நள்ளிரவில் வீடுகளில் புகுந்து கைதுசெய்வதை நிறுத்த வேண்டும் - எம்.எல்.ஏ., கீதாஜீவன் கோரிக்கை! | mla geetha jeevan request to the police for stop arresting tuticorin people

வெளியிடப்பட்ட நேரம்: 00:30 (16/06/2018)

கடைசி தொடர்பு:11:49 (16/06/2018)

நள்ளிரவில் வீடுகளில் புகுந்து கைதுசெய்வதை நிறுத்த வேண்டும் - எம்.எல்.ஏ., கீதாஜீவன் கோரிக்கை!

``தூத்துக்குடியில் மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பி வரும் நிலையில், நீதிமன்றத்தின் உத்தரவையும் மீறிய காவல்துறையினரின் கைது நடவடிக்கை மக்களுக்கு மிகவும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.” என தூத்துக்குடி தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ., கீதாஜீவன் தெரிவித்துள்ளார். 

கீதாஜீவன்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்குப் பிறகு, வீடுகளில் புகுந்து காவல்துறையினர் கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றனர். இதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என தூத்துக்குடி தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ., கீதாஜீவன், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பாவிடம்  மனு அளித்தார். 

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடிட வலியுறுத்தி, கடந்த 22-ம் தேதி ஆட்சியர் அலுவலகம் நோக்கி முற்றுகையிட மக்கள் பேரணியாகச் சென்றனர். இதில், போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதனால், தூத்துக்குடி மாவட்டமே கலவர பூமியாக மாறியது. தூத்துக்குடி மாநகரம் முழுவதும் போலீஸார் குவிக்கப்பட்டனர். மக்கள் வெளியே வரவே அச்சப்பட்டனர். 

கீதாஜீவன்

 ஆலை சீல் வைக்கப்பட்ட பிறகும், கடந்த சில நாள்களாகத்தான் தூத்துக்குடியில் அமைதி திரும்பி, மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பி  யுள்ளனர். இதற்கிடையில், முற்றுகைப் போராட்டம் மற்றும் கலவரத்தில் சம்பந்தப்பட்டவர்களைக் கைதுசெய்கிறோம் என்ற போர்வையில் நீதிமன்றத்தின் உத்தரவையும் மீறி, நள்ளிரவில் வீடு வீடாகச் சென்று அப்பாவி மக்கள், மாணவர்களைக் கைதுசெய்து வருகின்றனர். இதனால், மக்கள் எந்த நேரத்திலும் ஒருவித அச்சத்துடனும் பதற்றத்துடனும் காணப்படுகின்றனர்.

இந்தக் கைது நடவடிக்கையால், மீண்டும் ஏதாவது அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்றுவிடக் கூடாது. எனவே, போலீஸார் கைது நடவடிக்கையைக் கைவிட வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடிட வலியுறுத்தி, அமைச்சரவையில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றிட தி.மு.க., சார்பில் சட்டமன்றத்தில் தொடர்ந்து வலியுறுத்திவருகிறோம்” என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க