`அன்று கதறல்; இன்று கம்பீரம்’ - ஆணவக் கொலையால் முடங்கிவிடாத நீனு!

ஆணவக் கொலை செய்யப்பட்ட கெவின் ஜோசப் மனைவி நீனு மீண்டும் கல்லூரி செல்லத் தொடங்கியுள்ளார்.

`அன்று கதறல்; இன்று கம்பீரம்’ - ஆணவக் கொலையால் முடங்கிவிடாத நீனு!

நீனு என்கிற மாற்று சமூகத்தைச்சேர்ந்த பெண்ணைத் திருமணம் செய்துகொண்ட கெவின் ஜோசப் என்ற இளைஞர் கேரள மாநிலத்தில் ஆணவக் கொலை செய்யப்பட்டார். கணவர் கொலை செய்யப்பட்ட பின், வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்த நீனு வேதனையிலிருந்து மீண்டு கல்லூரி செல்லத் தொடங்கியுள்ளார். வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்த அவருக்கு, கெவின் ஜோசப்பின் பெற்றோர் ஆறுதல் அளித்து, படிப்பைத் தொடங்க உதவியுள்ளனர். கெவின் ஜோசப் கொலை செய்யப்பட்டு 17 நாள்களுக்குப் பிறகு, நீனு மீண்டும் வீட்டைவிட்டு வெளியே வந்தார்.

ஆணவக் கொலை-  பாதிக்கப்பட்ட நீனு

pic courtesy: mathrubhumi

கல்லூரி செல்வதற்கு முன், கெவின் ஜோசப் புகைப்படத்தை சிறிது நேரம் அவர் வணங்கினார். கெவின் ஜோசப்பின் தாயார் நீனுவுக்கு லஞ்ச் பேக் கட்டிக் கொடுத்தார். மதிய உணவை வாங்கிக்கொண்டவர், மாமா ராஜன் ஜோசப் உதவியுடன் கல்லூரிக்குப் புறப்பட்டார். கோட்டயம் காந்திநகர் போலீஸ் நிலையத்துக்குச் சென்ற நீனு, `தான் மீண்டும் கல்லூரிக்குச் செல்வது குறித்த தகவலை போலீஸாரிடம் கூறினார். இந்தப் போலீஸ் நிலையத்தில்தான் கெவின் ஜோசப் கடத்தப்பட்டபோது, நீனு கண்ணீரும் கம்பலையுமாக புகார் அளித்தார்.

சப்-இன்ஸ்பெக்டர் ஷிஜூ, நீனுவிடம் புகாரை பெற்றுக்கொள்ளாமல் அலைக்கழித்தார். அப்போது, நீனு கதறியபடி மீடியாக்களுக்கு பேட்டியளித்தார். இப்போதோ கம்பீரமாகப் போலீஸாரிடத்தில் நீனு பேசினார். 

கல்லூரிக்கு  வந்த நீனுவுக்கு, மாணவிகள், பேராசிரியர்கள் திரண்டு வரவேற்பு அளித்தனர். நீனுவின் மாமா ராஜன் ஜோசப், `நீண்ட காலம் நல்லபடியாக வாழ வேண்டிய பெண். நான் கண்ணை மூடுவதற்குள் அவருக்குத் தேவையான வசதிகளை என் சக்திக்குட்பட்டு செய்வேன்’ என்று பத்திரிகையாளர்களிடம் கூறினார். கேரள அரசு கெவின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி அளித்துள்ளது. நீனுவின் படிப்புச் செலவையும் அரசே ஏற்றுள்ளது. சிவில் சர்வீஸ் தேர்வெழுத வேண்டுமென்பது  நீனுவின் லட்சியம்.

கெவினை கொலை செய்த வழக்கில் கைதாகியுள்ள நீனுவின் தந்தை ஜான் சாக்கோ, தன் மகள் தன் வீட்டில்தான் இருக்க வேண்டுமென்று நீதிமன்றத்தை நாடினார். நீனு, `கெவின் ஜோசப்பின் பெற்றோர் அனுமதிக்கும் வரை அவர்களுடன்தான் தங்குவேன்' என்று உறுதிபட கூறிவிட்டார். 

தமிழகத்தில் கௌசல்யாவை உருவாக்கியதுபோல கேரளத்தில் நீனுவை உருவாக்கியுள்ளது ஆணவக் கொலை!
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!