வெளியிடப்பட்ட நேரம்: 18:15 (14/06/2018)

கடைசி தொடர்பு:18:15 (14/06/2018)

திருநாங்கூரில் மதங்கீஸ்வரர் சுவாமி 12 ரிஷப சேவை வைபவம்

நாகை மாவட்டம், சீர்காழிக்கு அருகே உள்ள திருநாங்கூரில் மதங்கீஸ்வரர் சுவாமி கோயிலில் நேற்று(13.6.18) இரவு 8 மணியளவில் 12 சிவபெருமான்களின் ரிஷப சேவை திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. சீர்காழியிலிருந்து தெற்கே 10 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது மதங்கீஸ்வரர் ஆலயம். இது மதங்க முனிவர் பூஜித்து அருள் பெற்ற ஸ்தலம். ஒவ்வோர் ஆண்டும் திருநாங்கூரில் உள்ள திருமணிமாடக் கோயில் எனப்படும் நாராயணப் பெருமாள் கோயிலில் `11 கருட சேவை' நடைபெறும். அது போல இந்தக் கோயிலில்  சிவாலயங்களின் சார்பாக `12 ரிஷப சேவை' திருவிழா நடைபெற்று வந்தது. சில காரணங்களால் கடந்த 100 வருடங்களாகத் தடைப்பட்டு வந்த இந்த வைபவம் மீண்டும் 2016-ல் கொண்டாடப்பட்டது. அதைத் தொடர்ந்து மூன்றாவது வருடமாக நேற்று இந்த ரிஷப சேவை நடைபெற்றது.

ரிஷப சேவை

முன்னொரு காலத்தில் உலகத்தில் பிரளயம் ஏற்பட்ட சமயத்தில் பிரம்ம தேவர் மதங்கம் என்ன யானை வடிவத்தில் சிவபெருமானை நோக்கி தவமிருந்தபோது அவர் மனதிலிருந்து தோன்றியவர் மதங்க முனிவர். மதங்க முனிவர் சிவபெருமானை நோக்கிக் கடும் தவம் புரிந்து ஆசி பெற்றார். இவருக்கு மதங்க தீர்த்தத்தில் பார்வதி தேவி குழந்தையாகக் கிடைத்தார். ராஜமாதங்கி என்று அழைக்கபட்ட அந்தக் குழந்தை பருவ வயதை அடைந்தவுடன் மதங்க முனிவர் சிவபெருமானுடன் மணம் செய்வித்தார். உடனே சிவபெருமான் மதங்கீஸ்வரராக திருமணக் கோலத்தில் அம்பாளுடன் ரிஷப வாகனத்தில் மதங்க முனிவருக்குக் காட்சி தந்தார். எனவே, இந்த ஆலயத்தை தரிசிப்போர்க்குத் திருமணத் தடைகள் நீங்கும் என்பது ஐதீகம்.

ரிஷபசேவை

இத்தகைய சிறப்புடைய இந்த ஆலயத்தில் நேற்று 12 ரிஷப சேவை நடைபெற்றது. இதனை முன்னிட்டு நாங்கூரைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சிவாலயங்களிலிருந்து ஆரண்யேஸ்வரர், யோகநாத சுவாமி, சொர்ணபுரீஸ்வரர் , அமீர்தபுரீஸ்வரர், நாக நாத சுவாமி, நம்புவார் கன்ய சுவாமி, சுந்தரேசுவர சுவாமி, ஐராவதேஸ்வரர், கலிங்கமேஸ்வர சுவாமி, ஸ்ரீநயன வரதேஸ்வரர் சுவாமி ஆகியோர் தங்களின் அம்பாள்களுடன் மதங்கீஸ்வரர் ஆலயத்தில் எழுந்தருளினர். இதனைத் தொடர்ந்து நேற்று மாலை 1 மணியளவில் அனைத்து மூர்த்திகளுக்கும் மகா தீபாராதனை செய்யப்பட்டது. 8 மணியளவில் சிவபெருமான்- அம்பாள் அலங்கரிக்கப்பட்டு ரிஷப வாகனத்தில் எழுந்தருளினர். பின்பு மங்கல வாத்தியங்கள் முழங்க ஒரே நேரத்தில் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து இரவு 9.30 மணியளவில் திருமுறை பாராயணங்கள் ஒலிக்க சிவபெருமான்களின் ரிஷப வாகன வீதியுலா நடைபெற்றது.

இந்த ரிஷப சேவை வைபவத்தில் சைவ சமய பெரியோர்களும், நாங்கூரைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்களும் கலந்துகொண்டு ரிஷப சேவை காட்சியை தரிசித்தனர்.