மோடியின் நல்ல நோக்கத்தை யார் புரிந்துகொள்வார்கள்? - ஃபிட்னஸ் சேலஞ்ச் வீடியோ குறித்து பொன்னார் விரக்தி

பொன் ராதாகிருஷ்ணன்

மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை உபகரணங்கள் வழங்கும் விழா நேற்று திருப்பூரில் நடைபெற்றது. மத்திய அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பா.ஜ.க-வின் தமிழகத் தலைவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். விழாவில் சிறப்புரையாற்றிய மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். 

அப்போது, ``தமிழ்நாட்டில் புதிய தொழிற்சாலைகள் வரக்கூடாது. ஏற்கெனவே இருக்கின்ற தொழிற்சாலைகளை மூட வேண்டும் என்று சொன்னால், இங்கு வேலைவாய்ப்பே இல்லாத நிலை உருவாகும். இங்கு எந்தவிதமான தொழில் முன்னேற்றமும் வந்துவிடக்கூடாது என்பதற்காக ஒரு பெரிய இயக்கத்தை உருவாக்கி நடத்திக்கொண்டு இருக்கிறார்கள். அந்த ஒரு இயக்கம் பல ரூபங்களிலும், பல வடிவங்களிலும் செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது. இது ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கும் ஆபத்தை உண்டாக்கும். ஏற்றுமதி முதற்கொண்டு எல்லா வகையிலும் அது பாதிப்பை ஏற்படுத்தும். அரசியல் கட்சிகள் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் அதற்கு ஆதரவாக இருக்கிறார்கள். ஆளும் அரசு யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், வளர்ச்சி என்பதை அடுத்தடுத்த தலைமுறையையும், ஒட்டுமொத்த முன்னேற்றத்தையும் வைத்தே பார்க்க வேண்டும்" என்றார்.

மோடி

அப்போது பொன்.ராதாகிருஷ்ணனிடம் செய்தியாளர்கள், சமீபத்தில் வெளியாகி சமூக வலைதளங்களில் நகைப்புக்குரியதாகப் பார்க்கப்பட்ட பிரதமர் மோடியின் ஃபிட்னஸ் சேலஞ்ச் வீடியோ பற்றி கருத்து கேட்டனர். அதற்கு, ``கடவுளையே நகைப்புக்குரியவராக மாற்றிக் காட்டக்கூடிய தமிழ்நாட்டில், பிரதமர் மோடியின் நல்ல நோக்கத்தை யார் புரிந்துகொள்ளப் போகிறார்கள். தமிழ்நாட்டை அழிப்பதற்கென்றே ஒரு கூட்டம் இருக்கிறது. அவர்களது நோக்கமே யாரும் எந்தவொரு நல்ல விஷயத்தையும் பார்த்துவிடக்கூடாது என்பதுதான். எனவே, அதைப்பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் கிடையாது" என்று முடித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!