கைது நடவடிக்கையைக் கண்டித்து உண்ணாவிரதம் - தூத்துக்குடி வழக்கறிஞர்கள் சங்கம் அறிவிப்பு!

தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டைக் கண்டித்தும், நள்ளிரவில் பொதுமக்கள் கைது செய்யப்படுவதை கண்டித்தும் தூத்துக்குடி வழக்கறிஞர் சங்கம் வரும் 21ம் தேதி உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்துள்ளது.

வழக்கறிஞர்கள் சங்கத்தினர்

தூத்துக்குடி  ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடிட வலியுறுத்தியும், தங்களின் கோரிக்கையை அரசிற்குத் தெரியப்படுத்தும் விதமாகப் பேரணியாக ஆட்சியர் அலுவலகம் நோக்கிச் சென்ற போது ஏற்பட்ட கலவரத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இச்சம்பவத்திற்கு எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாமல் பல தரப்பினரும் கடும் கண்டனத்தைத் தெரிவித்து வருகின்றனர். இதனைக் கண்டித்து வரும் 18ம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டனப் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். 

இந்நிலையில் வரும் 21ம் தேதி இச்சம்பவத்தைக் கண்டித்தும், போலீஸாரின் கைது நடவடிக்கையைக் கண்டித்தும் ஒருநாள் உண்ணாவிரதம் இருக்க தூத்துக்குடி வழக்கறிஞர்கள் சங்க கூட்டத்தில்  முடிவெடுத்து அறிவித்துள்ளனர்.இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய, இச்சங்க நிர்வாகி இக்னேஷியஸ்,  ``அமைதி வழியில் போராட்டம் நடத்திய மக்கள் மீது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டினைக் கண்டித்தும், இரவில் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருவதை நிறுத்திட வலியுறுத்தியும்  தூத்துக்குடி வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் வரும் 21 ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படச் சங்க கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. 

நள்ளிரவில் வீடுகளில் புகுந்து போலீஸார், கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக மடத்தூர், பண்டாரம்பட்டி, குமரெட்டியாபுரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த  மக்கள் புகார் மனுவை வழக்கறிஞர்கள் சங்கத்தில் அளித்துள்ளனர். இந்தக் கைது நடவடிக்கையை உடனடியாக  நிறுத்திட வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் டெல்லி உச்ச நீதிமன்ற நீதிபதி ஆகியோருக்குக் கோரிக்கை மனுவைச் சங்கத்தின் மூலம் அனுப்ப இருக்கிறோம். ஸ்டெர்லைட் போராட்டத்தில் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வரும் அனைவருக்கும், சட்டப்படி உதவிகள் செய்திடவும், கட்டணமின்றி நீதிமன்றத்தில் இலவசமாக வாதாடிடும் சேவையை இப் பிரச்சினை முடியும் வரை தொடர்வது எனவும் தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம்." என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!