வெளியிடப்பட்ட நேரம்: 21:40 (15/06/2018)

கடைசி தொடர்பு:21:40 (15/06/2018)

`ஆர்டலி’ வேலைக்குச் சென்ற போலீஸைத் தாக்கிய ஏ.டி.ஜி.பி மகள்! - கேரளாவில் பரபரப்பு

நாடு முழுவதும் ஆர்டர்லி முறையை ஒழிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

கேரளாவில் ஏ.டி.ஜி.பி வீட்டில் `ஆர்டலி’ வேலைக்குச் சென்ற போலீஸ் ஒருவரை, ஏ.டி.ஜி.பி-யின் மகள் அடித்து உதைத்த சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. 

’ஆர்டலி’ கவாஸ்கர்

கேரள மாநிலத்தில் பட்டாலியன் ஏ.டி.ஜி.பி-யாக இருப்பவர், சுதீஷ் குமார். இவரது வீட்டில் காவலரான கவாஸ்கர் என்பவர் `ஆர்டலி’ பணியாற்றி வந்துள்ளார். நேற்று காலை இவர் ஏ.டி.ஜி.பி-யின் வீட்டுக்குச் சென்று அவரது மனைவி மற்றும் மகளை திருவனந்தபுரத்தில் உள்ள நேப்பியார் மியூசியம் வளாகத்தில் உள்ள மைதானத்தில் காலையில் நடைப்பயிற்சிக்காக அழைத்துச் சென்றுள்ளார்.

நடைப்பயிற்சிக்கு அழைத்துச் செல்ல சற்று கால தாமதமாக டிரைவர் கவாஸ்கர் வந்ததால் அவரை ஏ.டி.ஜி.பி-யின் மகள் ஸ்நிக்தா கடுமையான சொற்களால் திட்டியுள்ளார். பின்னர், அவர்கள் நடைப்பயிற்சிக்குச் சென்ற நிலையில், வாகனத்தின் உள்ளேயே செல்போனை வைத்து விட்டுச் சென்று விட்டனர். திரும்பி வந்தபோது டிரைவர் கவாஸ்கர், வாகனத்தை சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு வெளியில் இருந்துள்ளார்.

அங்கு வந்த ஸ்நிக்தா மீண்டும் டிரைவர் கவாஸ்கருடன் வாக்குவாதம் செய்ததுடன், வாகனத்தின் சாவியைக் கேட்டிருக்கிறார். அரசு வாகனத்தின் சாவியைக் கொடுக்க முடியாது என கவாஸ்கர் மறுத்துள்ளார். அதனால் ஆத்திரமடைந்த ஸ்நிக்தா, தன்னை எதிர்த்துப் பேசிய டிரைவரை பொது இடத்தில் வைத்து அடித்து உதைத்துள்ளார். பின்னர் அங்கிருந்து ஆட்டோ மூலம் வீட்டுக்குச் சென்று விட்டார்.

ஏ.டி.ஜி.பி-யின் மகள் தாக்கியதில் டிரைவர் கவாஸ்கரின் கழுத்து, முதுகு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டதால் திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தன்னை ஸ்நிக்தா தாக்கியதாக போலீஸில் புகார் செய்தார். ஆனால் அவரது புகார் ஏற்றுக் கொள்ளப்படாத நிலையில், ஏ.டி.ஜி.பி-யின் மகள் ஸ்நிக்தா அளித்த புகாரின் பேரின் மியூஸியம் காவல்நிலையத்தில் கவாஸ்கர் மீது ஜாமீனில் வெளிவரமுடியாத பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

இந்த விவகாரத்தில் காவலர் சங்கம் தலையிட்டதால் ஏ.டி.ஜி.பி-யின் மகள் ஸ்நிக்தா மீது அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், ஏ.டி.ஜி.பி-யான சுதீஷ் குமார் வீட்டில் இது போன்ற சம்பவம் நடப்பது இது முதல் முறை அல்ல என்றும் இதற்கு முன்பு பலமுறை அதிகாரியிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் டிரைவர் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே பிஜூ என்ற காவலரும் இதே போன்ற குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ஏ.டி.ஜி.பி சுதீஷ் குமார் வீட்டில் ஆர்டலி வேலைக்குச் சென்றபோது காய்கறி வாங்கி வருவது முதல் பல்வேறு வேலைகளை செய்ய நிர்பந்திக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். அத்துடன், அதிகாரி சுதீஷ்குமாரின் வீட்டில் வளரும் நாய்க்கு மீன் பொறித்துத் தருமாறு அவரது குடும்பத்தினரால் கட்டாயப்படுத்தப்பட்டதாகவும் குற்றம்சாட்டியிருக்கிறார். 

காவலர் கவாஸ்கர் தாக்கப்பட்ட விவகாரத்தில் தலையிட்டுள்ள கேரளக் காவலர் நலச்சங்கத்தினர், ஏ.டி.ஜி.பி-யின் குடும்பத்தினர் மீது மட்டும் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏ.டி.ஜி.பி சுதீஷ் குமார் மற்றும் டி.ஜி.பி-யான லோக்நாத் பெஹேரா ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தியிருப்பதால் இந்த விவகாரத்தில் சிக்கல் வலுத்து வருகிறது.