வெளியிடப்பட்ட நேரம்: 07:00 (15/06/2018)

கடைசி தொடர்பு:07:14 (15/06/2018)

`அ.தி.மு.க ஆட்சியை மோடி பத்திரமாக காப்பாற்றி வருகிறார்' - ஆ.ராசா காட்டம்!

நாட்டில் பல பிரச்னைகள் இருக்கும்போதும் அ.தி.மு.க அரசை காப்பாற்றுவதில் மட்டுமே பிரதமர் கவனமாக உள்ளதாக நாகர்கோவிலில் நடந்த தி.மு.க பொதுக்கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா பேசினார்.

நாட்டில் பல பிரச்னைகள் இருக்கும்போதும் அ.தி.மு.க அரசை காப்பாற்றுவதில் மட்டுமே பிரதமர் கவனமாக உள்ளதாக நாகர்கோவிலில் நடந்த தி.மு.க பொதுக்கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா பேசினார்.

ஆ ராசா

தி.மு.க தலைவர் கணாநிதியின் 95-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நாகர்கோவிலில்  இன்று நடந்தது. இதில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா பேசுகையில், ``கருணாநிதி பிறந்தநாளை பட்டித் தொட்டியெல்லாம் கொண்டாடி வருகிறோம். உலக நாடுகளில் தமிழர்கள் இருக்கும் அனைத்துப் பகுதிகளிலும் கொண்டாடி வருகின்றனர். 1973-ம் ஆண்டு பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் மின் வசதி செய்துகொடுக்கப்படவில்லை. அந்த காலகட்டத்தில் 12,000 கிராமங்களுக்கு மின்சாரம் அமைத்துத் தந்தவர் கருணாநிதி. சொத்தில் பெண்களுக்கு சம உரிமை உண்டு என 1951-ம் ஆண்டு அம்பேத்கர் கொண்டுவந்த சட்டத் திருத்தத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற நேரு முயற்சி செய்தார். அப்போது கடும் எதிர்ப்பு காரணமாக கொண்டுவர முடியவில்லை. ஒரு தலைவர் வந்து இந்த சட்டத் திருத்தத்தை கொண்டுவருவார் என அம்பேத்கர் அன்று சொன்னார். பெண்களுக்கு சொத்தில் சம உரிமை வழங்கும் சட்டத்தை கருணாநிதி கொண்டுவந்தார். 1947 முதல் 1996 வரை பல முதல்வர்கள் தமிழகத்தை ஆண்டபோது 16 ஆயிரம் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டிகள்தான் கட்டப்பட்டிருந்தன. 1996 முதல் 2001 வரை கருணாநிதி தலைமையிலான தி.மு.க ஆட்சிகாலத்தில் 56,000 குடிநீர் நீர்த்தேக்கத் தொட்டிகள் கட்டப்பட்டன.

ஆ ராசா

மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது உள்நாட்டு பொருளாதார வளர்ச்சி 10 சதவிகிதமாக இருந்தது. இப்போது மோடி ஆட்சியில் 4 சதவிகிதமாக குறைந்துள்ளது. பண மதிப்பு இழப்பால் பல ஏழை மக்கள் பாதிப்புக்குள்ளானார்கள். பா.ஜ.க ஆட்சிக்கு வரும் முன்பு தேர்தல் அறிக்கையில் ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை கொடுப்பதாக கூறினார். இந்த நான்கு ஆண்டில் 8 கோடி பேருக்கு கொடுத்திருக்க வேண்டும். ஆனால், யாருக்கும் வேலைவாய்ப்பு கொடுக்கவில்லை. பக்கத்து நாடுகளின் அச்சுறுத்தல்களைக்கூட பிரதமர் கண்டுகொள்ளாமல் உள்ளார். இப்படி நாட்டில் பல பிரச்னைகள் இருக்கும்போதும் அ.தி.மு.க அரசைக் காப்பாற்றுவதில் மட்டுமே பிரதமர் கவனமாக உள்ளார். தமிழகத்தில் நடக்கும் ஆட்சியை மோடி பத்திரமாக காப்பாற்றி வருகிறார். திராவிட இயக்கம் வந்தபிறகுதான் ஒழுக்கம் குறைந்துவிட்டதாக பொன்.ராதாகிருஷ்ணன், குருமூர்த்தி போன்றோர் கூறி வருகின்றனர். காஷ்மீரில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது பா.ஜ.க-வினர். பாலியல் குற்றவாளியை காப்பாற்ற பா.ஜ.க.  எம்.எல்.ஏ-க்கள் பேரணி நடத்தினர். தி.மு.க, திராவிட கழகத்தைச் சேர்ந்தவர்கள் இப்படி போராட்டம் நடத்தியிருக்கிறார்களா?. தூத்துக்குடியில் ஜாலியன் வாலாபாக் படுகொலையை எடப்பாடி அரசு நடத்தியுள்ளது." இவ்வாறு அவர்  பேசினார்.