வெளியிடப்பட்ட நேரம்: 11:24 (15/06/2018)

கடைசி தொடர்பு:11:24 (15/06/2018)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வரும் 23-ம் தேதி ஆனி வருஷாபிஷேகம்!

8.30 மணி முதல் 9 மணிக்குள் சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானை ஆகிய சந்நிதிகளின் விமானங்களுக்கு போத்திமார்கள் மூலமும் சுவாமி சண்முகர் விமானத்துக்கு சிவாச்சாரியார்கள் மூலமும் வெங்கடாஜலபதி சந்நிதி விமானத்துக்கு பட்டாச்சாரியார்கள் மூலமும் புனித நீர் ஊற்றப்பட்டு வருஷாபிஷேகம் சிறப்பாக நடைபெற உள்ளது.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், ஆனி வருசாபிஷேக விழா வரும் 23-ம் தேதி நடைபெறுகிறது எனத் திருக்கோயில் இணை ஆணையர் பாரதி தெரிவித்துள்ளார்.

சுப்பிரமணிய சுவாமி கோயில்

தமிழ்க் கடவுள் முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடும் கடற்கரை ஓரத் தலமுமானது தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். இக்கோயிலில் ராஜகோபுரம், ஆனி மாதம் சுவாதி நட்சத்திரத்தன்று கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. மூலவர் சுவாமி சுப்பிரமணியர் சிலை தை மாதம் உத்திர நட்சத்திரத்தன்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. எனவே, இங்கு ஆண்டுதோறும் கொண்டாடப்படும் மிக முக்கிய திருவிழாக்களில் ஆனி வருஷாபிஷேகம் மற்றும் தை உத்திர வருஷாபிஷேக விழாவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன.

இது குறித்து திருக்கோயில் இணை ஆணையர் பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில், ``ஆனி வருஷாபிஷேக விழா, இந்த ஆண்டு, வரும் 23-ம் தேதி (சனிக்கிழமை) அன்று நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, அதிகாலை 3 மணிக்கு திருக்கோயில் நடை திறக்கப்படுகிறது. தொடர்ந்து, 3.30 மணிக்கு விஸ்வரூபம் ஆராதனை, 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெறுகிறது. தொடர்ந்து, கோயில் மகா மண்டபத்தில் உள்ள மூலவர் சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானை கும்பங்களுக்கும், குமரவிடங்கப் பெருமான் சந்நிதியில் சுவாமி சண்முகர் கும்பத்துக்கும் பெருமாள் சந்நிதி முன்பு வெங்கடாஜலபதி கும்பத்துக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.

காலை 8 மணிக்கு கும்ப கலசங்கள் விமான தளத்துக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. 8.30 மணி முதல் 9 மணிக்குள் சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானை ஆகிய சந்நிதிகளின் விமானங்களுக்கு போத்திமார்கள் மூலமும் சுவாமி சண்முகர் விமானத்துக்கு சிவாச்சாரியார்கள் மூலமும் வெங்கடாஜலபதி சந்நிதி விமானத்துக்கு பட்டாச்சாரியார்கள் மூலமும் புனித நீர் ஊற்றப்பட்டு வருஷாபிஷேகம் சிறப்பாக நடைபெற உள்ளது.

வருஷாபிஷேகம் நடைபெறுவதால், இந்த நாளில் இரவில் மூலவருக்கு அபிஷேகம் (ராக்கால அபிஷேகம்) நடைபெறாது. தொடர்ந்து, சுவாமி குமரவிடங்கப் பெருமான், வள்ளி அம்பாள் தனித்தனி தங்கமயில் வாகனங்களில் எழுந்தருளி, திருவீதியுலா வருதல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. வருஷாபிஷேக விழாவுக்கான ஏற்பாடுகளைத் திருக்கோயில் நிர்வாகக் குழுவினர் செய்து வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க