வெளியிடப்பட்ட நேரம்: 19:40 (15/06/2018)

கடைசி தொடர்பு:19:40 (15/06/2018)

'பிரச்னைக்குக் காரணமான டிக்கெட்'- பெண் போலீஸ்- கண்டக்டர் கடும் வாக்குவாதம்

டிக்கெட் எடுக்கும் விவகாரத்தில், பெண் போலீஸுக்கும் அரசு பஸ் கண்டக்டருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பெண் போலீஸ் கொடுத்த புகாரின்பேரில், மானாமதுரையில் பணிமனைக்குள் புகுந்து ஒட்டுநர், நடத்துநர்மீது காவல்துறை தாக்குதல் நடத்தியதோடு கைதும் செய்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை சிப்காட் வளாகத்திற்குள் உள்ள செயல்படாத பணிமனைக்குள் தூங்கிக்கொண்டிருந்த நடத்துநரையும், ஒட்டுநரையும் காவல்துறையினர் தாக்கி, மானாமதுரை காவல் நிலையத்திற்கு இழுத்துச் சென்றுள்ளனர். இந்தச் செயலைக் கண்டித்து, போக்குவரத்துகள் நிறுத்தப்பட்டன.

பாதிக்கப்பட்ட கண்டக்டர்- டிரைவர்

திருப்புத்தூரிலிருந்து மானாமதுரைக்கு நேற்று இரவு 10 மணிக்கு வந்திருக்கிறார்கள். இந்தப் பேருந்தில், திருவாடானை காவல்நிலைய பெண் போலீஸ் கிருபாராணி ஏறியிருக்கிறார். அந்தப் பெண் போலீஸிடம் நடத்துநர் முருகானந்தம் டிக்கெட் கேட்டுள்ளார். தொடர்ந்து மொபைல் போனில் பேசிக்கொண்டிருந்ததால், மேடம் எங்கே போகணும் டிக்கெட் எடுங்க என்றதும், 'நான் இதுவரைக்கும் எந்த பஸ்சிலும் டிக்கெட் எடுத்ததில்லை' என்று கிருபாராணி கூறியதாகத் தெரிகிறது. இதனால், இருவருக்கும் வாக்குவாதம் நடந்திருக்கிறது. பஸ்சில் வந்த பயணிகள் எல்லாம் அந்தப் பெண் போலீஸை சத்தம் போட்டிருக்கிறார்கள். அதன்பிறகு, 20 ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கியிருக்கிறார். மானாமதுரை வந்ததும் டிரைவர் செந்தில்குமார் பிரச்னைக்குரிய  போலீஸை போட்டோ எடுத்திருக்கிறார். டிரைவர், கண்டக்டர் புகார் கொடுப்பதற்குள் முந்திக்கொண்டு மானாமதுரை காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார் பெண் போலீஸ் கிருபாராணி.

இது, பஸ் கண்டக்டர் முருகானந்தம், டிரைவர் செந்தில்குமார் ஆகியோருக்குத் தெரியவில்லை. அங்குள்ள சிப்காட் பணிமனையில் தூங்கிக்கொண்டிருந்தபோது, சப்-இன்ஸ்பெக்டர் வாசு தலைமையில் போலீஸ் டீம் செந்தில்குமார், முருகானந்தம் ஆகியோரை அடித்து இழுத்துச்சென்றது. இந்தத் தகவல் போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கங்கத்திற்கு தெரிந்து, காவல் நிலையம் முன்பு குவிந்ததால், பரபரப்பு ஏற்பட்டது. இருதரப்புமே போலீஸில் புகார் கொடுத்திருக்கிறார்கள். ஓட்டுநர் செந்தில்குமார், நடத்துநர் முருகானந்தம் ஆகியோர் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.

இதனால், திருப்பத்தூர் சென்ற அரசுப் பேருந்து, வழியிலேயே நிறுத்தப்பட்டது. மானாமதுரை ,சிவகங்கை போன்ற இடங்களில் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இருதரப்பினர் மீதும் வழக்குப் பதிவுசெய்ய போலீஸ் திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க