வெளியிடப்பட்ட நேரம்: 07:40 (15/06/2018)

கடைசி தொடர்பு:07:40 (15/06/2018)

`கடல்பகுதியில் நிலக்கரி கையாளும் தளம்' - அரசின் திட்டத்துக்கு கட்டுமரப் படகு மீனவர்கள் எதிர்ப்பு!

உடன்குடி அனல் மின்நிலைய திட்டத்துக்காக, கல்லாமொழி கடல்பகுதியில் நிலக்கரி கையாளும் தளம் அமைப்பதற்கு கட்டுமரப் படகு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

மீனவர்கள்

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் அனல்மின் நிலைய திட்டம் மற்றும் நிலக்கரி கையாளும் தளம் அமைப்பதற்கான திட்ட செயல் விளக்கக் கூட்டம் திருச்செந்தூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில்  நடைபெற்றது. உடன்குடி அனல்மின் நிலைய திட்ட இயந்திரவியல் மேற்பார்வை பொறியாளர்கள்,  அனல்மின் நிலைய கட்டுமான மேற்பார்வை பொறியாளர்கள்,  தூத்துக்குடி மாவட்ட கட்டுமர, நாட்டுப்படகு மீனவர்கள் மற்றும் 27 மீனவக் கிராமங்களைச் சேர்ந்த மீனவ பிரதிநிதிகள் இதில் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில், உடன்குடி அனல்மின் நிலைய திட்டத்துக்காக கல்லாமொழிப் பகுதியில் அமைய உள்ள நிலக்கரி கையாளும் தளம் அமைப்பது குறித்தும், மீனவர்களுக்குப் பாதிப்பு இல்லாத வகையில் கடலில் பாலம் அமைக்கப்படும் என உடன்குடி அனல்மின் நிலைய திட்ட அதிகாரிகள் விளக்கமளித்தனர். இந்த விளக்கத்தை ஏற்றுக்கொள்ளாமல், வாழ்வாதாரத்தை அழிக்கும் இந்த நிலக்கரி கையாளும் தளம் எங்களுக்குத் தேவையில்லை என மீனவர்கள் தரப்பில் கூறப்பட்டது. இத்திட்டத்தில் மீனவர்களின் எதிர்ப்பு குறித்து பதிவு செய்யப்பட்டு ஆட்சியரிடம் தெரிவிப்பதாக அதிகாரிகள் கூறினர். செயல் விளக்கக்கூட்டம் துவங்கிய ஒரு மணி நேரத்துக்குள்ளாகவே முடிவடைந்தது.

இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட கட்டுமர, நாட்டுப்படகு மீனவர் சமுதாய சங்கத் தலைவர் கயஸ் பேசுகையில்,  ``உடன்குடி அனல்மின் நிலைய திட்டத்தில் கல்லாமொழி கடல்பகுதியில் நிலக்கரி சரக்கு கையாளும் தளம் அமைக்கக் கூடாது. இந்தச் சரக்கு கையாளும் தளம் அமைக்கப்பட்டால் நிலக்கரி கப்பலில் கொண்டுவரப்படும்போது, நாட்டுப்படகு மீனவர்கள் மீன் பிடிக்க இயலாது. ஏற்கெனவே இப்பகுதியில் நங்கூரம் ஒன்று கடலில் கிடப்பதால் மீனவர்களின் வலைகள் சேதமடைகின்றன. 

கடலில் பாலம், நீரோட்டத்தில் பாதிப்பு ஏற்பட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் அடியோடு பாதிக்கப்படும். உடன்குடி அனல்மின் நிலையத்திலிருந்து கழிவுகள் கடலில் கலந்து நீர் மாசு ஏற்படும். மீன்கள் செத்து மிதக்கும். இதனால் மீன்வளம் அழிந்துவிடும். ஐரோப்பிய நாடுகளில் அனல்மின்நிலைய திட்டத்தைக் கைவிட்டுவிட்டு சூரிய ஒளி மின்சக்தியைப் பயன்படுத்துகின்றனர். எனவே, மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் இந்த நிலக்கரி கையாளும் தளம் எங்களுக்குத் தேவையில்லை" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க