வெளியிடப்பட்ட நேரம்: 02:00 (15/06/2018)

கடைசி தொடர்பு:02:00 (15/06/2018)

மாற்றுத்திறனாளி குழந்தைகள் என்று வருந்திவிட வேண்டாம்..! பெற்றோர்களுக்கு பொன்னார் அறிவுரை

திருப்பூரில் இன்று மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச செயற்கை உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் கிரிஷன் பால் குர்ஜார், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் தமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்படப் பலர் கலந்துகொண்டனர். விழாவில் சுமார் 2,317 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூபாய் 1 கோடியே 67 லட்சம் மதிப்பிலான செயற்கை உபகரணங்கள் வழங்கப்பட்டன.

பொன் ராதாகிருஷ்ணன்

விழாவில் சிறப்புரையாற்றிய பொன்.ராதாகிருஷ்ணன்,  ``பிறக்கப்போகும் குழந்தைகளை கருவிலேயே புத்திக்கூர்மையோடும், சிறந்த உடலமைப்போடும் உருவாக்கிவிட முடியும் என்பதை நான் செய்தித்தாள்களிலும் புத்தகங்களில் படித்திருக்கிறேன். நம் புராணங்களிலும், இதிகாசங்களிலும்கூட அதுபற்றி இருக்கின்றன. எனவே கருவுற்ற தாய்மார்களுக்குச் சத்துள்ள ஆகாரங்களைக் கொடுப்பதோடு, நல்ல சிந்தனைகளையும் கூற வேண்டும். தப்பித்தவறி மாற்றுத்திறனாளி குழந்தையாக பிறந்துவிட்டால்கூட நாம் என்றைக்கும் வருந்திவிடக்கூடாது. அந்தக் குழந்தையை சீரோடும், சிறப்போடும் வளர்த்தெடுக்க இறைவன் நமக்கொரு வாய்ப்பை வழங்கியிருக்கிறான் என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும். இன்றைய காலகட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் மிகவும் கெளரவமாக மதிக்கப்படுகிறார்கள். அப்படி மதிக்க வேண்டியதற்கான தேவைகளும் நிறைய இருக்கின்றன. உடலில் குறைபாடுகள் என்பது பிறப்பிலே மட்டுமல்ல, எப்போது வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. 

மோடி தலைமையிலான மத்திய அரசு நாடு முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளிகளின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்காக ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக 6 வயது முதல் 18 - வயது வரையிலான மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு கட்டாய இலவச கல்வியை வழங்குவதோடு, 3% சதவிகிதமாக இருந்த வேலை வாய்ப்பு இட ஒதுக்கீட்டை 4% சதவிகிதமாக உயர்த்தியிருக்கிறது. தமிழ்நாட்டில் மொத்தம் 7 லட்சம் மாற்றுத்திறனாளிகள் இருக்கிறார்கள். அதில் திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் 24 ஆயிரம் பேர் உள்ளனர். திருப்பூர் மாநகரில் உள்ள தொழிலதிபர்கள், தங்களது நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகள் பணியாற்றுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அவ்வாறு செய்தால், உலகில் எங்குமே இல்லாத அளவுக்கு வேலைவாய்ப்புகள் அதிகம் பெற்ற மாற்றுத்திறனாளிகளைக் கொண்ட மாவட்டமாக திருப்பூர் மாவட்டம் திகழும்" என்றார்.