`குடிசைகள் இல்லாத மாநிலமாகத் தமிழகத்தை உருவாக்குகிறோம்’ - பேரவையில் ஓ.பி.எஸ் பேச்சு

குடிசைகளில் வசிப்பவர்களுக்கு பெரும்பாக்கத்தில் 20,000 வீடுகள், ரூ.15 கோடி செலவில் விளையாட்டு வீரர்களுக்கு விடுதிகள் கட்டித்தரப்படும் எனத் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.

சட்டமன்றம்

தமிழக சட்டமன்றத்தில் நடந்து வரும் மானியக் கோரிக்கை மீதான நேற்றைய விவாதத்தில் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி பேசும்போது, `தமிழ்நாடு முழுவதும் பேரூராட்சிகளில் விளையாட்டுப் போட்டிகள் நடத்த ரூ.25 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் ரூ.15 கோடி செலவில் விடுதி வசதிகள் செய்யப்பட உள்ளன. 
மேலும், 4 கோடி செலவில் சில இடங்களில் உடற்பயிற்சிக் கூடங்கள் அமைக்கப்பட உள்ளன. 1 கோடி ரூபாய் செலவில் பாரம்பர்ய கலைகளான களரி, சிலம்பம் ஆகியவை கற்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன. விளையாட்டுத் தொடர்பான தகவல்களை அறிந்துகொள்ளவும் பதிவு செய்யவும் ரூ.33 லட்சம் செலவில் மென்பொருள் உருவாக்கப்பட உள்ளது’ எனக் கூறினார்.

இதை அடுத்து, தி.மு.க உறுப்பினர் அரவிந்த் ரமேஷ், `குடிசைகள் அகற்றப்பட்டு அங்குள்ளவர்களுக்கு பெரும்பாக்கத்தில் வீடுகள் ஒதுக்கப்படுகிறது. பல்லாயிரக்கணக்கானோர் வாழும் அந்தப் பகுதியில் அடிப்படை வசதிகள்கூட இல்லை’ எனக் கூறினார். இதற்குப் பதிலளித்து பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், ‘தமிழகத்தைக் குடிசைகள் இல்லாத மாநிலமாக உருவாக்க அரசு முயற்சி செய்து வருகிறது. ஆற்றங்கரை ஓரங்களில், சுகாதாரமற்ற நிலையில் வாழும் 20,000 குடும்பங்களுக்கு பெரும்பாக்கத்தில் 20,000 வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை 8,000 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு அதில் குடும்பங்கள் குடி அமர்த்தப்பட்டுள்ளனர். குடியிருப்பு பகுதியில் அடிப்படை வசதிகள் பற்றாக்குறையாக இருந்தால் மீண்டும் ஆய்வு செய்து அதற்குத் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ எனக் கூறினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!