வெளியிடப்பட்ட நேரம்: 17:10 (14/06/2018)

கடைசி தொடர்பு:17:10 (14/06/2018)

`மணல் குவாரி வேண்டாம்’ - 2,500 ஆதார் எண்ணுடன் கலெக்டரிடம் மனு

கொள்ளிடம் ஆற்றில் மணல்குவாரி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆதார் எண்ணுடன் 2,500 பேர் கையெழுத்திட்ட கோரிக்கை மனுக்களை ஆட்சியரிடம் கொள்ளிடம் நீராதார பாதுகாப்பு இயக்கத்தினர் அளித்தனர்.

மண்குவாரி

அரியலூர் மாவட்டம், திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் புதிய மணல் குவாரி மே 4-ம் தேதி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தொடங்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கொள்ளிடம் நீராதார பாதுகாப்பு இயக்கம், அனைத்து விவசாயிகள் சங்கம், அனைத்து அரசியல் கட்சியினர் பொக்லைன் இயந்திரத்தை சிறைபிடித்தனர். அதைத் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைப்பதற்கு இடைக்காலத் தடை விதித்தது. இருப்பினும், திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைப்பதற்கு நிரந்தரத் தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி திருமானூர், திருமழப்பாடி, ஏலாக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் கையெழுத்து இயக்கத்தைக் கொள்ளிட நீராதார பாதுகாப்பு இயக்கத்தினர் தொடங்கினர். `மணல் குவாரி வேண்டாம்' எனக் கூறி இலவச அழைப்பு 1100ஐ மேற்கண்ட கிராம மக்கள் தொடர்புகொண்டும் பதிவு செய்தனர்.

இந்நிலையில் நேற்று கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து கொள்ளிட நீராதார பாதுகாப்பு இயக்கத்தினர், அங்கு கலெக்டர் விஜயலட்சுமியைச் சந்தித்து, ஆதார் எண்ணுடன் 2,500 பேர் கையெழுத்திட்ட மனுக்களை அளித்தனர். மேலும், இதன் நகல்கள் ஆளுநர், தமிழக முதல்வருக்கு அனுப்பப்பட்டது.