வெளியிடப்பட்ட நேரம்: 22:40 (14/06/2018)

கடைசி தொடர்பு:22:40 (14/06/2018)

மதுக்கடையை உடைத்து மதுபானங்கள் கொள்ளை..! ராமநாதபுரத்தில் அட்டகாசம்

 கமுதி அருகே அபிராமத்தில் நள்ளிரவில் டாஸ்மாக் மதுபான கடையை உடைத்து ரூ. 3 லட்சம் மதிப்புள்ள மதுப்பாட்டில்களைக் கொள்ளையர்கள் திருடிச் சென்றனர்.

கமுதி அருகே அபிராமத்தில் நள்ளிரவில் டாஸ்மாக் மதுபானக் கடையை உடைத்து ரூ.3 லட்சம் மதிப்புள்ள மதுப்பாட்டில்களைக் கொள்ளையர்கள் திருடிச் சென்றனர்.

மதுபாட்டில்கள் திருடப்பட்ட அபிராமம் டாஸ்மாக் கடை

தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைப் பகுதிகளில் மதுக்கடைகளைத் திறக்க நீதிமன்றம் தடை விதித்தது. இந்நிலையில் பெரும்பாலான நகர் மற்றும் கிராமப் பகுதிகளில் மதுக்கடைகளைத் திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதுடன், எதிர்ப்பை மீறி திறக்கப்படும் மதுபானக் கடைகளை பொதுமக்களே அடித்து நொறுக்கி வருகின்றனர். இதனால் வேறு வழியின்றி ஊருக்கு ஒதுக்குப் புறமான இடங்கள், மயானப் பாதைகள், காட்டுப்பகுதிகளில் மதுக்கடைகள் இயங்கி வருகின்றன. 

இது ஒரு புறம் குடிமகன்களுக்கு வசதியாக இருந்தாலும் அப்பகுதியில் உள்ள மதுபான கடையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு அச்சுறுத்தலையே ஏற்படுத்தி வருகிறது. ஊருக்கு ஒதுக்குப் புறமான பகுதிகளில் உள்ள மதுக்கடைகளில் இரவு நேரங்களில் பணம் மற்றும் மதுபாட்டில்கள் கொள்ளை போவதும், மதுபான கடைகளில் பணியாற்றும் ஊழியர்களைத் தாக்கி வழிப்பறி செய்வதும் ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர்ச்சியாக நடந்துவருகிறது. 

நேற்று இரவு கமுதி அருகே உள்ள அபிராமம் மதுபான கடையை உடைத்து ரூ.3 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்களைக் கொள்ளையர்கள் திருடிச் சென்றனர். அபிராமம் வீரசோழன் சாலையில் மயானத்துக்கு அருகே இரு டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது. இவற்றில் ஒரு கடையின் பூட்டை உடைத்த கொள்ளையர்கள் அங்கு பணம் ஏதும் இல்லாததால், கடையில் இருந்த விலை உயர்ந்த 43 மதுபான பெட்டிகளைத் திருடிச் சென்றுள்ளனர். இவற்றின் மதிப்பு சுமார் 3 லட்சம் ஆகும். இது குறித்து அபிராமம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஆர்.எஸ்.மங்களம் ஆற்றுப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் பணியாற்றும் கணேஷ்குமார் என்ற ஊழியரை வழிப்பறி கொள்ளையர்கள் தாக்கி அவரிடம் இருந்த 20,000 ரூபாயை அபகரித்துச் சென்றனர். வழிப்பறி கொள்ளையர்களிடமிருந்து உயிர் தப்பிய அவர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக ஆர்.எஸ்.மங்களம் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில் போதிய காவலர்கள் இல்லாததால் விசாரணைக்கு வர முடியவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.