தமிழக அரசை ரிமோட் கன்ட்ரோல் மூலம் மோடி ஆட்டிப் படைக்கிறார் – சீதாராம் யெச்சூரி | modi operates tn government by remote control says sitaram yechury

வெளியிடப்பட்ட நேரம்: 08:00 (15/06/2018)

கடைசி தொடர்பு:08:00 (15/06/2018)

தமிழக அரசை ரிமோட் கன்ட்ரோல் மூலம் மோடி ஆட்டிப் படைக்கிறார் – சீதாராம் யெச்சூரி

18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பின் மூலம் தமிழக அரசை ரிமோட் கன்ட்ரோல் மூலம் மோடி ஆட்டிப் படைக்கிறார்  என்பது தெளிவாகிறது என சி.பி.எம் தேசியச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறியுள்ளார் .
 
சீதாராம் யெச்சூரி
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகத்தின் ஆறு முனைகளில் இருந்து பிரசாரப் பயணம் மேற்கொண்டார்கள். அந்தப் பயணம் இன்று ஜூன் 14-ம் தேதி திருச்சியில் நிறைவடைந்தது. இன்று திருச்சியில் கோஹினூர் தியேட்டர் அருகிலிருந்து ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற தொண்டர்கள் அணிவகுத்து வந்தனர். அதைத் தொடர்ந்து 'போராடுவோம் தமிழகமே' பிரசார நிறைவுப் பொதுக்கூட்டம் திருச்சியில் நடைபெற்றது.
சி.பி.எம் மத்திய கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர் எஸ்.ஸ்ரீதர் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில், தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மத்தியக்குழு உறுப்பினர்கள் டி.கே.ரெங்கராஜன் எம்.பி., அ.சவுந்தரராசன், உ.வாசுகி, முன்னாள் எம்.எல்.ஏ பாலபாரதி, உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர்.
 
கூட்டத்தில் பேசிய தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, “மக்கள் நலனை மையப்படுத்தி மாற்றுக் கொள்கைகளையும் அதன் அடிப்படையிலான போராட்டங்களையும் தீவிரப்படுத்துவதற்கான பிரசாரமாகத் தமிழகம் முதன்மையாக விளங்குகிறது. இன்றைக்கு நாட்டுக்குத் தேவை அரசனல்ல இந்திய நாட்டுக்குத் தேவை கொள்கைகள்தான். அடுத்து வருகிற தேர்தலில் மோடி வருவாரா அல்லது அவருக்கு மாறாக வேறு தலைவர் வருவாரா என்கிற பேச்சு மக்கள் மத்தியில் அடிபடுகிறது. 
 
இந்திய மக்கள், யாரைத் தேர்வு செய்வது என்று ஒருபோதும் யோசிக்கக் கூடாது. மாறாக எந்தக் கொள்கையை நிறைவேற்ற வேண்டும் என்பதைத்தான் மக்கள் சிந்திக்க வேண்டும். ஜி.எஸ்.டி, பணமதிப்பிழப்பு போன்ற மத்திய அரசின் தவறான கொள்கைகளால் 50 ஆயிரம் சிறுதொழில் நிறுவனங்கள் இழுத்து மூடப்பட்டுள்ளன. தமிழகத்தில் 5 லட்சம் பேர் வேலை இழந்துள்ளதாகத் தமிழக அரசு கூறுகிறது. அதேபோல பரவலாக விவசாயிகளுடைய நிலைமை மோசமாக உள்ளது. அவர்கள் தற்கொலைக்குத் தள்ளப்படுகிறார்கள். 
 

