வெளியிடப்பட்ட நேரம்: 23:30 (14/06/2018)

கடைசி தொடர்பு:23:30 (14/06/2018)

`இன்னும் 3 மாதமோ, 6 மாதமோ'- கலகலத்த தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ முத்தையா

இன்னும் 3 மாதமோ, 6 மாதமோ இது போன்று வீணாகப் போகப் போகிறது. ஒரு நீதிபதி எங்களுக்கு எதிராகவும், மற்றொருவர் எங்களுக்கு ஆதரவாகவும் தீர்ப்பளித்திருப்பது நீதியையும் சட்டத்தையும் சார்ந்தது.

``பதவி நீக்க வழக்கில் இன்று உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினால் தொகுதி மக்களுக்குதாம் அதிக பாதிப்பு. எங்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை'' எனப் பரமக்குடி எம்.எல்.ஏ-வாக இருந்து பதவி நீக்கப்பட்ட டாக்டர் முத்தையா தெரிவித்தார்.

முத்தையா
 

டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்களாகச் செயல்பட்ட 18 எம்.எல்.ஏ-க்களை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்தார். இதை எதிர்த்து அவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி துரைச்சாமி தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-க்களின் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த இடைக்கால தடை விதித்தார். இதைத் தொடர்ந்து இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி ரவிச்சந்திரபாபு, வழக்கினை 2 நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு மாற்றி பரிந்துரை செய்தார். இதைத் தொடர்ந்து தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் தலைமையிலான அமர்வில் இந்த வழக்கு விசாரணை நடந்தது. கடந்த ஜனவரி மாதம் இந்த வழக்கில் வாதங்கள் முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டன. ஒத்திவைக்கப்பட்ட தீர்ப்பு இன்று கூறப்பட்டது. இதில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, சபாநாயகரின் உத்தரவு செல்லும் எனவும், நீதிபதி சுந்தர், சபாநாயகரின் உத்தரவு செல்லாது எனவும் மாறுபட்ட தீர்ப்பு வழங்கினர். இதனால் இந்த வழக்கு 3-வது நீதிபதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னையில் இருக்கும், பரமக்குடி எம்.எல்.ஏ-வாக இருந்து பதவிநீக்கம் செய்யப்பட்ட டாக்டர் முத்தையாவிடம் இந்தத் தீர்ப்பு குறித்துப் பேசினோம். அவர், ``இந்தத் தீர்ப்பினால் பாதிக்கப்பட போவது 18 சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லை. மாறாக எங்களை தேர்ந்தெடுத்த 18 தொகுதிகளைச் சேர்ந்த மக்களுக்குதாம் இழப்பாகும். அதற்கு காரணம், இந்த வழக்கில் ஏற்பட்ட காலதாமதம். ஏற்கெனவே 10 மாதம் முடிந்து விட்டது. இன்னும் 3 மாதமோ, 6 மாதமோ இது போன்று வீணாகப் போகப் போகிறது. ஒரு நீதிபதி எங்களுக்கு எதிராகவும், மற்றொருவர் எங்களுக்கு ஆதரவாகவும் தீர்ப்பளித்திருப்பது நீதியையும் சட்டத்தையும் சார்ந்தது. இதனால் பாதிக்கப்பட போவது தொகுதி மக்கள்தாம். இந்தியா முழுக்க ஒரே சட்டம்தான் என இருக்கும்  நிலையில் பாண்டிச்சேரிக்கு ஒன்றாகவும், தமிழ்நாட்டுக்கு ஒன்றாகவும் நீதிமன்றத் தீர்ப்பு இருப்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை.

எது எப்படியோ, என்றோ ஒரு நாள் தீர்ப்பு வரும். அது நல்ல தீர்ப்பாக வரும். அதுவரை நாங்கள் செயல்பட முடியாத நிலை இருப்பது எங்களுக்கு வருத்தத்தை தருகிறது. எங்களுக்கு எதிராகத் தீர்ப்பு வந்திருந்தால்கூட நாங்கள் இடைத்தேர்தலில் நின்று வென்று மக்களுக்கான பணிகளைச் செய்திருப்போம். இப்போது எங்களை நம்பி வாக்களித்த மக்களுக்கு எந்தப் பணிகளையும் செய்ய முடியாத சூழலில் உள்ளோம். குடிநீர் உள்ளிட்ட அடிப்படை பிரச்னைகளுக்குக்கூட எம்.எல்.ஏ-க்களை நம்பியிருக்கும் 18 தொகுதி மக்களுக்குதாம்  இந்தத் தீர்ப்பினால் கடும் பாதிப்பு'' என்றார்.