வெளியிடப்பட்ட நேரம்: 19:20 (14/06/2018)

கடைசி தொடர்பு:19:20 (14/06/2018)

`எம்.எல்.ஏ-க்கள் தீர்ப்பால் பயனடைந்தது எடப்பாடி பழனிசாமிதான்’- ஓய்வுபெற்ற நீதிபதி ஹரிபரந்தாமன் கருத்து!

18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட தீர்ப்பில் உடனடிப் பயனாளி எடப்பாடி பழனிசாமி என ஓய்வுபெற்ற நீதிபதி ஹரிபரந்தாமன் கருத்து தெரிவித்துள்ளார்.

18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட தீர்ப்பில் உடனடிப் பயனாளி எடப்பாடி பழனிசாமி என ஓய்வுபெற்ற நீதிபதி ஹரிபரந்தாமன் கருத்து தெரிவித்துள்ளார். 

வழக்கு

எடப்பாடி அரசுமீது தங்களுக்கு நம்பிக்கையில்லை எனக் கூறி ஆளுநரிடம் மனு அளித்த 18 எம்.எல்.ஏ-க்கள் மீது நடவடிக்கை எடுக்க அ.தி.மு.க கொறடா ராஜேந்திரன் சபாநாயகருக்குப் பரிந்துரை செய்தார். இதையடுத்து 18 எம்.எல்.ஏ-க்களைத் தகுதி நீக்கம் செய்வதாக சபாநாயகர் தனபால் அறிவித்தார். அதனால் சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ-க்கள் சார்ந்த தொகுதிகளுக்குச் சட்டப்பேரவை உறுப்பினர்கள் இல்லாத நிலை உருவானது. தகுதி நீக்கத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்று வெளியானது. அதில் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். இதையடுத்து இந்த வழக்கு 3-வது நீதிபதிக்கு மாற்றப்பட உள்ளது.

ஹரி பரந்தாமன்இந்த விவகாரம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஹரிபரந்தாமனைத் தொடர்புகொண்டு பேசினோம். அவர் பேசுகையில், `இரு மாறுபட்ட தீர்ப்புகளைப் பார்க்கும்போது, சரியான தீர்ப்பு இன்னும் வெளியாகவில்லை என்பது தெளிவாகிறது. மூன்றாவது நீதிபதி தீர்ப்பு வழங்கும் வரை வழக்குக்குத் தீர்வு காண முடியாது. அடுத்து 3-வது நீதிபதியை நியமித்து, அவர் பலதரப்பு வாதங்களைக் கேட்கவேண்டும். அவர் தீர்ப்பு வழங்க பல மாதங்கள் தேவைப்படும்; ஆக முழுமையான தீர்ப்பு வர காலதாமதமாகும். எனவே, இதில் உடனடிப் பயனாளி எடப்பாடி பழனிசாமிதான். இந்நிலையில் அடுத்த தீர்ப்பு வருவதற்குள் தற்போதைய நீதிபதி இந்திரா பானர்ஜி உச்ச நீதிமன்றம் செல்லலாம். இதில் விநோதம் என்னவென்றால் எடப்பாடி பழனிசாமி அரசின் மேல் நம்பிக்கையில்லை என வாக்களித்த ஓ.பன்னீர் செல்வம் தற்போது துணை முதல்வர். அ.தி.மு.க அரசின் மேல் நம்பிக்கை உள்ளது; எடப்பாடி மீது நம்பிக்கையில்லை எனக் கருத்துத் தெரிவித்த 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம். வாழ்க ஜனநாயகம்!’ என அவர் கூறினார். மேலும் சட்டப்பேரவை உறுப்பினர்களின்றி காலியாக உள்ள 18 தொகுதிகள் குறித்த கருத்து கேட்டதற்கு, `அனாதைகளாக்கப்பட்ட தொகுதிகளின் காலவரையரை நீட்டிப்பு’  இதுதான் தற்போது வழங்கப்பட்டுள்ள தீர்ப்பால் ஏற்பட்ட பயன். வாழ்க ஜனநாயம் என மறுமுறை கூறி முடித்தார் நீதிபதி ஹரிபரந்தாமன்.