வெளியிடப்பட்ட நேரம்: 04:00 (15/06/2018)

கடைசி தொடர்பு:08:42 (15/06/2018)

பயணிகளை ஏற்றுவதில் போட்டி... தாக்கப்பட்ட அரசுப்பேருந்து டிரைவர்... - குமரியில் பரபரப்பு!

யணிகளை ஏற்றும் போட்டியில் அரசுப் பேருந்து டிரைவரை தாக்கியவர்களைக் கைது செய்யக்கோரி போக்குவரத்துக்கழக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் குமரி மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

டிரைவர் போராட்டம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசுப் பேருந்துகள் இயக்கப்படும் வழித்தடங்களில் தனியார் வேன்களும் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் முந்திச்சென்று பயணிகளை ஏற்றிச்செல்வதில் அரசுப் பேருந்துகளுக்கும் தனியார் வேன்களுக்கும் போட்டி ஏற்படும். இது சில நேரங்களில் மோதலாக உருவெடுக்கும். மார்த்தாண்டம் - அருமனை வழித்தடத்தில் இயங்கும் அரசுப் பேருந்துக்கும் தனியார் வேனுக்கும் இன்று பயணிகளை அழைப்பதில் போட்டி இருந்திருக்கிறது. இதையடுத்து அருமனையிலிருந்து மார்த்தாண்டம் சென்ற பேருந்து மார்த்தாண்டம் பணிமனை முன்பு பயணிகளை இறக்கிக்கொண்டிருந்தது. அப்போது தனியார் வேனில் வந்த 10 பேர் கும்பல் பேருந்து டிரைவர் சதீஸ் குமாரை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி ஓடியது.

டிரைவர் சதீஸ் குமார்

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மார்த்தாண்டம் அருமனை வழிதடத்தில்  இயங்கிய அனைத்துப் பேருந்துகளையும் சாலை ஓரங்களில் நிறுத்தி போக்குவரத்துக் கழக ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் மிகவும் அவதியடைந்தனர்.  இதையடுத்து, மார்த்தாண்டம் காவல்துறை அதிகாரிகள் மற்றும் போக்குவரத்துப் பணிமனை அதிகாரிகள் ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தை முடிவில் அரசுப் பேருந்து டிரைவரை தாக்கியவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க