`சஞ்சய் தத் நியாயங்கள், பேரறிவாளனுக்குப் பொருந்தாதா?’ - குடியரசுத் தலைவர் நிராகரிப்பின் பின்னணி | Reason behind President's denial for seven persons release

வெளியிடப்பட்ட நேரம்: 14:07 (15/06/2018)

கடைசி தொடர்பு:14:40 (15/06/2018)

`சஞ்சய் தத் நியாயங்கள், பேரறிவாளனுக்குப் பொருந்தாதா?’ - குடியரசுத் தலைவர் நிராகரிப்பின் பின்னணி

`உச்ச நீதிமன்றத்துக்குப் பதில் சொல்ல வேண்டியது மத்திய அரசுதான். குடியரசுத் தலைவர் மூலமாக அறிக்கை வெளியிடுவதன் பின்னணி என்ன. இதற்குப் பதிலாக என் மகனைக் கருணைக் கொலை செய்துவிடலாம்' எனக் கொதிக்கிறார் அற்புதம்மாள். 

பேரறிவாளன்

பேரறிவாளன் உட்பட ஏழு பேரின் விடுதலையை நிராகரித்துவிட்டார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த். `உச்ச நீதிமன்றத்துக்குப் பதில் சொல்ல வேண்டியது மத்திய அரசுதான். குடியரசுத் தலைவர் மூலமாக அறிக்கை வெளியிடுவதன் பின்னணி என்ன. இதற்குப் பதிலாக என் மகனைக் கருணைக்கொலை செய்துவிடலாம்' எனக் கொதிக்கிறார் அற்புதம்மாள். 

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி உட்பட ஏழு பேர், கடந்த 27 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறைத்தண்டனையை அனுபவித்து வருகின்றனர். `இவர்களின் சிறை நன்னடத்தையைக் கருத்தில் கொண்டு, விடுதலை செய்ய வேண்டும்' என மத்திய அரசுக்குத் தமிழக அரசு 2014-ல் கடிதம் எழுதியிருந்தது. இந்தக் கடிதத்தை எதிர்த்து மத்திய அரசு உச்ச நீதிமன்றம் போனது. தீர்ப்பின் அடிப்படையில் 2016-ல் மீண்டும் தமிழக அரசின் சார்பில் மத்திய அரசுக்குக் கடிதம் எழுதப்பட்டது. இந்தக் கோரிக்கையைக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், நிராகரித்துவிட்டதாக இன்று தகவல் வெளியானது. `ஏழு பேர் விடுதலையில் மத்திய அரசுக்கு உடன்பாடில்லை. உள்துறை அமைச்சகத்தின் கோரிக்கையின் பேரிலே இந்த மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்தார்' எனவும் தகவல்கள் வெளியாகின.

``குடியரசுத் தலைவர் மூலமாக அறிவிப்பை வெளியிட்டதன் பின்னணியில் சில விஷயங்கள் அடங்கியிருக்கின்றன. உச்ச நீதிமன்றத்துக்கு மத்திய அரசு பதில் சொல்லப்போகிறதா, குடியரசுத் தலைவர் பதில் சொல்லப்போகிறாரா. குடியரசுத் தலைவர் பதில் அளிக்க முடியாது. உள்துறை அமைச்சகம் பதில் அளிக்க வேண்டிய நேரத்தில், ராம்நாத் கோவிந்த் மூலமாக அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்கள். இப்படியொரு முடிவை, பா.ஜ.க அரசு எடுத்தால், அரசியல்ரீதியாக விளைவுகளை ஏற்படுத்தும் என்ற காரணத்தால் குடியரசுத் தலைவரைக் கைகாட்டிவிட்டார்கள்" என்கின்றனர் மனித உரிமை ஆர்வலர்கள்.  

அற்புதம்மாள்குடியரசுத் தலைவரின் உத்தரவு குறித்து, பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாளிடம் பேசினோம். ``எனக்கு ஒண்ணுமே புரியவில்லை. இதில் குடியரசுத் தலைவர் எங்கே வருகிறார் எனத் தெரியவில்லை. ஆயுள் சிறைவாசிகள் வழக்கில் ஜனாதிபதி தலையிடுவார் என இதுநாள் வரையில் நான் கேள்விப்பட்டதே இல்லை. விடுதலை தொடர்பாகத் தமிழக அரசு, மத்திய அரசுக்குக் கடிதம் கொடுத்திருக்கிறது. குடியரசுத் தலைவரிடம் மனுவைக் கொடுக்கவில்லை. தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்திடம் கேட்டபோது, `மத்திய அரசு பதில் சொன்னால் விடுதலை உடனே நடக்கும். ஏழு பேர் விடுதலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மா என்ன முடிவை எடுத்தாரோ, அதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். மனுவிலும் இதைத்தான் குறிப்பிட்டிருக்கிறோம்' எனக் கடந்த வாரம் சொன்னார்.

