வெளியிடப்பட்ட நேரம்: 17:20 (15/06/2018)

கடைசி தொடர்பு:17:20 (15/06/2018)

`இனி ஜூலை மாத தொடக்கத்திலேயே நீட் பயிற்சி!’ - அமைச்சர் செங்கோட்டையன்

`அரசின் நீட் பயிற்சி மையங்களில், கடந்த ஆண்டு நான்கு மாதங்கள்தான் பயிற்சிகள் வழங்கப்பட்டன. இந்த ஆண்டு அப்படி இருக்காது' எனப் பேசியிருக்கிறார், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்'. 

செங்கோட்டையன்  நீட்

சென்னை நுங்கம்பாக்கத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ` பள்ளிப்படிப்பு முடித்தவுடன், எதிர்காலத்தில் மாணவர்கள் சிறந்து விளங்க பள்ளிக்கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அதன்படி, மாணவர்களின் திறனை மேம்படுத்தும் வகையில் 15 வகையான பாடத்திட்டங்களைக் கொண்டுவர திட்டமிட்டிருக்கிறோம். மாணவர்கள் அனைவருக்கும் சிறந்த நூலகத்தைத் தர வேண்டும் என்ற முறையில், அனைத்து மாவட்டங்களிலும் நடமாடும் நூலகத்தை விரைவில் அமைக்க இருக்கிறோம். இதன்மூலம், சிறந்த கல்வியாளர்களாக மாணவர்களை உருவாக்குவதற்குத் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுவருகிறது. மேலும், மாணவர்களின் ஆங்கிலத் திறனை வளர்ப்பதற்காக ஜெர்மன், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளிலிருந்து சிறந்த பயிற்சியாளர்களை வரவழைக்க இருக்கிறோம். 

 மாணவர்கள், ஆசிரியர்களுக்குச் சிறந்த ஆங்கிலப் பயிற்சிகளை அளிக்க முடியும். மாணவர்களின் மன அழுத்தங்களைக் குறைப்பதற்காக, எப்போது தேர்வு நடக்கும்? எப்போது முடிவுகள் வெளியாகும் என இந்திய வரலாற்றிலேயே தமிழக அரசுதான் முதன்முறையாக அறிவித்தது. இந்த ஆண்டு நடந்த நீட் தேர்வில், ஏறத்தாழ 1,412 மாணவர்கள் தேர்ச்சிபெற்றுள்ளனர். மதிப்பெண் என்பது வேறு, தேர்ச்சி என்பது வேறு. இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, அரசின் பயிற்சி மையம் மூலம் நான்கு மாதங்கள்தான் பயிற்சி அளிக்கப்பட்டது. ஆனால் இனிவரும் ஆண்டில், ஜூலை மாத தொடக்கத்திலேயே 412 அரசு மையங்களிலும் நீட் தேர்வுக்கான பயிற்சி வழங்கப்படும். இந்த ஆண்டு, தமிழகத்தில் இருந்து 150 மாணவர்கள் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேர்க்கை பெறுவார்கள்' என்றார்.