`ஆதார் எண் கொடுத்தால்தான் உரம் தருவேன்'- விவசாயியை அதிரவைத்த கடைக்காரர்

இந்தியாவில் இனி ஆதார் இன்றி ஓர் அணுவும் அசையாது என்ற நிலை உருவாகிக்கொண்டிருக்கிறது. ஆதார் கார்டு அறிமுகப்படுத்துவதற்கான ஆரம்பகட்ட வேலைகள் நடந்தபோது பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் எதிர்ப்புகள் உருவாகின. அப்பொழுது மத்திய அரசு, நம் நாட்டின் குடிமக்களை பற்றிய தகவல் அரசிடம் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஆதார் அறிமுகப்படுத்தப்படுவதாகவும், மக்களின் வழக்கமான நடவடிக்கைகளுக்கு இதை கட்டாயமாக்கமாட்டோம் என விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால், படிப்படியாக அனைத்திலும் ஆதார் கார்டை ஆதாரமாகக் காட்ட வேண்டும் எனக் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது.

ஆதார்

தற்பொழுது காவிரி டெல்டா மாவட்டங்களில் பம்பு செட்டில் விவசாயம் செய்பவர்கள் குறுவை நெல் சாகுபடிக்கான பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார்கள். இதற்கு தேவையான உரங்களை வாங்க செல்லும் விவசாயிகளிடம் உரக்கடைக்காரர்கள் ஆதார் கார்டு கேட்டு அதிர்ச்சியில் ஆழ்த்துகிறார்கள். இதுக்குக் கூடவா ஆதார் கேட்பாங்க என விவசாயிகள் புலம்பிக்கொண்டிருக்கிறார்கள். ``தனியார் உரக்கடைகள்ல உரம் வாங்குறதுக்கு ஏன் ஆதார் கார்டு கேட்கணும். நாங்க என்ன இலவசமாகவா உரம் கேட்குறோம். இல்லை மானிய விலையில கேட்குறோமா. தனியார் உரக்கடைக்காரங்களை நம்பி நாங்க எப்படி எங்களோட தனிப்பட்ட விவரங்களை எல்லாம் கொடுக்க முடியும். அரசு அதிகாரிகள் உரக்கடைக்காரங்ககிட்ட இருந்து எங்களோட ஆதார் நகலை வாங்குவாங்க. நாங்க உரம் வாங்குற அளவை வெச்சே, எங்களோட சாகுபடி வருமானத்தை கணக்குப் போட்டு, வரி விதிக்க வாய்ப்பு இருக்கு” என ஆதங்கப்படுகிறார்கள்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய விவசாயி ஒருவர், ``நான் கூட்டுக்குடும்பத்துல இருக்கேன். எங்களுக்கு மொத்தம் 20 ஏக்கர் நிலம் இருக்கு. இப்ப ஆரம்ப நிலையில ஒரு ஏக்கருக்குக் குறைந்தபட்சம் மூவாயிரம் ரூபாய்க்கு உரம் வாங்கினாலே மொத்தம் 60,000 ரூபாய்க்கு உரம் வாங்கியாகணும். விளைச்சல் இருக்கா இல்லையானு பார்க்காமல், நான் வாங்குன உரத்தோட அளவை மட்டுமே வெச்சி, ஏகப்பட்ட வரி விதிச்சிடுவாங்களோனு பயந்து போயி உரம் வாங்காமலே வந்துட்டேன்” எனக் கவலையோடு தெரிவித்தார். 

தஞ்சாவூரில் கோட்டாட்சியர் தலைமையில் நேற்று நடந்த குறைத்தீர்ப்பு கூட்டத்தில் இது பெரும் பிரச்னையாக வெடித்தது. ``தஞ்சை மாவட்டம் பூதலூரில் ஒரு உரக்கடையில் ஆதார் இருந்தால்தான் உரம் வழங்கப்படும்னு போர்டே வெச்சிருக்குறாங்க. இதை நாங்க அனுமதிக்க மாட்டோம்” என விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். அந்த போர்டை அகற்ற கோட்டாட்சியர் உத்தரவிட்டார். உரக்கடைக்காரர்களிடம் பேசியபோது, ``ஆதார் கார்டை வாங்கி வச்சி நாங்க என்ன செய்யப் போறோம். அரசு அதிகாரிகள் வாய்மொழியாக உத்தரவுப் போட்டதுனாலதான், விவசாயிகளிடம் ஆதார் கேக்குறோம்” என்றார்கள். இனி பால், மளிகைச் சாமான்கள் வாங்குவதற்குகூட ஆதார் கொடுக்க வேண்டிய நிலை வரலாம். என்னமோ போங்க. எல்லாம் அந்த ஆதார் செயல்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!