`இதேபோல் எத்தனை நாள்தான் பதற்றத்துடன் இருப்பது?' - போலீஸாரால் ஊர் கோயிலில் தங்கும் பெண்கள்

தூத்துக்குடியில், காவல் துறையினரின் நள்ளிரவுக் கைது நடவடிக்கையால், ஊரில் உள்ள கோயிலின் முன்பு பெண்கள் குழந்தைகளுடன்  இரவில் ஒரே இடத்தில்  இரண்டாவது நாளாகத் தங்கினர்.

பெண்கள்


தூத்துக்குடியில், கடந்த 22-ம் தேதி நடந்த ஆட்சியர் அலுவலக முற்றுகைப் போராட்டத்தின்போது ஏற்பட்ட கலவரத்தில், 13 பேர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இயல்புநிலை திரும்பிய பின்னும் தொடர்ந்து வீடு புகுந்து ஆண்களைக் கைதுசெய்யும் நடவடிக்கையும் தொடர்ந்து வருவதாக மக்கள் குற்றம்சாட்டிவருகின்றனர். 

இந்நிலையில், கைது நடவடிக்கையைக் கண்டித்து பல கட்சியினரும், பல அமைப்பைச் சேர்ந்தவர்களும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். தூத்துக்குடி வழக்கறிஞர்கள் சங்கத்தினரும் உண்ணாவிரதத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர். ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றிலும் உள்ள கிராமப் பகுதியில், நள்ளிரவில் காவல்துறையினரின் கைது நடவடிக்கை தொடர்கிறது என்பதால், மடத்தூர் கிராமப் பகுதியைச் சேர்ந்த பெண்கள், குழந்தைகளுடன் ஊர்க்கோயில் முன்பு கூட்டாக இரவில் தங்கினர். 

இதுகுறித்துப் பேசிய அப்பகுதியைச் சேர்ந்த  பெண்கள்,  ``ஊருக்குள் போலீஸார் திடீர் திடீரென வேன்களில் வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டதாகவும், விசாரணைக்கு வரும்படியும் வீடுகளில் புகுந்து ஆண்களை இழுத்துச்செல்கின்றனர். நள்ளிரவில் திடீரென வீட்டுக் கதவுகளைத் தட்டுவதால் குழந்தைகளும் முதியவர்களும் பயப்படுகிறார்கள். இரவில் வீடுகளில் தங்கவே பயமாக இருக்கிறது. 

எனவே, ஊரில் உள்ள பெண்கள், குழந்தைகளுடன் கோயில் முன்பாக இரண்டாவது நாளாக இரவில் நிம்மதியாக உறங்குகிறோம். இது போன்ற  கைது நடவடிக்கையை அரசு  தடுக்க வேண்டும். இதேபோல எத்தனை நாள்தான் பதற்றத்துடன் இருப்பது?" எனப் பெண்கள் கண்ணீர் மல்கக் கூறினர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!