`என்னுடைய ப்ளஸ் பாயின்டுகளைப் பாருங்கள்!’ - கொங்கு அமைச்சரிடம் வருத்தப்பட்ட எடப்பாடி பழனிசாமி | They should consider my positive side too, feels Edapadi palanisamy

வெளியிடப்பட்ட நேரம்: 16:39 (15/06/2018)

கடைசி தொடர்பு:16:39 (15/06/2018)

`என்னுடைய ப்ளஸ் பாயின்டுகளைப் பாருங்கள்!’ - கொங்கு அமைச்சரிடம் வருத்தப்பட்ட எடப்பாடி பழனிசாமி

`என்னைக் கவிழ்ப்பதற்காக ஸ்டாலினோடு தினகரன் கூட்டு சேர்ந்தாலும் நமக்கு அது லாபமாக மாறும்' எனக் கொங்கு அமைச்சர் ஒருவரிடம் பேசியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. 

எடப்பாடி பழனிசாமி

அ.தி.மு.க-வின் 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்ட வழக்கில் வெளியான முரண்பட்ட தீர்ப்பால், உற்சாகத்தில் இருக்கின்றனர் அமைச்சர்கள். ' என்னைக் கவிழ்ப்பதற்காக ஸ்டாலினோடு தினகரன் கூட்டு சேர்ந்தாலும் நமக்கு அது லாபமாக மாறும்' என கொங்கு அமைச்சர் ஒருவரிடம் பேசியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. 

தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவிடம், ' முதல்வர் மீது நம்பிக்கை இல்லை' எனக் கடிதம் கொடுத்த காரணத்துக்காகத் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர் 18 எம்.எல்.ஏக்கள். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியான இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர் தகுதிநீக்க எம்.எல்.ஏக்கள். இந்த வழக்கை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதியரசர் சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. வழக்கின் விசாரணை நிறைவடைந்தாலும், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தனர். கடந்த ஆறு மாதகாலமாக எதிர்பார்க்கப்பட்டு வந்த இந்த வழக்கின் தீர்ப்பு, நேற்று வெளியானது. இதில், ' 18 எம்.எல்.ஏ-க்களைத் தகுதிநீக்கம் செய்த சபாநாயகரின் உத்தரவு செல்லும்' என்று தலைமை நீதிபதியும், '18 எம்.எல்.ஏ-க்களை தகுதிநீக்கம் செய்த சபாநாயகரின் உத்தரவு செல்லாது' எனவும் நீதியரசர் சுந்தரும் தீர்ப்பளித்தனர். இதையடுத்து, இந்த வழக்கு மூன்றாவது நீதிபதிக்குப் பரிந்துரைக்கப்பட்டது. 'யார் விசாரிப்பார் என்பதை நீதியரசர் குலுவாடி ரமேஷ் அறிவிப்பார்' என்ற தகவலும் வெளியாகியுள்ளது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவால், அ.தி.மு.க வட்டாரத்தில் உற்சாகம் களைகட்டியுள்ளது. 

இதுகுறித்து கொங்கு மண்டல அமைச்சர் ஒருவரிடம் விரிவாகப் பேசியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அப்போது, ' வழக்கில், நீதியரசர் சுந்தர் எதிராகத் தீர்ப்பு வழங்கலாம் என்பதை முன்னரே யூகித்திருந்தேன். அதேநேரம், ' ஆளுநரைப் பார்ப்பது கட்சித் தாவல் ஆகாது. ஆனால், அதன் நோக்கம் கட்சிக்கு எதிரானது' என்ற அடிப்படையில் தலைமை நீதிபதி தீர்ப்பு கொடுப்பார் என நினைத்தேன். அதனால்தான், எந்தவித பதற்றமும் இல்லாமல் நீதிமன்றத் தீர்ப்பை கவனித்து வந்தேன். நாம் நினைத்ததுபோலவே மாறுபட்ட தீர்ப்பு வந்தது. இனி இந்த வழக்கில் மூன்றாவது நீதிபதி விசாரித்துத் தீர்ப்பு சொல்வதற்கு மூன்று மாதங்கள் ஆகும். அதன்பிறகு, தகுதிநீக்கம் செல்லாது என இவர்கள் சட்டசபைக்கு வந்தாலும் நமக்குக் கவலையில்லை. ஏனென்றால், ஸ்டாலினும் தினகரனும் ஒன்று சேராமல் நம்மை வீழ்த்த முடியாது. அப்படி ஒன்று சேர்ந்தால், அது நமக்குத்தான் சாதகமாக மாறும். காரணம், சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா ஜெயிலுக்குப் போனதற்குக் காரணம், தி.மு.க போட்ட வழக்குதான். 

அம்மா (ஜெயலலிதா) இமேஜ் சரிந்ததற்கும் இந்த வழக்குதான் காரணம். இந்நிலையில், எதிரிகளோடு ஸ்டாலின் சேர்ந்துவிட்டார் என தி.மு.க-வுக்குப் பின்னடைவாக மாறும். அதேபோல, எதிரியிடம் சேர்ந்து தினகரன் துரோகம் செய்துவிட்டார் என சசிகலா குரூப்புக்கு எதிராகப்  பிரசாரம் செய்வதற்கும் வாய்ப்பாக மாறும். ஸ்டாலின், தினகரன் இணையும்போது இருவருமே பலமிழந்துபோவார்கள். தினகரன் முழுத்துரோகி என்ற உண்மையையும் மக்கள் நம்புவார்கள். எனவே, எந்தச் சூழ்நிலை வந்தாலும் தமிழ்நாட்டில் நான் ஒரு தலைவராக இருப்பேன். அண்ணா தி.மு.க வரலாற்றில் நான்தான் பெரிய தலைவர் என்பது நிரூபணம் ஆகியிருக்கிறது' என்றவர், ' ஊடகங்கள் எனக்கு எதிராகச் செயல்படுகின்றன. என்னுடைய ப்ளஸ் பாயின்டுகளை ஊடகங்களும் அரசியல் விமர்சகர்களும் மக்களிடம் சரியாகக் கொண்டு செல்வதில்லை. ஊடகங்கள் எல்லாம் சசிகலா குடும்பம் பக்கம் ஆதரவாக நிற்கின்றன. இதற்கு நடராசன்தான் காரணம்' என வருத்தப்பட்டு விவரித்திருக்கிறார்.