வெளியிடப்பட்ட நேரம்: 02:30 (15/06/2018)

கடைசி தொடர்பு:02:30 (15/06/2018)

நீதிபதியின் மாறுபாடு கேள்விகளை எழுப்புகிறது - சிபிஎம் கட்சி எழும்பும் சந்தேகம்!

18 எம்.எல்.ஏ.

புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் முடிவின்மீது தலையிட்டு தீர்ப்பு வழங்கியுள்ள தலைமை நீதிபதி, 18 எம்.எல்.ஏக்கள் தொடர்பாக  தமிழ்நாட்டு சட்டப்பேரவையின் தலைவரின் முடிவின் மீது தலையிட விரும்பவில்லை என மாறுபட்டுக் கூறுவது பல கேள்விகளை எழுப்புகிறது என்று சி.பி.எம் கட்சி விமர்சனம் செய்துள்ளது. 

தமிழக சட்டப்பேரவையின் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 உறுப்பினர்கள் தொடர்பான சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து பல்வேறு கருத்துகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் சிபிஎம் கட்சியும் உயர் நீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பை, புதுச்சேரீ சட்டப்பேரவை விவகாரத்தோடு ஒப்பிட்டு விமர்சனம் செய்துள்ளது. 

இது குறித்து சிபிஎம் கட்சியின் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இன்று மாலை அறிக்கையொன்றை வெளியிட்டார். அதன் விவரம்:

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீது நம்பிக்கை இழந்துவிட்டதாக டிடிவி தினகரன தரப்பு 18 எம்.எல்.ஏ.க்கள் ஆளுநரிடம் மனு அளித்ததற்காக அவர்களைத் தகுதிநீக்கம் செய்து பேரவைத்தலைவர் கடந்த 18-9-2017 அன்று உத்தரவிட்டார். தாங்கள் கட்சியிலிருந்து ராஜினாமா செய்யவும் இல்லை, கொறடா உத்தரவு அளிக்கப்பட்டு அதை மீறவும் இல்லை, எனவே தங்களைத் தகுதி நீக்கம் செய்தது செல்லாது என இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் 18 எம்எல்ஏ-க்கள் வழக்கு தாக்கல்செய்தனர். சுமார் 4 மாத காலம் வரை விசாரணை நடந்து ஜனவரி 23-ம் தேதியோடு முடித்துத் தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டது. இவ்வழக்கில் இன்று மதியம் 1 மணியளவில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் இருவரும் தீர்ப்பு வழங்கியுள்ளனர். ஆனால் இரண்டு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பினை வழங்கியுள்ளார்கள்.

அதாவது தலைமை நீதிபதி பேரவைத் தலைவரின் உத்தரவு செல்லும் எனவும், மற்றொரு நீதிபதி பேரவைத் தலைவரின் உத்தரவு செல்லாது எனவும் தீர்ப்பளித்துள்ளனர். தற்போது இவ்வழக்கு மூன்றாவது நீதிபதிக்குமுன் சமர்ப்பிக்கப்பட்டு, அவரது தீர்ப்புக்காக காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

அதிமுக அரசு நீடிக்கமுடியுமா முடியாதா என்ற முக்கியமான கேள்வி எம்எல்ஏ-க்கள் பதவிநீக்கம் தொடர்பான இவ்வழக்கின் தீர்ப்பைப் பொறுத்தே உள்ளது. இதுபோன்ற முக்கிய அரசியல் பிரச்னைகளில் பலமாதங்கள் இழுத்தடித்து தீர்ப்பு வழங்குவது பொருத்தமானது அல்ல. மேலும், 18 தொகுதிகளில் உள்ள வாக்காளர்கள் மற்றும் பொதுமக்களுடைய அடிப்படைத் தேவைகளைப் பூர்த்திசெய்வதற்கு வழி இல்லாமல் அம்மக்கள் இரண்டாந்தரக் குடிமக்களாக வாழ்கிற நிலைமை நீண்ட காலம் தொடர்வது மக்களின் அடிப்படை உரிமைகளை நிராகரிப்பதாக அமையும். இது ஜனநாயகத்துக்கு எதிரானதும் கூட. மேலும் இரண்டு நீதிபதிகள் மட்டுமே இருக்கும் அமர்வில் இத்தகைய வேறுபாடு எழுந்தால் பிரச்னை ஏற்படும் என்கிற சூழலில், முதலிலேயே 3 பேர் கொண்ட அமர்வை அமைத்திருக்கலாமே என்ற கருத்தும் முன்வருகிறது. எனவே, 9 மாதங்களுக்கு மேல் காலம் கடந்துவிட்ட இப்பிரச்னையில் 3ஆவது நீதிபதி மேலும் காலம் கடத்தாமல் ஒரு குறுகிய கால அவகாசத்துக்குள் வழக்கை முடித்து தீர்ப்பு வழங்கவேண்டும். 

தலைமை நீதிபதி தனது தீர்ப்பில் பேரவைத்தலைவர் உரிய ஆய்வுகளுக்குப் பிறகே முடிவெடுத்துள்ளதாகவும், பேரவைத்தலைவரின் உரிமை மீது தான் குறுக்கிட விரும்பவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இத்தகைய வாதம் ஏற்புடையதல்ல. இதே தலைமை நீதிபதி புதுச்சேரியில் துணைநிலை ஆளுநரால் நியமனம் செய்யப்பட்ட 3 சட்டப்பேரவை உறுப்பினர்களை சட்டமன்றத்தில் அனுமதிக்க முடியாது என புதுச்சேரி சட்டப்பேரவைத்தலைவர் மேற்கொண்ட முடிவு தவறானது எனவும், அந்த உறுப்பினர்களை சட்டமன்றத்திற்குள் அனுமதிக்க வேண்டுமெனவும் சில மாதங்களுக்கு முன் தீர்ப்பு வழங்கினார். அப்படியானால் புதுச்சேரி பேரவைத் தலைவர் ஆய்வு செய்யாமல் முடிவெடுத்தார் என்று எடுத்துக் கொள்வதா? ஆய்வு செய்வதற்கு என்ன அளவுகோல்?

புதுச்சேரி பேரவைத்தலைவரின் முடிவின்மீது தலையிட்டு தீர்ப்பு வழங்கியுள்ள தலைமை நீதிபதி தமிழ்நாடு சட்டப்பேரவையின் தலைவரின் முடிவின் மீது தலையிட விரும்பவில்லை என மாறுபட்டுக் கூறுவது  பல கேள்விகளை எழுப்புகிறது. இத்தகைய கேள்விகளுக்கு தலைமை நீதிபதி உரிய விளக்கங்கள் அளித்தால் மட்டுமே நீதித்துறையின் மீது மக்களுக்குள்ள நம்பிக்கையை பாதுகாக்கமுடியுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தெரிவித்துக்கொள்கிறது” என்று கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.