வெளியிடப்பட்ட நேரம்: 17:28 (15/06/2018)

கடைசி தொடர்பு:17:30 (15/06/2018)

`போலீஸ் வேன் வந்தாலே பயமாயிருக்கு’ - நள்ளிரவு கைதால் வெறிச்சோடிய மடத்தூர் கிராமம்

தூத்துக்குடியில் நள்ளிரவில் காவல்துறையினர் அத்துமீறி ஆண்களைக் கைதுசெய்துவருவதால், ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றியுள்ள கிராமப் பகுதி, மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடிக் காணப்படுகிறது.

தூத்துக்குடியில்,  காவல்துறையினர் அத்துமீறி நள்ளிரவில் ஆண்களைக் கைதுசெய்துவருவதால், ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகள் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடிக் காணப்படுகின்றன.

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி, கடந்த மே 22-ம் தேதி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பொதுமக்கள் பேரணியாகச் சென்றபோது ஏற்பட்ட கலவரத்தில், போலீஸாரின் துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் துப்பாக்கிச் சூடு மற்றும் தடியடியால் காயம் அடைந்தனர். தூத்துக்குடி வடக்கு காவல்நிலையம், தெற்குக் காவல் நிலையம், மத்திய காவல் நிலையம், புதுக்கோட்டை காவல் நிலையம் மற்றும் சிப்காட் காவல் நிலையம் ஆகியவற்றில் பல்வேறு பிரிவுகளில் 200-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. 

மடத்தூர் கிராமம்

துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு அடுத்த 23-ம் தேதி முதல், ஸ்டெர்லைட் ஆலை சுற்றுவட்டார கிராமங்கள், மீனவர் பகுதி என  தூத்துக்குடி மாநகரப் பகுதிகள் முழுவதிலும் போலீஸார்  வீடுகளில் புகுந்து இரவு நேரத்தில் ஆண்களைக் கைதுசெய்துவருவதாக மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். கைது நடவடிக்கையைக் கண்டித்து, பல்வேறு அரசியல் கட்சிகளும் எதிர்ப்புகளைகாட்டி வருகின்றனர். கிராம மக்களும், ஆட்சியர் சந்தீப் நந்தூரியிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். கைதைக் கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிட் கட்சியினர் கண்டனப் பேரணி மற்றும் பொதுக் கூட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.

மடத்தூர் கிராமம்

கைது நடவடிக்கையை உடனடியாகத் தடுத்துநிறுத்திட வலியுறுத்தி, தூத்துக்குடி வழக்கறிஞர்கள் சங்கத்தினர் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிக்கும், டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதிக்கும் கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர். இருப்பினும், கைது நடவடிக்கை தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. நேற்று ஒரு நாள் மட்டும் தூத்துக்குடியில் 23 பேர் வரை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதனால், தூத்துக்குடியில் அச்சம் கலந்த பதற்றமான நிலையே நிலவிவருகிறது. மக்கள் நடமாட்டம் ஏதும் இன்றியும், கடைகள் அடைக்கப்பட்ட நிலையிலும் மடத்தூர் கிராமம் இன்று வெறிச்சோடிக் காணப்பட்டது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், “ஊருக்குள்ள பகல் நேரத்திலும் இரவு நேரத்திலும் வேன்களில் போலீஸார் திடீரென  வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் விசாரணை செய்யவும் எனச் சொல்லி, வீட்டில் உள்ள ஆண்களைக் கைதுசெய்து கூட்டிச் செல்கின்றனர். மே 23-ம் தேதியிலிருந்து இதே நிலைதான். பெண்கள், குழந்தைகள், போலீஸ்வண்டி சத்தம் கேட்டாலே பயப்படுறாங்க. ஊருல சிலர் வீட்டையே காலிசெஞ்சுட்டுப் போயிட்டாங்க. ஆள்கள் நடமாட்டம் இல்லாமலும், தெருக் கடைகள் திறக்கப்படாமலும் ஊரே வெறிச்சோடிக் கிடக்குது.  நிம்மதியா தூங்கக்கூட முடியலை” என்றனர் வேதனையுடன்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க