொறுப்பை வழங்கியிருந்தார். அதன்படி, தமிழகத்திலிருந்து பூச்சியியல் வல்லுநர் செல்வம், நுண்ணுயிர்கள் வல்லுநர் முனைவர்.உதயகுமார் மற்றும் விதைகள் யோகநாதன் ஆகியோருடன் சத்தீஸ்கரில் முகாமிட்டுள்ளோம்.

சட்டீஸ்கர் விவசாய பயிற்சி

இன்று காலை தம்தரி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிக் கருத்தரங்கு கூடத்தில் இயற்கை வேளாண்மை பயிற்சி முகாம் தொடங்கியது. தம்தரி சட்டமன்ற உறுப்பினர் குருமுக்சிங் ஹோரா, தம்தரி மேயர் அர்ச்சனா துபே, மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிரசன்னா மற்றும் வேளாண்மைத்துறை அதிகாரிகள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டனர். தம்தரி மாவட்டம் முழுவதிலிருந்தும் 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர். பயிற்சி முகாமை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிரசன்னா, ‘‘விவசாயம்தான் நம் வாழ்வாதாரம். அதற்கு அடிப்படையாக இருப்பது நிலம். ஆனால், ரசாயன உரங்களை நிலத்தில் கொட்டிக் கொட்டி நிலத்தின் வளத்தை அழித்துக்கொண்டிருக்கிறோம். மீண்டும் நம் பாரம்பர்ய முறைக்குத் திரும்ப வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதை சரியாக பயன்படுத்திக்கொண்டால், நமது நிலங்கள் மட்டுமல்ல மக்களின் ஆரோக்கியமும் மேம்படும். இயற்கை விவசாயத்தைப் பற்றிய புரிதலை உங்களுக்கு உருவாக்குவதற்காகத் தமிழகத்திலிருந்து வல்லுநர்களை அழைத்து வந்துள்ளோம்.

தமிழக விவசாய வல்லுநர்கள் 

ஒரு லிட்டர் 500 ரூபாய்க்கு விற்கப்படும் இயற்கை விவசாய இடுபொருள்களை நீங்களே வீட்டில் தயாரித்துக்கொள்ளும் வழிமுறைகளை இலவசமாகக் கற்றுக்கொடுக்கிறார்கள். அதைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். தமிழகத்தில் இயற்கை விவசாய நுட்பங்களை விவசாயிகளிடம் அறிமுகப்படுத்தும் பணிகளைச் சிறப்பாகச் செய்து வரும் பசுமை விகடன், இவர்களைப் போன்ற வல்லுநர்களைத் தொடர்ந்து அடையாளம் காட்டிவருகிறது. தமிழக விவசாயிகளைப்போல நமது விவசாயிகளும் இயற்கை விவசாயிகளாக மாற வேண்டும் என்பதுதான் எனது நோக்கம்’’ என்றார்.

செல்வம்எளிய முறையில் அரிசி கழுவிய தண்ணீர் மூலமாக இ.எம் தயாரிக்கும் முறைகள் பற்றியும் நுண்ணுயிர்களை விவசாயத்தில் பயன்படுத்தும் முறைகள் பற்றியும் முனைவர் உதய்குமார் செயல்முறை பயிற்சி அளித்தார். தொடர்ந்து பேசிய பூச்சி செல்வம், நன்மை செய்யும் பூச்சிகள், தீமை செய்யும் பூச்சிகள் மற்றும் பூச்சிக்கொல்லிகளால் ஏற்படும் விளைவுகள் பற்றி பட விளக்கத்துடன் பேசினார். விதைகள் யோகநாதன், பஞ்சகவ்யா மற்றும் இயற்கை இடுபொருள்கள் தயாரிப்பு குறித்துப் பேசினார். 

 தமிழகத்திலிருந்து வந்திருந்து இயற்கை விவசாய நுட்பங்களை கற்றுக்கொடுத்த வல்லுநர்களுக்கும் அதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்த மாவட்ட ஆட்சியர் பிரசன்னாவுக்கும் விவசாயிகள் நன்றி தெரிவித்தனர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க