வெளியிடப்பட்ட நேரம்: 01:30 (15/06/2018)

கடைசி தொடர்பு:01:30 (15/06/2018)

தூத்துக்குடியில் தடை முடிந்தும் கடலுக்குச் செல்ல முடியாமல் தவிக்கும் மீனவர்கள்..!

மீன்களின் இனப்பெருக்கத்திற்காகத் தமிழகத்தில் விதிக்கப்பட்டிருந்த தடைக் காலம் முடிவடைந்தும், துாத்துக்குடி மீனவர்கள் கடலுக்குள் செல்லமுடியாமல் தவித்து வருகின்றனர். 

மீனவர்கள்

ஒவ்வொரு ஆண்டும் வங்கக்கடலில், ஏப்ரல் முதல் ஜுன் மாதம் வரையிலான காலங்கள் மீன்களின் இனப்பெருக்க காலமாக கருதப்படுகிறது. இந்தக் கால கட்டத்தில், மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லும்போது முட்டைகள், மீன் குஞ்சுகளுக்கு ஆபத்து ஏற்பட்டு உற்பத்தி பாதிக்கப்படும் என்பதால், ஏப்ரல் மாதத்தில் துவங்கி, 61 நாட்கள், விசைப்படகு மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன் பிடிக்கத் தடை விதிக்கப்படுகிறது.

இந்த ஆண்டு, கடந்த ஏப்ரல் 14 முதல் ஜுன் 14-ம் தேதி வரை மீன் பிடித்தடை காலமாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தத் தடைக் காலம் இன்று(14.06.18) இரவு 12 மணியுடன் முடிவுக்கு வருகிறது. இத் தடைக்காலம் முடிந்து அனைத்து பகுதி மீனவர்களும் நள்ளிரவு முதல் மீன்பிடிக்கச் செல்லத் தயாராகி வருகின்றனர். 

இந்நிலையில் துாத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் கடலுக்குள் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். துாத்துக்குடி  துறைமுகத்தில், 250 மீன்பிடி விசைப்படகுகள் உள்ளன. இதில், 160 படகுகள் முறையாக பதிவு செய்யப்படாவை. இந்த படகுகளின்  நீளம், 100 அடிக்கு அதிகமாகவும், என்ஜினின்  இழுவைத்திறன், 140 குதிரைத்திறனுக்கு அதிகமாகவும் உள்ளது. மாநில கடல் சட்டம் 1983-ன் படி அவை பதிவு செய்ய முடியாதவை.

மீனவர்கள் தங்களின் படகுகளை மத்திய அரசின் எம்.எம்.டி அமைப்பு மூலம் பதிவு செய்து, தங்களைக் கடலுக்குள் செல்ல அனுமதிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த நிலையில், துாத்துக்குடி நாட்டுபடகு, விசைப்படகு மீனவர்கள் பிரச்னை காரணமாகவும், வழக்கு காரணமாகவும், கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் இருந்து வந்தனர். 

இந்த தடைகாலம் முடியும் போதாவது, மீன்பிடிக்கச் செல்லலாம் என விசைப்படகு மீனவர்கள் நேற்று, மீன்வள இணை அதிகாரியை  சந்தித்து பேச்சுவார்தை நடத்தினர். துாத்துக்குடி துணை ஆட்சியர், பிரசாந்த் முன்னிலையில் நடந்த பேச்சு வார்த்தை இரவு வரை நீண்டது.  இதில் இன்று காலையில், படகுகளை பதிவு செய்து தருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதன்படி விசைப்படகு மீனவர்கள் தங்களின் படகுகளை பதிவு செய்ய மீன்வள அலுவலகத்திற்கு சென்றபோது, மாலை வரையிலும் அதிகாரிகள், ஊழியர்கள் யாரும் அலுவலகம் வரவில்லை. இதனால், மாலை வரையில் மீனவர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடந்து இணை இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தடைக்காலம் முடிந்தும், கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல முடியாமல் இருப்பது, வாழ்வாதாரத்தை பாதிப்பதாக உள்ளதாக விசைப்படகு மீனவர்கள் கவலையுடன் தெரிவித்துள்ளனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க