இப்போது திடீரென இப்படியோர் உத்தரவு வருவதற்கான காரணம் புரியவில்லை. `பா.ஜ.க அரசு நல்ல பதில் சொல்லும்' என இதுநாள் வரையில் நம்பியிருந்தேன். காரணம், மாநில அரசு அவர்களோடு இணக்கமான உறவில் இருக்கிறது என்ற நம்பிக்கைதான். `இவர்கள் இருவரும் பேசி முடிவெடுப்பார்கள்' என உறுதியாக நம்பினேன். துணை முதல்வர் பன்னீர்செல்வத்தைப் பார்த்தபோது, `நாங்கள் மத்திய அரசுக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறோம்' என்றுகூட சொன்னார். எனவே, விடுதலை பற்றிய அறிவிப்பு வரும் எனக் காத்திருந்தேன். அவனது உடல்நலமும் மோசமாகிவிட்டதால் மருத்துவ உதவிக்காக அலைந்துகொண்டிருக்கிறோம்" என வேதனைப்பட்டவர், 

"இப்படி அறிவிப்பதற்குப் பதிலாக மரண தண்டனை எவ்வளவோ மேல். இதைத்தான் அவனும் நினைப்பான். இப்படிக் கொஞ்சம் கொஞ்சமாகத் துடிப்பதற்குப் பதிலாக ஒரேயடியாகச் செத்துப்போய்விட்டால் போதும். அவனும் வாழ்க்கையை இழந்து 27 வருஷமா போராடிட்டு இருக்கான். சட்டப்படிதான் போராடிக்கிட்டிருக்கான். 27 வருஷமா சட்டத்துக்குப் புறம்பா அவன் எதுவும் செய்யலை. ஏழு பேர் விடுதலைக்கு ராகுல்காந்தியே ஒப்புதல் கொடுத்துவிட்டார். ராஜீவ்காந்தி மரணத்தால் பாதிக்கப்பட்ட குடும்பமே விடுதலைக்கு ஆதரவாக இருக்கும்போது, பா.ஜ.க அரசு எதிர்க்க வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது. `சிறைவாசிகளின் உரிமை என்பது மாநிலத்தின் உரிமை' என்கிறார்கள். இந்த உரிமையில் மத்திய அரசு தலையிடலாமா, மாநில அரசுக்கு எந்த உரிமையும் இல்லையா. சிறைவாசிகளின் பராமரிப்பு என்பது மாநில அரசின் கட்டுப்பாட்டில் வருகிறது. ஆனால், விடுதலை செய்வது மட்டும் எப்படி மத்திய அரசின் கைகளுக்குப் போகும்? சி.பி.ஐ வழக்கு என மத்திய அரசு காரணம் சொல்கிறது. இந்தியாவில் எத்தனையோ மாநிலங்கள் இருக்கின்றன. எல்லா மாநிலத்திலும் உள்ள சி.பி.ஐ வழக்குகளில், மத்திய அரசுதான் முடிவு செய்கிறதா. சி.பி.ஐ விசாரித்த வழக்கான மும்பை தொடர் குண்டு வெடிப்பில் ஆயுதச் சட்டத்தின்கீழ் தண்டிக்கப்பட்ட நடிகர் சஞ்சய் தத் 8 மாதம் தண்டனை குறைப்பு பெற்று விடுதலையானபோது பா.ஜ.க அரசு தலையிட்டதா, ராஜீவ்காந்தி வழக்குக்கு மட்டும் ஏன் இப்படியொரு நிபந்தனையை வைத்திருக்கிறார்கள்? 

காந்தியைக் கொன்றவர்களை 14 வருஷத்தில் மத்திய அரசு விடுதலை செய்துவிட்டது. என் மகன் 27 வருஷமா ஜெயில்ல இருக்கிறான்.
27 வருஷம் தண்டனை அனுபவிக்கும் அளவுக்கு, அவன் எந்தத் தவறும் செய்யவில்லை. இப்போது அவனுடைய விடுதலையை ஏன் எதிர்க்க வேண்டும். இந்த வழக்கில் விளங்காத கேள்விகள் நிறைய இருக்கின்றன. பாதிக்கப்பட்டவர்களே என் மகனுக்குச் சாதகமாக இருக்கும்போது, இவர்கள் எதிர்ப்பதற்கு ஓட்டு அரசியல்தான் காரணமா. யார் பெத்த புள்ளையை வச்சிட்டு இவர்கள் ஓட்டு அரசியல் செய்கிறார்கள். 27 வருஷம் நல்லவன் எனப் பெயர் எடுத்து என்ன பயன்? எப்படிப்பட்ட குற்றவாளியையும் சீர்படுத்தி இந்தச் சமூகத்தில் வாழ வைப்பதற்காகத்தான் சிறை உருவானது. சிறையிலேயே வைத்து சாகடிக்கும் நிலையைப் பா.ஜ.க அரசு செய்வதுதான் சீர்திருத்தமா? அதற்குப் பதிலாக உடனே சாகடித்துவிடலாம். இன்று ஜனாதிபதி சொல்லிவிட்டார் அல்லவா... நாளையே என் மகனைக் கொன்றுவிடுங்கள். அவனுக்கும் நிம்மதியாகப் போய்விடும்" என அழ ஆரம்பித்தவர், சிறிது நிமிடங்களுக்குப் பிறகு, "27 வருஷமா நேர்மையாக வழக்கை எதிர்கொண்டு வருகிறோம். எந்தக் குறுக்கு வழியையும் தேடவில்லை. எங்களை ஆளும் அதிகாரம், இவர்களுக்கு எதற்காக இருக்கிறது? இந்தச் சமுதாயத்தில் வாழ முடியாத அளவுக்கு நாங்கள் குற்றவாளிகளா. என் மகன் கோடீஸ்வரனாக வாழ வேண்டாம். நேர்மையாக வாழ வேண்டும் எனச் சொல்லித்தான் வளர்த்தேன். இப்படி சிறையில் வைத்து ஏன் சித்திரவதை செய்ய வேண்டும்? சிறை விதிகளின்படி, சிறைவாசி எப்படி வாழ்கிறார் என்பதை முன்வைத்து விடுதலை செய்ய வேண்டும். ராஜீவ்காந்தி கொலை எனச் சொல்லி சொல்லியே, உலகநாடுகள் மத்தியில் கெட்ட பெயரை சம்பாதித்துக்கொண்டிருக்கிறார்கள். இந்தப் பெயரை ஏன் தொடர்ந்து உச்சரிக்க வேண்டும்? 

ராஜீவ்காந்தி கொலைக்குத் தொடர்புடைய வெடிகுண்டு பற்றி, சி.பி.ஐ இதுவரையில் விசாரிக்கவில்லை. ஆரம்பத்திலிருந்தே சொல்கிறேன். `சதி... சதி’ எனச் சொல்கிறீர்களே... இந்தச் சதியை உருவாக்கியவர்கள் பக்கம் உங்கள் விசாரணை சென்றதா. இதுவரையில் சி.பி.ஐ விசாரிக்கவே இல்லை. 'வெடித்துச் சாவதற்குக் காரணமாக இருந்த வெடிகுண்டுக்கு 9 வோல்ட் பேட்டரி வாங்கிக் கொடுத்தான்' என என் மகனுக்குத் தூக்குத்தண்டனை வாங்கித் தந்தார்கள். 'இது என் வாழ்க்கை தொடர்புடையது. அந்த வெடிகுண்டு எங்கிருந்து வந்தது என எனக்குத் தெரிய வேண்டும்' என ஆரம்பத்திலிருந்தே என் மகன் கேட்டுக்கொண்டு வருகிறான். பா.ஜ.க அரசுக்கு இதெல்லாம் தெரியாதா? என் மகனை ஏன் காலம் முழுக்க சிறையில் வைத்து சாகடிக்க வேண்டும் என நினைக்கிறார்கள். பா.ஜ.க அரசைப் பற்றி மற்றவர்கள் குறைகூறும்போதெல்லாம், `இது ஒரு பெரிய வழக்கு. மத்திய அரசு நல்ல முடிவை எடுக்கும்' என வாதம் பண்ணிட்டு இருந்தேன். அதிலும், என்னை ஏமாளியாக்கிவிட்டார்கள். 27 வருஷமாக நம்பி நம்பி ஏமாந்துட்டு வர்றேன். என் புள்ளை வாழ்க்கை போயிருச்சேப்பா... அப்படி என்னப்பா என் புள்ள தப்பு பண்ணினான். இன்னைக்கு வரைக்கும் அவன் நல்லவனா இருக்கறது தப்பா..?" என அழத் தொடங்கியவரை நம்மால் தேற்ற முடியவில்லை.