வெளியிடப்பட்ட நேரம்: 19:42 (14/06/2018)

கடைசி தொடர்பு:19:42 (14/06/2018)

`அதிக காசு கொடுத்தும் தரமான விதைகள் கிடைப்பதில்லையே’ - காவிரி டெல்டா விவசாயிகள் ஆதங்கம்

``கர்நாடகம் தண்ணீர் தராது. குறுவை நெல் சாகுபடி கண்டிப்பாக இந்த ஆண்டும் நடைபெறாது என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில் தமிழக வேளாண்மைத்துறை அதிகாரிகள் இருந்திருக்கிறார்கள். இதனால்தான் போர்செட்டில் குறுவை நெல் சாகுபடி செய்யும் எங்களைப் போன்ற விவசாயிகள் தரமான விதைகள் கிடைக்காமல் அல்லல்படுகிறோம்'' எனக் காவிரி டெல்டா விவசாயிகள் ஆதங்கப்படுகிறார்கள்.

விதை- விவசாயிகள்

இது குறித்து அவர்களிடம் கேட்டபோது, ''காவிரி நீர் முறையாகக் கிடைத்தால் ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டு, காவிரி டெல்டா மாவட்டங்களில் சுமார் 4.5 லட்சம் ஏக்கருக்கு மேல் குறுவை நெல் சாகுபடி நடைபெறுவது வழக்கம். காவிரி நீர் வரவில்லையென்றால் குறுவை சாகுபடி பெருமளவு கைவிடப்படும். ஆனாலும், போர்செட்டில் விவசாயம் செய்யும் விவசாயிகள் சுமார் ஒன்றரை லட்சம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி மேற்கொள்வார்கள். ஆனால், இதற்கு ஏற்றவாறு தரமான விதை நெல்லை விநியோகம் செய்வதில் வேளாண்மைத்துறை அதிகாரிகள் கவனம் செலுத்துவதில்லை'' என விவசாயிகள் குற்றம்சாட்டுகிறார்கள்.

மேலும், ''காவிரி தண்ணீர் வராது என்ற எண்ணத்தின் காரணமாக விதை முன்னேற்பாடுகளில் அலட்சியம் காட்டுகிறார்கள். குறைவான விலையில் தரமான விதை நெல்லுக்கு வேளாண் விரிவாக்க மையங்களைத்தான் நாங்கள் பெரிதும் நம்பியிருக்கிறோம். ஆனால், இங்குள்ள அலுவலர்கள், விதைநெல் இல்லையெனச் சொல்லி, எங்களைத் தனியார் கடைகளுக்குப் போகச் சொல்கிறார்கள். கடைகளில் அதிக விலை கொடுத்தாலும்கூட தரமான விதைநெல் கிடைப்பதில்லை. வேளாண் விரிவாக்க மையங்களில் தினமும் என்னென்ன விதைகள் இருப்பு உள்ளது என்ற தகவலை விவசாயிகள் பார்வைக்கு வைக்க வேண்டும். உண்மையாக விதைநெல் தட்டுப்பாடு இருந்தால் இதை உடனடியாகச் சரிசெய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்கிறார்கள்.