வெளியிடப்பட்ட நேரம்: 10:58 (15/06/2018)

கடைசி தொடர்பு:10:58 (15/06/2018)

பாடப்புத்தகங்களும் இனி டோர்டெலிவரியில்...! - தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் சிறப்பு ஏற்பாடு

பாடப்புத்தகங்களும் இனி டோர்டெலிவரியில்...! - தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் சிறப்பு ஏற்பாடு

விடுமுறைக் காலம் முடிந்து பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுவிட்டன! பாடம் நடத்தத் தொடங்கும் முன்னரே பொதுத்தேர்வுக்கான அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், எப்போது பாடப்புத்தகங்களைத் தருவார்கள் என மாணவர்களும் பெற்றோர்களும் பரபரப்போடு காத்திருக்க, கடந்த இரண்டு நாள்களாக பள்ளிப் பாடப்புத்தகங்களின் விநியோகத்தைத் தொடங்கியிருக்கிறது தமிழ்நாடு பாடநூல் கழகம். 

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ வளாகத்திலும், சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்திலும் மட்டுமே நேரடியாகப் புத்தகம் விநியோகிக்கும் பணி நடைபெறுவதால், தமிழ்நாடு முழுவதும் பெற்றோர்கள் படையெடுத்து பாடநூல்களை வாங்க வந்திருக்கின்றனர். இதனால் கடந்த இரண்டு நாள்களாக டி.பி.ஐ வளாகத்திலும், அண்ணா நூற்றாண்டு நூலகத்திலும் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக மிகப்பெரிய வரிசையில் காத்திருந்து பாடப்புத்தகங்களை வாங்கிச் செல்கின்றனர். 

கூட்டத்தைச் சமாளிக்கும் வகையில் சிறப்பு கவுன்ட்டர்களை அமைத்திருந்தாலும், தள்ளுமுள்ளும் நீண்ட வரிசையில் நிற்பதும் குறையவில்லை. இதுகுறித்து தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் மேலாண் இயக்குநர் ஜெகநாதன் ஐ.ஏ.எஸ்-உடன் பேசினோம். 

பாடநூல்``அரசுப் பள்ளிகளில் இலவசமாகப் புத்தகங்களை விநியோகம் செய்வதற்கு புத்தகங்களை அனுப்பிவருகிறோம். இந்த வாரத்துக்குள் அவர்களுக்குப் புத்தகங்கள் கிடைத்துவிடும். மற்ற பள்ளி மாணவர்களுக்குப் புத்தகம் வழங்க, பள்ளிகளே நேரிடையாக இணையத்தின் வழியே ஆர்டர் செய்யலாம். இதற்கான வசதியையும் உருவாக்கியிருக்கிறது அரசு. மேலும், பெற்றோர்களும் தங்களுடைய பிள்ளைகளின் தகவலை தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் இணையத்தில் (https://textbookcorp.in/users/student_login) பதிவுசெய்து 48 மணி நேரத்துக்குள் புத்தகங்களைப் பெற்றுக்கொள்ளலாம். புத்தகத்துக்கான தொகையுடன் கூடுதலாக தபால் செலவையும் செலுத்தினால் போதுமானது. ஆன்லைன் வழியே கட்டணம் செலுத்த முடியாதவர்கள், அருகில் உள்ள தமிழ்நாடு இ-சேவா மையத்துக்குச் சென்றும் புத்தகங்களைப் பெற பதிவுசெய்துகொள்ளலாம்.

பாடநூல்

இதன் மூலம் பெற்றோர்கள் வீட்டில் இருந்தபடியே புத்தகங்களைப் பெற்றுக்கொள்ள முடியும். இதனால் பெற்றோர்கள் நீண்டதூரம் பயணிக்கவோ வரிசையில் நிற்கவோ அவசியமில்லை. தற்போது, முதல் தொகுதி புத்தகங்கள் மட்டும் வழங்கப்படுகின்றன. இந்த மாத இறுதியில் இரண்டாவது தொகுதியும் கிடைத்துவிடும். இதையும் பொதுமக்கள் வீட்டில் இருந்தே வாங்கிக்கொள்ளலாம். தற்போது, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இலவசமாக வழங்க 48 லட்சம் புத்தகங்களும், தனியார் பள்ளி மாணவர்களுக்கு வழங்க 22 லட்சம் புத்தகங்களும் தயார்நிலையில் உள்ளன" என்றார். 

