வெளியிடப்பட்ட நேரம்: 09:34 (15/06/2018)

கடைசி தொடர்பு:09:34 (15/06/2018)

அப்போலோ மருத்துவமனை போதிய ஏற்பாடுகளைச் செய்யவில்லை - ஆய்வை ரத்து செய்த ஆறுமுகசாமி ஆணையம்

ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அப்போலோ மருத்துவமனையில், ஆறுமுகசாமி ஆணையத்தின் வழக்கறிஞர்கள் குழுவின் இன்றைய ஆய்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. 

ஜெயலலிதா அப்போலோ

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கடந்த 2016-ம் ஆண்டு உடல் நலக்குறைவால், அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூன்று மாதங்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் அவருடைய மரணம் டிசம்பர் 5-ம் தேதியன்று நிகழ்ந்தது. அதன்பிறகு, அ.தி.மு.க-வில் குழப்பங்கள் ஏற்பட்டு கட்சி இரண்டாக பிரிந்தது. இதனிடையில், ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக ஓ.பி.எஸ் சந்தேகம் எழுப்பினார். இதனால், ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில், தனிநபர் விசாரணை ஆணையத்தைத் தமிழக அரசு அமைத்தது. 

அதன்படி, ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின்முன் தீபா, விவேக் ஜெயராமன், அப்போலோ மருத்துவர்கள் எனப் பலரும் நேரில் சென்று விளக்கமளித்து வருகின்றனர். சிறையில் இருக்கும் சசிகலாவுக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. அவருக்குப் பதிலாக அவரின் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் ஆவணங்களைத் தாக்கல் செய்துவருகிறார். 

இந்நிலையில், ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அப்போலோ மருத்துவமனையில் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் வழக்கறிஞர்கள் நேரில் சென்று ஆய்வு நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், வழக்கறிஞர்கள் குழு ஆய்வு செய்வதற்குப் போதிய ஏற்பாடு செய்யவில்லை. அதனால், மற்றொரு நாளில் ஆய்வு செய்யவேண்டும் என்று அப்போலோ நிர்வாகம் விசாரணை ஆணையத்தில் கேட்டுக்கொண்டது. அதனால், இன்று நடக்கவிருந்த ஆய்வை ரத்து செய்வதாக விசாரணை ஆணையம் அறிவித்துள்ளது. மற்றொரு நாளில் ஆய்வு நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.