வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (14/06/2018)

கடைசி தொடர்பு:17:00 (14/06/2018)

18 எம்.எல்.ஏ-க்கள் விவகாரத்தில் விரைந்து நீதி வழங்குங்கள்..! மு.க.ஸ்டாலின்

தாமதிக்கப்படும் நீதி என்பது மறுக்கப்படும் நீதி என்பதுடன் பெரும் காலதாமதத்தால் பயனற்றதாகிவிடும் என்று 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் விவகாரம் தொடர்பாக மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

மு.க.ஸ்டாலின்

18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கில் இன்று உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்த வழக்கில், `சபாநாயகரின் அதிகாரத்தில் தலையிட முடியாது’ எனத் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தீர்ப்பு அளித்தார். அதே அமர்வில் இருந்த நீதிபதி சுந்தர் , `இல்லை தகுதி நீக்கம் செய்ததில் உரிய நடைமுறைகள் பின்பற்றப்படாததால் சபாநாயகரின் உத்தரவு செல்லாது என்று தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் எந்த முடிவும் எட்டப்படாததால் மூன்றாவது நீதிபதிக்கு அனுப்பப்படுகிறது எனத் தீர்ப்பு வெளியானது.

இந்த விவகாரம் தொடர்பாக தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் ட்விட்டர் பதிவில், `ஜனநாயக மாண்பினைக் காப்பதில் நீதிமன்றங்கள்மீது மக்கள் பெரும் நம்பிக்கை வைத்துள்ள நிலையில், தெளிவான-நியாயமான தீர்ப்பு விரைவாகக் கிடைக்கவேண்டும். தாமதிக்கப்படும் நீதி என்பது மறுக்கப்படும் நீதி என்பதுடன் பெரும் காலதாமதத்தால் பயனற்றதாகிவிடும். அதனை நீதிமன்றம் தவிர்க்கும் என நம்புகிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.