தமிழ்நாடு பாடநூல் கழகம்

பாடப்புத்தகங்களின் விலை உயர்வு குறித்து கேட்டபோது, ``12 ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட பாடத்திட்டத்தை மாற்றி அமைத்திருக்கிறோம். இந்தக் கல்வியாண்டுக்கு முதல்கட்டமாக 1, 6, 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கான புதிய பாடநூல்கள் அச்சிடப்பட்டுள்ளன. சிறந்த வல்லுநர்களால் மாணவர்கள் எளிதாகப் புரிந்துகொள்ளத்தக்கவகையில் பாடத்திட்டங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளதால், பக்கங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. QR code போன்ற சிறப்பு அம்சங்களுடன் இவை உருவாக்கப்பட்டுள்ளன.

பாடநூல்கள் வழக்கமாக அச்சிடப் பயன்படுத்தப்படும் மேப் லித்தோ தாளுக்குப் பதிலாக தரம் உயர்ந்த எலிகண்ட் தாள் பயன்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, 11-ம் வகுப்பு பாடநூல்கள் 60 ஜி.எஸ்.எம் தாளில் ஒரு வண்ண அச்சுக்குப் பதிலாக, 80 ஜி.எஸ்.எம் தாளில் நான்கு வண்ணங்களில் அச்சிடப்பட்டுள்ளன. தரத்தை மிகவும் மேம்படுத்தியிருக்கிறோம். பழைய பாடநூல்கள் கறுப்பு-வெள்ளை நிறத்தில் மட்டும் இருந்தன. தற்போது மாணவர்கள் நல்ல முறையில் வாசிக்கும் வகையில் உளவியல் நிபுணர்களின் கருத்துகளுடன் புத்தகங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. வேலைவாய்ப்புத் தகவல்களையும், நுழைவுத்தேர்வு குறித்த விவரங்களையும் ஒவ்வொரு புத்தகத்திலும் வழங்கியிருக்கிறோம்" என்றார். 

பாடநூல்

தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் இணையதளத்தில் புத்தகம் எவ்வாறு வழங்கப்படுகிறது என்பதுகுறித்து பதிவுசெய்து பார்த்தோம். முதல் பக்கத்திலேயே பள்ளிகள் புத்தகம் வாங்குவதற்கான பக்கம் வந்தாலும், Home என்பதை க்ளிக் செய்தால் Register your school, student's registration, School's login, Student's login, Admin login, Retailer login, SCERT login என்று இருக்கும்.

பாடநூல்

இதில் பெற்றோர்கள் Student's Registration என்பதை க்ளிக் செய்து மாணவர் படிக்கும் வகுப்பு மற்றும் பள்ளி விவரம், முகவரி குறித்து தகவல் வழங்க வேண்டும். உடனே நீங்கள் குறிப்பிடும் மின்னஞ்சல் முகவரிக்கு, விவரங்கள் பதிவை உறுதிசெய்யவும், கடவுச்சொல்லையும் அனுப்பிவைக்கப்படுகிறது.  இ-மெயில் முகவரியை User Name ஆகவும், கடவுச்சொல்லையும் பயன்படுத்தி புத்தகத்தை ஆர்டர்செய்து புத்தகத்தின் கட்டணத்தை ஆன்லைன் வழியே செலுத்தலாம். ஆகவே, பெற்றோர்கள் புத்தகங்கள் வாங்க வரிசையில் நிற்கவும், தனியார் புத்தகக் கடைகளை நாடிச் செல்லவேண்டிய அவசியமும் இல்லை. 11-ம் வகுப்பு பாடப்புத்தகங்கள் தொகுதி 1 வாங்கியவர்கள், தொகுதி 2 புத்தகங்களையும், இதர வகுப்பு மாணவர்களுக்கு இரண்டாம் பருவத்துக்கான புத்தகங்களையும் ஆன்லைன் வழியே வாங்கலாம்.


டிரெண்டிங் @ விகடன்