வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (14/06/2018)

கடைசி தொடர்பு:18:00 (14/06/2018)

`எங்களைக் கொன்னு புதைச்சிட்டு 8 வழி ரோடு போடட்டும்!' - எடப்பாடி பழனிசாமிமீது பாயும் விவசாயிகள்

பசுமை வழிச்சாலைக்காகக் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்பட்ட விதத்தால், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகக் கொதிக்கின்றனர் சேலம் விவசாயிகள்

`பசுமை வழிச்சாலைக்காகக் கருத்துக் கேட்புக் கூட்டம் எனக் கூறிவிட்டு, நெடுகிலும் போலீஸாரை நிறுத்தி அச்சப்பட வைக்கிறார்கள். எங்களைக் கொன்று புதைத்துவிட்டு ரோடு போடட்டும்' எனத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகக் கொதிக்கின்றனர் அப்பகுதி மக்கள். 

சேலம் டு சென்னை வரையிலான எட்டு வழிப் பசுமை சாலைத் திட்டம் குறித்து, பொதுமக்களிடம் கருத்துகளைக் கேட்கும் கூட்டம் இன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதையொட்டி, சேலம் கலெக்டர் வளாகம் முழுவதும் காவல்துறை குவிக்கப்பட்டிருந்தது. ஒவ்வோர் அடிக்கும் ஒரு போலீஸ் நிறுத்திவைக்கப்பட்டிருந்தார். இரண்டு வஜ்ரா வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தன. காலை 10 மணியிலிருந்தே பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூட்டம் கூட்டமாக வந்து கொண்டிருந்தார்கள். 

ஒவ்வொரு கிராம மக்களையும் தனித்தனியே மூன்று முறை முழு பரிசோதனை செய்த பிறகே, கலெக்டர் அலுவலகத்துக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். இந்த மக்களைத் தவிர வேறு யாரையும் போலீஸார் அனுமதிக்கவில்லை. இதுகுறித்து நம்மிடம் பேசிய விவசாயி சிவகாமி, ``நாங்க சின்னகவுண்டாபுரம் இராமலிங்கபுரத்திலிருந்து வந்திருக்கிறோம். எட்டு வழி ரோட்டால் எங்க ஊரில் உள்ள நூறு வீடுகள் பறிபோகிறது. இன்னைக்கு கலெக்டர் ஆபீஸ் வாங்கன்னு பத்திரிகையில போட்டிருந்தாங்க. நாங்களும் கலெக்டர் ஆபீசுக்கு வந்து பார்த்தால் எங்களை ஒரு தீவிரவாதிகளைப் போல நினைச்சு ஒரு அடிக்கு ஒரு போலீஸ் போட்டிருக்காங்க. இதை பார்த்து பயந்துகிட்டே உள்ளே போனோம். எங்க ஏரியா தனி தாசில்தார் மட்டும் இருந்தார். தனித்தனியே ஆட்சேபனை மனு எழுதிக் கொடுக்கச் சொன்னார். நாங்கள் ஆட்சேபனை மனு கொடுத்ததும் அதை வாங்கிட்டு சீட்டுக் கொடுத்தார். 6, 7 ம் தேதியும் நேரடியா கிராமத்துக்கே வந்து குறைகளைக் கேட்கறேன்னு சொன்னார்'' என்றார்.

அடுத்து நம்மிடம் பேசிய விவசாயி கவிதா, ``எங்களுக்கு 5 ஏக்கர் இருக்கிறது. 8 வழிச் சாலையால் 5 ஏக்கர் நிலமும் போகிறது. இதனால, கல்யாண வயதில் இருக்கும் மகனையும் மகளையும் கால்நடைகளையும் கூட்டிட்டு தெருவுக்குத்தான் வரணும். எங்களை கொன்னு புதைச்சிட்டு அதுக்கு மேல ரோடு போடுங்க. ஆட்சேபனை கூட்டம்னு சொல்லிட்டு மனுவை மட்டும் எழுதிக் கொடுத்துவிட்டுப் போகச் சொல்றாங்க. இது அச்சப்பட வைக்கற கூட்டம்' எனக் கொந்தளித்தார்.