வெளியிடப்பட்ட நேரம்: 13:46 (15/06/2018)

கடைசி தொடர்பு:13:46 (15/06/2018)

`மெட்ரோ வாட்டருக்கு ரூ.7,500... எங்களுக்கு ரூ.7,000’ - சென்னையில் அரசியல் பிரமுகர்கள் நடத்திய வசூல்வேட்டை  

 வசூல் வேட்டை

சென்னை துரைப்பாக்கம் பகுதியில் குடிநீர் இணைப்பு கொடுக்க அடாவடி வசூல் வேட்டை நடப்பதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால், அதைச் சம்பந்தப்பட்ட மெட்ரோ வாட்டர் உதவிப் பொறியாளர் மறுத்துள்ளார். 

சென்னை, துரைப்பாக்கம், மகாத்மா காந்தி நகர் பகுதியில் 5,000-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்தப் பகுதியில் உள்ளவர்கள் குடிநீர் இணைப்புக்காகச் சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மெட்ரோ வாட்டர் அலுவலகத்தில் டெபாசிட் தொகை செலுத்தியுள்ளனர். இதன் பிறகு, சம்பந்தப்பட்டவர்களின் வீடுகளுக்கு மூன்று பேர் வந்துள்ளனர். அவர்கள், குடிநீர் இணைப்பு கொடுக்க வேண்டும் என்றால் குறிப்பிட்ட தொகை எங்களுக்குத் தர வேண்டும் என்று வசூல்வேட்டை நடத்தியுள்ளனர். பெரும்பாலானவர்கள், பணத்தைக் கொடுத்து குடிநீர் இணைப்பைப் பெற்றுள்ளனர். பணம் கொடுக்காதவர்களுக்கு இணைப்பு வழங்கப்படவில்லை. 

இதுகுறித்து பாதிக்கப்பட்ட அஸ்கர் அலி என்பவர் கூறுகையில், ``சென்னை துரைப்பாக்கம் ஒக்கியம் பகுதி, 2012-ல் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது. வீட்டு வரி மற்றும் வீட்டின் சதுர அடி கணக்கெடுப்பு அடிப்படையில் குடிநீர் இணைப்புக்கான கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. டெபாசிட் தொகையைச் செலுத்த சிந்தாதிரிப்பேட்டை அலுவலகத்தில் காலை முதல் காத்திருக்க வேண்டியுள்ளது. எங்கள் பகுதியில் குடிநீர் இணைப்புக்காக விண்ணப்பித்து டெபாசிட் தொகையைச் செலுத்தியவர்களின் வீடுகளுக்கு உள்ளூரைச் சேர்ந்த மூன்று பேர் வருகின்றனர். அவர்கள், டெபாசிட் தொகைக்கு ஏற்ப வசூல் வேட்டை நடத்துகின்றனர். அதாவது, டெபாசிட் தொகை 7,500 ரூபாய் என்றால், இணைப்பு கொடுக்க 7,000 ரூபாய் கேட்கின்றனர். 

அடாவடியாகப் பணம் வசூல் செய்பவர்கள் குறித்து மெட்ரோ வாட்டர் அதிகாரிகளிடம் புகார் கொடுத்துள்ளோம். ஆனால், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பணம் கொடுக்கவில்லை என்ற காரணத்துக்காகச் சிலருக்கு இணைப்பு கொடுக்கப்படவில்லை. பணத்தை வசூலிப்பவர்களில் ஒருவர் அ.தி.மு.க-விலும் இன்னொருவர் தி.மு.க-விலும் மற்றொருவர் தீபா பேரவையிலும் உள்ளனர். அவர்கள், குடிநீரை திறந்துவிடும் பணியில் உள்ளனர். எனவே, வசூல் வேட்டை நடத்துபவர்கள்மீது நடவடிக்கை எடுத்து குடிநீர் இணைப்பு வழங்கப்பட வேண்டும்" என்றார். 

இதுகுறித்து உதவிப் பொறியாளர் கண்மணியிடம் கேட்டதற்கு, ``பணம் வசூல் குறித்து எங்களுக்கும் புகார் வந்தது. அதன்பேரில் அங்கு சென்று விசாரித்ததில் அது தவறான தகவல் என்று தெரியவந்தது. மேலும், சம்பந்தப்பட்ட மூன்று நபர்களும் எச்சரிக்கப்பட்டுள்ளனர். பொது மக்களிடம் குடிநீர் இணைப்பு தொடர்பாக யாரெனும் கூடுதல் பணம் கேட்டால் உடனடியாக எங்களுக்குத் தகவல் தெரிவிக்கலாம்" என்றார்.