வெளியிடப்பட்ட நேரம்: 16:25 (15/06/2018)

கடைசி தொடர்பு:16:25 (15/06/2018)

`அரவிந்தன் உயிரோடு இருந்தால் வாழ முடியாது’ - அம்மாவுக்காகக் கொலைசெய்த மகன்

 கொலை

சென்னையில், ஆட்டோ டிரைவர் அரவிந்தன் கூலிப்படைமூலம் கொலைசெய்யப்பட்ட  சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்விரோதம் காரணமாகக் கொலை நடந்துள்ளது.

சென்னை கொரட்டூர், கங்கை அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ரவி. இவருக்கு அப்புன், அரவிந்தன் உள்பட நான்கு மகன்கள். அதே பகுதியைச் சேர்ந்தவர், ஜீவகன். ரியல் எஸ்டேட் தொழில் செய்துவருகிறார். இவரின் மனைவி மஞ்சுளா. இவர்களின் மகன் ஆகாஷ். சில ஆண்டுகளுக்கு முன்பு மஞ்சுளாவிடம் அரவிந்தன் கடனாகப் பணம் வாங்கியுள்ளார். பணத்தைத் திரும்பக் கொடுக்காததால் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அரவிந்தன், மஞ்சுளாவை அடித்துள்ளார். இதனால் இரண்டு குடும்பத்துக்கும் முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. 

 கடந்த மார்ச் மாதம், ஆகாஷை கொலைசெய்ய அரவிந்தன் தரப்பினர் முயன்றுள்ளனர். இதுதொடர்பாக, கொரட்டூர் போலீஸார் வழக்குப்பதிவுசெய்து அரவிந்தன், அப்புன் ஆகியோரைக் கைதுசெய்துள்ளனர். சிறைக்குச் சென்ற அரவிந்தன், கடந்த 10 தினங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியில் வந்தார். தொடர்ந்து ஆகாஷை கொலைசெய்ய அரவிந்தன் தரப்பு திட்டம் தீட்டியுள்ளது. இந்தத் தகவலைத் தெரிந்ததும் அரவிந்தனைக் கொலை செய்ய ஆகாஷ் தரப்பு முடிவுசெய்தது. அதன்படி, நேற்றிரவு வீட்டிலிருந்து வெளியில் வந்த அரவிந்தனை மர்மக் கும்பல் உருட்டுக்கட்டையால் சரமாரியாகத் தாக்கியது. பிறகு கத்தி, அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு அந்தக் கும்பல் தப்பியது. 

 கொலை

இதுகுறித்துத் தகவலறிந்ததும், கொரட்டூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்துசென்று அரவிந்தனின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக ஆகாஷ், அவரின் அப்பா ஜீவகன், கூலிப்படையைச் சேர்ந்த விக்கி என்ற விக்னேஷ், பிரசாந்த், முனுசாமி, மணி ஆகியோரைக் கைதுசெய்துள்ளனர். 

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``அரவிந்தன் மீது கொரட்டூர், அம்பத்தூர் எஸ்டேட், ஜெ.ஜெ.நகர் ஆகிய காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆட்டோ டிரைவரான அரவிந்தனுக்கும் ஆகாஷுக்கும் நீண்ட காலமாக முன்விரோதம் இருந்து வருகிறது. ஆகாஷை கொலைசெய்யத் திட்டமிட்டுள்ளார் அரவிந்தன். ஆனால், ஆகாஷ் முந்திக்கொண்டு அரவிந்தனைக் கொலை செய்துள்ளார். இந்த வழக்கில் இன்னும் சிலரைத் தேடிவருகிறோம்" என்றனர். 

போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``அரவிந்தன், அவரின் அண்ணன் அப்புன் ஆகியோர்மீது ஏற்கெனவே வழக்குகள் உள்ளன. ஆட்டோ டிரைவரான அரவிந்தன், உள்ளூர் பிரச்னைகளில்தான் முதலில் தலையிட்டார். இதனால், அவரிடம் பஞ்சாயத்துக்கள் வரத்தொடங்கின. இந்தச் சமயத்தில்தான் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் மஞ்சுளாவை அரவிந்தன் அடித்துள்ளார். அதன்பிறகுதான் இரண்டு குடும்பத்துக்கும் இடையில் அடிக்கடி மோதல் ஏற்பட்டுவந்தது. அரவிந்தன் உயிரோடு இருந்தால் தான் வாழ முடியாது என்று கருதிய ஆகாஷ், கூலிப்படையினருக்கு பணம் கொடுத்து கொலைசெய்துள்ளார். இதற்காக குறிப்பிட்ட தொகை கைமாறியுள்ளது" என்றார். 

 இந்த கொலைச் சம்பவம், சென்னை பாடி மற்றும் கொரட்டூர் பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.