`இரண்டே நாளில் முடிந்த ஆப்கானிஸ்தானின் முதல் டெஸ்ட்!’ - இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி

ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 262 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 

இந்திய அணி

சமீபத்தில் டெஸ்ட் அந்தஸ்து பெற்ற ஆப்கானிஸ்தான் அணி, தனது முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை எதிர்த்து விளையாடியது. பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் அஜிங்கியா ரஹானே பேட்டிங் தேர்வு செய்தார். இதையடுத்துக் களமிறங்கிய இந்திய அணி முதல் நாளில் 6 விக்கெட் இழப்புக்கு
347 ரன்கள் எடுத்திருந்தது. ஹர்திக் பாண்ட்யா 10 ரன்களிலும் அஷ்வின் 7 ரன்களிலும் ஆகியோர் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முந்தைய நாள் ஸ்கோருடன் இரண்டாவது நாள் ஆட்டத்தைத் தொடர்ந்த இந்திய அணி, 104.5 ஓவர்களில் 474 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி தரப்பில் ஷிகர் தவான் 107 ரன்களும் முரளி விஜய் 105 ரன்களும் எடுத்தனர். இரண்டாம் நாள் ஆட்டத்தில் பாண்ட்யா 71 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த நிலையில், உமேஷ் யாதவ் 26 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். ஆஃப்கானிஸ்தான் தரப்பில் அஹ்மத்சாய் 3 விக்கெட்டுகளும் ரஷீத் கான் மற்றும் வஃபாதார் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். 

சர்வதேச டெஸ்ட் அரங்கில் முதன்முதலாகப் பேட்டிங் செய்ய களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள், இந்திய அணியின் பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல் திணறினர். உமேஷ் யாதவ் - இஷாந்த் ஷர்மா வேகக்கூட்டணி ஆப்கானிஸ்தான் வீரர்களுக்குக் கடும் நெருக்கடி கொடுத்தது. மறுபுறம் அஷ்வின் - ஜடேஜா கூட்டணியும் மிரட்ட ஆஃப்கானிஸ்தான் அணி, 27.5 ஓவர்கள் முடிவில் 109 ரன்களில் ஆட்டமிழந்தது. அந்த அணி தரப்பில் அதிகபட்சமாக முகமது நபி 24 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் அஷ்வின் 4 விக்கெட்டுகளும் ஜடேஜா மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதையடுத்து, பாலோ ஆன் பெற்ற ஆப்கானிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்து ஆடியது. 

இந்தமுறையும் ஆப்கானிஸ்தான் வீரர்கள் இந்திய அணியின் பந்துவீச்சில் திணறினர். அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் பெரிய அளவில் ஜொலிக்கத் தவறவே, 38.4 ஓவர்களில் 103 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இரண்டாவது இன்னிங்ஸில் அதிகபட்சமாக சாஹிதி 36 ரன்களும் கேப்டன் ஸ்டானிக்ஸாய் 25 ரன்களும் சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் ஜடேஜா 4 விக்கெட்டுகளும் உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதன்மூலம் இந்திய அணி, இன்னிங்ஸ் மற்றும் 262 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!