வெளியிடப்பட்ட நேரம்: 18:35 (14/06/2018)

கடைசி தொடர்பு:18:37 (14/06/2018)

உதயகிரி கோட்டையும்... சுற்றுலாத் தலத்துக்கு வசூலிக்கும் அதிகக் கட்டணமும்!

உதயகிரி உயிரியல் பூங்கா சுற்றுலாத் தலத்தில் சாலையோரம் வாகனங்களை நிறுத்துவதற்கு பார்க்கிங் கட்டணம் என்ற பெயரில் கொள்ளையடிப்பதற்கு சுற்றுலாப்பயணிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

உதயகிரி கோட்டையும்... சுற்றுலாத் தலத்துக்கு வசூலிக்கும் அதிகக் கட்டணமும்!

உதயகிரி உயிரியல் பூங்கா சுற்றுலாத் தலத்தில் சாலையோரம் வாகனங்களை நிறுத்துவதற்கு பார்க்கிங் கட்டணம் என்ற பெயரில் கொள்ளையடிப்பதற்கு சுற்றுலாப் பயணிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுக்கும் முக்கிய இடங்கள் பல உள்ளன. அதில் ஒன்றுதான் புலியூர் குறிச்சி உதயகிரி கோட்டை. பத்மநாபபுரம் அரண்மனையைத் தலைமையிடமாகக்கொண்டு திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஆட்சி நடந்தபோது, போருக்குத் தேவையான படைக்கலம் தயாரிக்கும் பகுதியாக அமைந்த சிறுகோட்டைதான் உதயகிரி. இந்தக் கோட்டைக்குள் அமைந்திருக்கும் மலையில், துப்பாக்கித் தயாரிப்பதற்கான வார்ப்பு உலை முன்பு இருந்திருக்கிறது. 1600- ம் ஆண்டுவாக்கில் இந்தக் கோட்டை உருவாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. குளச்சல் போரில் திருவிதாங்கூர் படையிடம் சரணடைந்த தளபதி டிலனாய், இந்தக் கோட்டையில் நீண்டநாள் தங்கியிருந்தார்.

உதயகிரி கோட்டை

அவர்தான் நவீன ஆயுதங்களைப் பற்றியும், அவற்றைக் கையாளும் விதம் குறித்தும் திருவிதாங்கூர் படைக்குப் பயிற்சிகொடுத்தார். சுமார் 90 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும் இந்தக் கோட்டை, பத்மநாபபுரம் கோட்டைக்கு அருகில் அமைந்துள்ளது. 1777- ம் ஆண்டு மரணமடைந்த டிலனாய், இந்தக் கோட்டைக்குள் அடக்கம் செய்யப்பட்டார். டிலனாய் கல்லறைக்கு அருகில் அவரது மனைவி மார்க்கரெட்டா டிலனாய், இவர்களது மகன் ஜான் டிலனாய், டிலனாய்க்கு அடுத்த நிலை ராணுவ அதிகாரி பீட்டர் ஃப்ளோரிக் ஆகியோரது கல்லறைகள் இந்தக் கோட்டைக்குள் அமைந்துள்ளன. மேற்கூரை இல்லாத சர்ச் போன்ற வடிவமைப்பில் டிலனாய் கல்லறைப் பகுதி அமைந்துள்ளது. கோட்டைச் சுவர்களும், டிலனாய் கல்லறையும் தமிழகத் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் அமைந்துள்ளன.

உதயகிரி கோட்டை

இந்தக் கோட்டையில் தமிழக வனத்துறை சார்பில் உயிரியல் பூங்கா மற்றும் மூலிகைப் பண்ணை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு பறவைகள், விலங்குகளை நேரில் கண்டு ரசிக்கலாம். இது தவிர, கோட்டைக்குள் சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுக்கும் விதமாகப் `பர்மா பாலம்' என்கிற சுமார் 10 அடி உயரத்தில் தொங்கும் மரப்பாலம் ஒன்று அமைக்கப்பட்டிருந்து. மேலும், கயிறு மூலம் கமாண்டோ நெட் அமைக்கப்பட்டிருந்தது. ஒகி புயலில் பர்மா பாலம் மற்றும் கமாண்டோ நெட் ஆகியவை அறுந்துவிட்டன. வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள உயிரியல் பூங்காவைப் பார்த்து ரசிக்க 3 வயதுக்கு மேற்பட்ட ஒருவருக்கு ரூ.10 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் வாகனங்களை ரோட்டோரம் நிறுத்திவிட்டுச் செல்லும் அவலம் உள்ளது. அப்படிச் சாலையோரம் வாகனம் நிறுத்துவதற்காக அடாவடி கட்டணம் வசூலிப்பதுதான் அதைவிடக் கொடுமையாக உள்ளது.

உதயகிரி கோட்டை

உதயகிரி கோட்டைக்கு வெளியே பத்மநாபபுரம் நகராட்சி சாலையோரத்தில் பஸ் நிறுத்த ரூ.150, வேன், டெம்போ டிராவலர் நிறுத்த ரூ.100, கார் நிறுத்த ரூ.50, ஆட்டோ நிறுத்த ரூ.25, இரு சக்கர வாகனம் நிறுத்த ரூ.5-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. பார்க்கிங் எனத் தனி இடம் ஒதுக்கிக்கொடுக்க நகராட்சி நடவடிக்கை எடுக்கவில்லை. சாலையோரத்தில் வாகனங்களை நிறுத்திக்கொள்ள கொள்ளைக் கட்டணம் வசூலிக்கும் சுற்றுலாத் தலம் இதுவாகத்தான் இருக்கும் எனச் சுற்றுலாப் பயணிகள் தலையில் அடித்துக்கொண்டே பணம் கொடுத்துச்செல்லும் அவலநிலை உள்ளது.

உதயகிரி கோட்டை

``இப்படி அடாவடியாய் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்படுவதால், பெரும்பாலும் சுற்றுலாப் பயணிகள் பலரும் பாதிக்கப்படுகின்றனர். இதனால், வாக்குவாத மல்லுக்கட்டுகளும் நடந்துவருகின்றன. பத்மநாபபுரம் நகராட்சி சார்பில் தனிநபருக்குக் குத்தகைக்கு விடப்பட்டு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நகராட்சியின் இந்தச் செயலுக்கு உயிரியல் பூங்காவைப் பராமரிக்கும் மாவட்ட வனத்துறையும் அவ்வப்போது எதிர்ப்புத் தெரிவித்துவருகிறது. ஆனாலும், இதுவரை தீர்வு எட்டவில்லை. இந்த விவகரத்தில் மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்கின்றனர் சுற்றுலாப் பயணிகள்.

நடவடிக்கை எடுக்குமா அரசு?


டிரெண்டிங் @ விகடன்