வெளியிடப்பட்ட நேரம்: 14:10 (15/06/2018)

கடைசி தொடர்பு:14:10 (15/06/2018)

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் இரவில் ஆய்வு நடத்திய பொன்.மாணிக்கவேல்!

சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் உள்ள சர்ச்சைக்குள்ளான சிலைகளைப் பார்வையிட்டார்.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்குச் செய்யப்பட்ட புதிய உற்சவர் சிலையில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக எழுந்துள்ள புகாரின் அடிப்படையில் தமிழக அரசின் தலைமை ஸ்தபதியான முத்தையா உட்பட 9 பேர் மீது கடந்த சில மாதங்களுக்கு முன் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக நேற்று இரவு ஏகாம்பரநாதர் கோயிலில் சிலைகடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் ஆய்வு செய்தார்.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் உள்ள ‘சோமாஸ் கந்தர்’ என்றழைக்கப்படும் உற்சவர் சிலை பழுதடைந்த காரணத்தால் புதிய உற்சவர் சிலையை செய்யக் கடந்த 2015ல் கோயில் நிர்வாகத்தினர் முடிவு செய்தனர். அதன்படி இந்து அறநிலைத்துறையின் உத்தரவின் பொன்.மாணிக்கவேல்பேரில் 50 கிலோ எடையில், 2.12 கோடி செலவில் புதிய உற்சவர் சிலை செய்யப்பட்டு, 2016 டிசம்பரில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. உள்ளூர் பக்தர்களின் கடும் எதிர்ப்பையும் மீறி புதிதாக செய்யப்பட்ட இந்தச் சிலையில் அறநிலைத்துறை குறிப்பிட்ட 5 சதவிகித தங்கம் கலக்கப்படவில்லை. உபயதாரர்களிடம் இருந்து பெறப்பட்ட தங்கத்தில் முறைகேடுகள் நடந்திருப்பதாகப் புகார் எழுந்தது.

ஜனவரி மாதம் சிலைகடத்தல் தடுப்புப் பிரிவினர் கோயிலில் உள்ள சிலைகளில் தங்கம் கலக்கப்பட்டது குறித்து ஆய்வு செய்தனர். பரிசோதனையின் முடிவில் அந்தச் சிலைகளில் எள்ளளவுகூட தங்கம் இல்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பழைய சோமாஸ் கந்தர் சிலையிலும் எள்ளளவும் தங்கம் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து பல்வேறு தரப்பினரிடமும் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் விசாரணை நடத்தி வருகிறார். இந்த நிலையில், நேற்று இரவு மீண்டும் பழைய உற்சவர் சிலை, புதிய உற்சவர் சிலை, ஏலவார் குழலி சிலை உள்ளிட்ட சிலைகளில் பொன். மாணிக்கவேல் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ``வழக்குத் தொடர்பான சிலைகளை ஆய்வு செய்ய வந்தோம். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது'' என அதிகாரிகள் தெரிவித்தனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க