ஜெயலலிதா மரண வழக்கு - அப்போலோ மருத்துவமனையில் ஆறுமுகசாமி ஆணையம் நேரில் ஆய்வு! | Arumugasamy Commission has decided to Inspect the Apollo Hospital on tomorrow

வெளியிடப்பட்ட நேரம்: 05:30 (15/06/2018)

கடைசி தொடர்பு:07:40 (15/06/2018)

ஜெயலலிதா மரண வழக்கு - அப்போலோ மருத்துவமனையில் ஆறுமுகசாமி ஆணையம் நேரில் ஆய்வு!

ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அப்போலோ மருத்துவமனையில் ஆறுமுகசாமி ஆணையத்தின் வழக்கறிஞர்கள் இன்று நேரில் ஆய்வு நடத்த உள்ளனர்.

அப்போலோ

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனளிக்காததால் அவருடைய மரணம் நிகழ்ந்தது. ஜெயலலிதா மரணத்துக்குப் பின் அ.தி.மு.க-வில் குழப்பங்கள் ஏற்பட்டன. கட்சி பிரிந்தது. கூடவே, ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக ஓ.பி.எஸ் சந்தேகம் எழுப்பியதன் பயனாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில், தனிநபர் விசாரணை ஆணையத்தைத் தமிழக அரசு அமைத்தது. அதன்படி, ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் தீபா, விவேக் ஜெயராமன், அப்போலோ மருத்துவர்கள் எனப் பலரும் விளக்கமளித்து வருகின்றனர். சசிகலாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டு, அவருக்குப் பதிலாக அவரது வழங்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் ஆவணங்களைத் தாக்கல் செய்துவருகிறார். 

இந்நிலையில், ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அப்போலோ மருத்துவமனையில் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் வழக்கறிஞர்கள் நிரஞ்சன், பார்த்தசாரதி ஆகியோர் நேரில் சென்று ஆய்வு நடத்த உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இன்று காலை 10.30 மணிக்கு நடக்க உள்ள ஆய்வில் ஆறுமுகசாமி ஆணையத்தின் வழக்கறிஞர்களுடன் சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் உடன் செல்வார் எனத் தெரிகிறது. ஆய்வின்போது ஜெயலலிதா சிகிச்சை பெற்ற இரண்டு அறைகள் மற்றும் வளாகத்தில் ஆய்வுகள் நடக்க வாய்ப்புள்ளது. இதனால் இவ்வழக்கில் கூடுதல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க