ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் டீம் ஆஸ்திரேலியா செல்கிறது..!

தமிழ்நாட்டிலிருந்து கடத்தப்பட்ட மிகவும் பழமையான சிலைகளை ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வெற்றிகரமாக மிட்டு வருகிறார்கள். 1.49 கோடி ரூபாய் விலை மதிப்புள்ள சோழர் காலத்துச் சிலைகள் சமீபத்தில் ஆஸ்திரேலியாவிலிருந்து மீட்கப்பட்டது.

பொன்மாணிக்கவேல்

இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் உள்ள மேலும் 7 சிலைகளை மீட்டு கொண்டு வரும் முயற்சியில் ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் டீம் தீவிரமாக இறங்கியுள்ளது. தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் அருகே உள்ள மானம்பாடி கிராமத்தில் நாகநாதசாமி கோயில் உள்ளது. இங்கிருந்து ஆயிரம் ஆண்டுகள் பழமையான, நடனமாடும் கோலத்தில் சம்பந்தர் சிலை திடீரென காணாமல் போனது.

அந்தச் சிலையின் தற்போதைய மதிப்பு 4.59 கோடி. சீர்காழி சாயவனம் சிவன் கோயிலில் குழந்தை வடிவில் இருந்த பஞ்சலோக சிலை ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. அதுவும் இங்கிருந்து கடத்தப்பட்டது. மயிலாடுதுறை, திருநெல்வேலி உள்ளிட்ட இன்னும் பல இடங்களிலிருந்து திருடப்பட்ட சிலைகள் ஆஸ்ரேலியாவில் உள்ள மியூசியத்தில் இருப்பதை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் உறுதிப்படுத்தினார்.

அந்தச் சிலைகள் தமிழ்நாட்டிலிருந்து திருடப்பட்ட சிலைகள்தான் என்பதற்கான ஆதாரங்களைத் திரட்டி வந்தனர். இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் உள்ள சிலைகளை மீட்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது. ஆஸ்திரேலியா தூதரக அதிகாரி சூசன்கிரேஸ், ஐ.ஜி.பொன்மாணிக்கவேல், அமைச்சர் பாண்டியராஜன் உள்ளிட்டவர்கள் இதில் கலந்து கொண்டார்கள். ஆஸ்திரேலியா அருங்காட்சியகத்தில் உள்ள சிலைகளில் 7 சிலைகள் தமிழ்நாட்டிலிருந்து கட்டத்தப்பட்டவை என்பதற்கான ஆதாரங்கள் அடங்கிய ஆவணங்களை பொன்மாணிக்கவேல் சமர்பித்தார். அதனை ஏற்றுக்கொண்ட ஆஸ்திரேலியா அதிகாரிகள் சிலைகளைத் திருப்பிக் கொடுக்க சம்மதம் தெரிவித்தனர். அந்த 7 சிலைகளையும் மீண்டும் தமிழ்நாட்டிற்கு கொண்டுவர ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் டீம் விரைவில் ஆஸ்திரேலியா செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!