விலைவாசி, பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு உட்பட அனைத்து நிலைகளும் ஆகாயத்தில் பறக்கின்றன. 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் பிரச்னையில் இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியுள்ளதால், இந்த ஆட்சி அதிகாரத்தைப் பிரதமர் நரேந்திர மோடி ரிமோட் கன்ட்ரோலில் ஆட்டிவைக்கிறார் என்பது தெளிவாகிறது. தமிழகத்தில் இன்றைக்கு இருக்கக்கூடிய அரசு மக்களுக்கான அரசாக இல்லை. மத்திய பி.ஜே.பி சொல்லுகிறபடி செய்யும் அரசாக உள்ளது.  தூத்துக்குடியிலே 13 பேருடைய உயிரைக் குடித்த துப்பாக்கிச் சூட்டை, மத்திய அரசு உள்நோக்கத்தோடு நடத்தியது. எந்த விதிமுறைகளையும் மீறவில்லை. உயிரைப் பறிப்பதற்காகவே நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு அது. உயர்மட்டத்தில் இருப்பவர்கள் உரிய அனுமதி இல்லாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை. 

இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு அனுமதி கொடுத்தது யார்?. இதுகுறித்து நீதி விசாரணை மூலமாகத்தான் இந்த உண்மையைக் கண்டுபிடிக்க முடியும். இத்தனைக்குப் பிறகும் பிரதமர் வாய் திறக்க மறுக்கிறார். சமீபத்தில் கடந்த இரு நாள்களாக அவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோ வைரலாகி உள்ளது. அவருடைய உடல்நிலை நன்றாகப் பார்க்கட்டும். ஆனால், அவருடைய உடல் நலனைவிட இந்தியாவின் நலன் முக்கியம். இந்திய மக்களுடைய நலன் முக்கியம். மத்திய, மாநில அரசுகள், மதவெறி நடவடிக்கைகளின் மூலமாக இஸ்லாமியர்கள் மீதும் மக்கள் மீதும் ஏராளமான வன்முறை தாக்குதல்களை நடத்திக்கொண்டிருக்கிறது. தமிழகத்திலும் இந்தியாவிலும் மார்க்சிஸ்ட் கட்சி உடனடியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கேட்பதற்காக போராட்டங்களை நடத்திக்கொண்டிருக்கிறது. மதவெறியைப் பயன்படுத்தி மக்களைப் பெரிதும் அதிலே குறுகிய அரசியல் ஆதாயம் காண்பதும் பி.ஜே.பி. உடைய மிக மோசமான ஒரு நடவடிக்கை. 

மக்களுடைய வாழ்வுரிமை மீதான தாக்குதல் மதவெறி நடவடிக்கைகளின் மூலமாக நம்முடைய நாட்டினுடைய மதச்சார்பின்மையும் ஜனநாயகத்தையும் குழி தோண்டிப் புதைத்தது. சகிப்புத் தன்மையே இல்லாத இந்து ராஷ்டிரம் என்பதை ஏற்படுத்துவதற்கான முயற்சி செய்கிறார்கள். டெல்லியில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் போராடுகிறார். அதைப்போலதான் புதுச்சேரியிலும் நடப்பதைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைப் பின்னுக்குத் தள்ளி ஆளுநர் தான் அங்கே ஆட்சி நடத்துகிறார். நமது கடமை மோடி அரசை மத்திய ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும். அதேபோல தமிழகத்தில் இருக்கக்கூடிய பினாமி அ.தி.மு.க அரசுக்கும் பாடம் புகட்ட வேண்டும். 

தேர்தல் ஆணையமும், பி.ஜே.பிக்கு சாதகமாக நடக்கிறது. கடந்த நான்காண்டுகளாக பி.ஜே.பி தாக்கல் செய்துள்ள வருடாந்திர வரவு செலவு கணக்கில் பி.ஜே.பி பொருளாளர் கையெழுத்தில்லை. கடந்த ஆண்டு மட்டும் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் அந்தக் கட்சி நன்கொடையும் வருமானம் பெற்றுள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையம் ஒரு முறை கூட கேள்வி எழுப்பவில்லை அதைப்போல நீதித்துறையிலும் பிரச்னை. உச்சநீதிமன்ற நீதிபதிகள் வெளியே வந்து நீதித்துறையின் சுதந்திரம் பறிபோய்க் கொண்டிருக்கிறது என்றார்கள். அனைத்தையும் வலுவான போராட்டங்களால்தான் அனைத்தையும் மீட்டெடுக்க முடியும்" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க