வெளியிடப்பட்ட நேரம்: 15:45 (15/06/2018)

கடைசி தொடர்பு:15:45 (15/06/2018)

மாநில அரசின் உரிமைகளில் தலையிடுகிறது..! பிரதமர் மோடிக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்

'அணை பாதுகாப்பு மசோதா, மாநிலங்களின் உரிமைகளைப் பறிப்பதுபோல உள்ளது. எனவே, அதை நிறைவேற்றக் கூடாது' என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார். 

எடப்பாடி பழனிசாமி

இந்தியா முழுவதுமுள்ள சுமார் 5,300 அணைகளை மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் வகையில், அணைப் பாதுகாப்பு மசோதா உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மசோதாவுக்கு ஜூன் 13-ம் தேதி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார். அதில், '2016-ல் உருவாக்கப்பட்ட அணைப் பாதுகாப்பு வரைவு மசோதாவை ஜெயலலிதா எதிர்த்தார்.

இந்த மசோதா, மாநில உரிமைகளில் தலையிடுகிறது என்று தெரிவித்திருந்தார். அதே நிலைப்பாடுதான் தற்போதைய அரசும் எடுத்துள்ளது. மத்திய அமைச்சரவையின் இந்த முடிவை தமிழக அரசு கடுமையாகக் கண்டிக்கிறது. இந்த மசோதாவை சட்டமாக நிறைவேற்றக் கூடாது. இந்த மசோதா குறித்து மாநிலங்களில் உரிய கருத்துக் கேட்டறிந்தப் பிறகே சட்டமாக நிறைவேற்ற வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார்.