வெளியிடப்பட்ட நேரம்: 15:25 (15/06/2018)

கடைசி தொடர்பு:15:29 (15/06/2018)

`நகைகளை இங்குதான் கொடுத்தோம்’ - நகைக்கடை ஓனர்களைக் காட்டிக்கொடுத்த கொள்ளையர்கள்

விசாரணையில் அவர்கள் தொடர்ந்து நெய்வேலிப் பகுதியில் கடந்த 2 வருடங்களாகத் தொடர் செயின் பறிப்புச் சம்பவங்களில் ஈடுப்பட்டதையும்,, அந்தத் திருட்டு நகைகளை விற்ற நகைக் கடைகளையும் கூறியுள்ளனர்.

கடலூர் மாவட்டம், நெய்வேலி டவுன்ஷிப் பகுதியில், கடந்த 2 வருடமாத்க தனியாக நடந்துசென்ற பெண்களைக் குறிவைத்து செயின் பறிப்புச் சம்பவங்கள் தொடர்ந்து நடந்துவந்தன. இதையடுத்து, நெய்வேலி டவுன்ஷிப் போலீஸார் நகர் முழுவதும் இரவு பகலாக ரோந்துப் பணியில் ஈடுபட்டும் திருட்டுச் சம்பவங்கள் குறையவில்லை. இதையடுத்து, நெய்வேலி டவுன்ஷிப் இன்ஸ்பெக்டர் ரவீந்திரராஜ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு நடந்த தீவிர விசாரணையில், செயின் பறிப்பு வழக்கில் தொடர்புடைய 4 பேரை போலீஸார் பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார்கள்.

நகைகள்

இந்த விசாரணையில், நெய்வேலி பகுதியில் கடந்த 2 வருடங்களாக நடந்த தொடர் செயின் பறிப்புச் சம்பவங்களில் அவர்கள் ஈடுபட்டதையும் திருட்டு நகைகளை விற்ற நகைக் கடைகளையும் கூறியுள்ளனர். இதையடுத்து 4 பேர் கொடுத்த தகவலின் பேரில் கடலூர், குறிஞ்சிப்பாடி, விழுப்புரம், விருத்தாசலம், சிதம்பரம் ஆகிய பகுதிகளில் உள்ள நகைக் கடைகளில் திருட்டு நகை வாங்கிய கடைகளுக்குச் சென்று நகையை மீட்கும் நடவடிக்கையில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

இன்று காலை, கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் உள்ள பிரபல நகைக் கடைக்கு நெய்வேலி போலீஸ் டீம் சென்றுள்ளது. அப்போது, கடை உரிமையாளர் மற்றும் பணியாளர்கள் போலீஸுக்கு ஒத்துழைக்காமல், நாங்கள் நகை வாங்கவில்லை எனக் கூறி தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து போலீஸார், சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர் பாலு என்பவரை நெய்வேலி டவுன்ஷிப் காவல் நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

இதேபோல, கடந்த ஜனவரி மாதம் 8-ம் தேதி, நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை போலீஸார், திருட்டு நகைகளை மீட்க வந்தபோது இதே கடையில் தகராறு ஏற்பட்டு, பின்னர் வாங்கிய திருட்டு நகைகளை ஒப்படைத்தனர். திருட்டு நகை வாங்கிய வழக்கில் கடலூரில் உள்ள பிரபல நகைக்கடை உரிமையாளரை போலீஸார் விசாரித்துவரும் சம்பவம் பெரும் பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது.